Friday, February 25, 2011

கொதி நிலை - பாகம் 1

நண்பர்களே..

இந்தப் பதிவு குறைந்தது பத்து பாகங்களாவது போகும். பொறுமை உள்ளவர்கள் வரலாம்.

மனதில் கருத்துக்கள் சிதறல்களாகவே தோன்றுகின்றன. மறப்பதற்கு முன் எழுதுவதே உத்தமம். சரியாகக் கோர்த்துப் படித்துக் கொள்ளவும்.

நான் இப்போது இருப்பது ஜெர்மனியில். பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் தான் முதலில் வேடிக்கை பார்த்தேன். இப்போது கொஞ்சம் பண்பட்ட பார்வை. நான் எழுதும்போது சிலபேர் வெளியூரைப் பார்த்ததும் நம்மூரைக் குறை சொல்கிறான் என்று நினைத்தாலும் நினைக்கலாம். இது உள்மன ஆதங்கமல்லாமல் வேர்வரை அலசிப் பார்க்கப் போகும் பதிவு.

ஜெர்மனி ஏன் இப்படி உள்ளது?? 1800 களில் நடந்த நாடுபிடி விளையாட்டாகட்டும், அதற்கப்புறம் நடந்த உலகப் போர்களில் நடத்திய களேபரமாகட்டும், அமேரிக்கா போன்ற கொடுங்கோல் வல்லரசுகளுக்கே கெட்ட கனவாகத் திகழ்ந்துள்ள ஒரு குட்டி நாடு ஜெர்மனி. அது எப்படி இவ்வளவு பலத்துடன் திகழ்கிறது?? அதெல்லாம் நமக்கெதற்கு.. சும்மா வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, ஊரைச் சுற்றிப் புகைப்படம் எடுத்தோமா, பொருள் வாங்கினோமா, ஊர் திரும்பினோமா என்று 'னோமா', 'னோமா' வோடு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை இந்தப் பதிவிடச் செய்தது இரண்டு விஷயங்கள்.

ஒன்று: இந்த ஊர் எப்படி இவ்வளவு சுத்தமாக, நல்ல பராமரிப்புடன் அழகாக உள்ளது என்று எப்போதும் மனதுக்குள் தோன்றும்.காலையில் அவசர கதியில் பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் ஒரு எண்பது வயது முதியவர் பேருந்து நிலையத்தை நோக்கி மெல்ல நடை போட்டுக் கொண்டு இருந்தார். சட்டென்று நின்றவர், கீழே கிடந்த சிறு தாளைக் கையில் எடுத்தார். மெதுவாக நடந்து போய் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் காகிதம் போடுவதற்கான தொட்டியில் போட்டு விட்டு அதே மெல்ல நடையோடு அங்கிருந்து போய் விட்டார். அதிகம் ஆட்கள் நடமாடும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இரண்டும் ஒன்று சேரும் ஒரு பரபரப்பான பகுதி, பளிங்கு போல் காட்சி தந்ததற்கான அர்த்தம் புரிந்தது.

இரண்டு: "ஷாங்காய் நகரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கியா பிரகாஷ்..? அந்த மாறி ஒரு நகரை இன்னும் பத்து வருஷம் மெனக்கேட்டாலும் இந்தியாவால் உருவாக்க முடியாது. அத்தன அருமையான வடிவமைப்பு". கூட வந்த நண்பரின் கூற்று.

ஏன்?

ஏன்??

ஏன்???

ஜெர்மனியின் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கே. ஆனாலும் ஜெர்மனியின் பொருளாதாரக் கட்டமைப்பை மொத்த இந்தியா சேர்ந்தாலும் தூர நின்று அண்ணாந்து பார்க்க மட்டுமே முடியும். அத்தனை நிறுவனங்கள், அத்தனை முதலீடுகள், அத்தனை கட்டுக்கோப்பு. (ஆனால் மொத்த உலகமும் இப்போது ஒரு விஷயத்துக்காக இந்தியாவைத் திரும்பிப் பார்க்கிறது.. எதற்கு என்று உங்களுக்கே தெரியும். உலகமே ஒரே அலைவரிசையில் தானே..)

எனக்குத் தெரிந்து ஜெர்மனி.. தெரியாமல் இன்னும் எத்தனையோ நாடுகள் இதை விட பலம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

"ஐரோப்பாவில் பல நாடுகள் மற்றும் சீனா போன்றவை தொழிநுட்பத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளன. நமது நாட்டை எளிதில் வீழ்த்தி விட முடியும். நம்மிடம் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நல்ல அரசியலும் கை கோர்த்தால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். உள்சண்டை வெளிநாட்டானுக்குக் கொண்டாட்டம்." இதுவும் நண்பர் கூற்றே. சில்லென்று எங்கோ உறைத்தது.

திருத்தப் பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பலபேர்க்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருப்பதில் பயனுமில்லை.

"Don't be a part of the question. Be a part of the solution" என் அண்ணன் சொன்னது.

நம்ம ஊரில் எல்லோரும் அரசியலைக் குறை சொல்லுவோம்(அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.) ஆனால் ஏன் நீங்க அரசியலுக்கு வரலாமே என்று கேட்டால், நம்மில் அரசியலாளர்களைத் திட்டும் பலரும் யோசிப்பார்கள்.

உண்மையில் நாம் அரசியலை தூர நின்று கொண்டு தான் பார்க்கிறோம். அருகில் நண்பர்களிடம் பேசுபவர்கள், தெருவில் கூடிப் புலம்புபவர்கள், மெயில்களில் பதிலனுப்புபவர்கள், ப்ளாக் எழுதி அரசியலாளர்களைக் கலாய்ப்பவர்கள் என அனைவரையும் இதற்குள் அடைத்து விடலாம்..

ஆனால் மாற்றவே முடியாதா..? எதற்கும் தீர அலசலாமே.. எல்லாவற்றிற்கும் பதில் நம்மிடமே உள்ளது.

முதலில் இந்தக் காணொளியைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=8nDvbBn_0zM&feature=player_embedded

இபோது பின்வரும் ஒரு சூழ்நிலையை யோசித்துப் பார்த்தேன். முடிந்தால் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

"மச்சான், நான் போக்குவரத்துத் துறை அமைச்சராகீட்டேன்.. அந்த இத்துப் போன தகர டப்பா வண்டியை எல்லாம் காயலாங்கடைக்குப் போட்டுட்டு, புதுசா பேருந்துகள் வாங்கச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். நம்ம சீனியர் தான மத்தியில இருக்கார்.. உடனே ஒப்புதல் அளிச்சு நிதியும் ஒதுக்கீட்டாரு. கல்லூரி மேடைகள்ள பேசும்போது அவரை சும்மான்னு நெனச்சேன்.. சொன்னத செய்யராருப்பா. அவருக்கென்ன, பிரதமரா இருக்கறது அவரோட சீனியரு. அவங்களுக்கும் காலேஜு காலத்துல இருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. அட நம்ம எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் ரவி.. அமைச்சரானதுக்கு அப்புறம் அசத்தறாம்பா.. ஒரு மேகாவாட்டுக்கு மேல மின் உபயோகம் பண்றவன் எவனா இருந்தாலும் சோலார் பொருத்தனும்னு ஆடர்.. இல்லைன்னா லைசென்சு கட்டுன்னு போட்டானே ஒரு போடு.. அவனவன் துண்ட காணோம் துணியக் காணோம்னு ஓடிப் பொய் வாங்கி மாட்டீட்டாணுகளே.. இவனுக கிட்ட காசு இல்லாம இல்லப்பா.. எதுக்கு செலவு செய்யணும்னு மதப்பு. வெச்சாம்பாறு ஆப்பு. கரண்டு கட்டு இப்பத்தான் கம்மியாகுது.. விவசாயத்துக்கு இப்ப அதிக மின்சாரம் கெடைக்குதப்பா.. எங்க அப்பா கூட அவன மனசார வாழ்த்தனாரு. ஆமா நீயும் நெறைய கனவுகளோட இருந்தியேடா... இன்னுமா அரசியலுக்கு வரலை..?? சும்மா வாடா... நாங்க இருக்கோம்.. நெனச்ச சாதிக்க வெப்போம்.."

இப்படி ஒரு சூழல் அமைந்தால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா...??

நமது நாட்டின் சரித்திரத் தவறுகளில் இருந்து, உள்கட்டமைப்பு, அரசியல், இளைஞர்கள், கல்வி என்று அனைத்தையும் துல்லியமாக அலசலாம் அடுத்த பகுதியில் இருந்து.

அப்புறம் தலைப்பைப் பற்றி யாருக்கும் விளக்கம் தேவையில்லை என்று நம்புகிறேன்.

இது என்னுடைய பார்வை. பொதுவான கருத்துக்கள். அதனால் காரசாரமான எதிர்விவாதங்களை அன்புடன் ஆவலுடன் வரவேற்கிறேன்.

சாமக்கோடங்கி

Monday, February 21, 2011

எல்லோருக்கும் நன்றிங்கண்ணா..

இளங்கோ said...

பொழுது போகலைன்னா நிறையா எழுதுங்க பாஸ்.

(இது போன பதிவின் பின்னூட்டம்)
---



பொழுது போகலை..

அதான்..

நிறைய நண்பர்கள் இந்த பட்டியலில் நுழையாமல் இருக்கலாம். பட்டியலில் நுழைந்த கொஞ்ச நண்பர்கள் பாதியில் கழண்டும் விட்டிருக்கலாம். எப்படியோ அழுகினி ஆட்டத்தில் ஒரு சதம்.

உங்கள்ள யாராரு எங்க இருக்கீங்கன்னு தெரியல... அதனால கிழக்க பாத்து எல்லாத்துக்கும் ஒரே மூச்சில்... நன்றி.. நன்றி.. நன்றி..

பி.கு: என்ன இளங்கோ.. இன்னும் எங்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கறீங்களா..??

நன்றிகளுடன்..
சாமக்கோடங்கி

Saturday, February 19, 2011

ஒரே ஆறுதல்..

இந்த முறை ஜெர்மனிக்கு தனியாக வந்தேன்..

அலுவலகத்தில் முதல் நாளே அதிக வேலை, கடுப்பான வேலை..கடுப்போ கடுப்பு.. எந்த மக்களுக்கும் நாம் பேசும் பாஷை புரியவில்லை. சாதாரணமாகவே தனியாக இருந்தால் இன்னும் பயம் அதிகரித்து விடும். விரக்தி வந்து விடும். அதே நிலைமையில் தான் நானும் இருந்தேன்..

முற்றிலும் மாறுபட்ட மக்கள், மாறுபட்ட சூழ்நிலை, நமக்கு ஆறுதல் தரும் நம்மூர் விஷயங்கள் ஒன்று கூட இல்லை. அறைக்கு வந்தால் அங்கும் அதே புதிய சூழ்நிலை..

எல்லாமே வித்தியாசமா இருக்கே..நம்ம ஊர் மாறி இங்க ஒண்ணுமே இல்லையா.. கடவுளே..

இந்த நிலைமையில் ஒரே ஆறுதல் தரும் விஷயம்..

ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன்.. ஒரு கிழவி தன்னுடன் ஒரு நாயை உடன் அழைத்து நடைபாதையில் நடந்து கொண்டு இருந்தார்.. அந்த நாய் கரண்ட் கம்பியைப் பார்த்ததும் காலைத் தூக்கியது..

அப்பாடா..



















நன்றி..
சாமக்கோடங்கி

Sunday, February 6, 2011

பாலிதீன்

வணக்கம் நண்பர்களே..

மனிதன் ஒரு கோமாளி தான்..

பாருங்களேன்.. பல ஆண்டுகள் இருக்க வேண்டிய விஷயங்களான வீடுகள், சாலைகள் போன்றவற்றை தரமற்ற பொருட்களால் தயாரிக்கிறான். சாலைகள் இரண்டே வருடங்களில் பல்லைக் காட்டுகின்றன. கொஞ்சம் பலமாக மழை வந்தால் உடனே காணாமல் போய் விடுகின்றன.

ஆனால் சும்மா ஒரு பொருளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தவுடன் வேலை முடிந்து விடும் ஒரு பொருளுக்கு ஆயுளோ ஆயிரம் ஆண்டுகள்.. ஆம் நண்பர்களே பாலிதீன்.

என்ன ஒரு முரண்பாடு பாருங்களேன்.

பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்ப்பீர், முடிந்தவரை மறுசுழற்சி செய்யுங்கள் போன்ற அறிவுரைகள் ஒருபுறம் இருக்கட்டும். மனிதனின் ஒவ்வொரு செயலிலும் அவனது சூழ்நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சூழ்நிலையை நல்லபடியாக உருவாக்கிக் கொடுப்பதில் அரசுக்குப் பெரும்பங்கு உள்ளது.

உதாரணத்திற்கு மனிதன் வாழ மிக அத்தியாவசியமானவைகளான உணவு உடை உறைவிடம் ஆகியவை எல்லாம் விலை ஏறிப்போக, செல்பேசிகள் மட்டும் விலை குறைந்து கொண்டே வருகின்றன. தொலைத்தொடர்புப் புரட்சி என்று கூட வருணிக்கப் படுகின்றது. பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலைக்குறைப்பு செய்கின்றனர். ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு சேவை(?!?!) நிறுவனங்கள் விலைகளை மளமளவென குறைக்கின்றன. இது மட்டும் எப்படி சாத்தியம்..? ஒரு அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இதனைச் செய்து விட முடியுமா..? ஆக ஒரு நாட்டின் வரிவிதிப்பு முறைகளும் ஆட்சித்திறனும் அந்நாட்டை செதுக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது வெளிச்சம்.

செல்போன் என்ற ஒரு பொருள் இல்லாதவரை மனிதன் வாழவே செய்தான். இன்று அது ஒரு அத்தியாவசியமான பொருள் ஆகிவிட்டது(ஆக்கப்பட்டு விட்டது). எங்கே போனாலும் "உங்கள் நம்பர் சொல்லுங்கள்" என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக ஒருவனிடத்தில் செல்பேசி இருந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உருவாகி விட்டது.

அதே போல பாலிதீன் என்ற ஒரு பொருள் உருவாகதவரை மனிதன் மற்ற பொருட்களை உபயோகப் படுத்திக் கொண்டு தான் இருந்தான். பாலிதீன் கண்டுபிடிக்கப் படும்போதே இதை அழிப்பது மிகக் கடினம் என்றும் கண்டுபிடிக்கப் பட்டு விட்டது. அப்படி இருந்தும் முளையிலேயே கிள்ளி எரியாமல் அதன் தயாரிப்புக்கு ஊக்கமளித்தது, சரியான வரி விதிக்காமல் அதனை மலிவு விலைக்கு புழங்கச் செய்தது, மக்களைச் செல்பேசி போல பாலிதீனுக்கு பழக்கப் படுத்தி விட்டது. விளைவு.. நாம் இப்போது அடிமைகளாகி விட்டோம்.. பாலிதீனுக்கும்.

இந்த நிலைமையை மாற்ற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். எப்போது??

தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டிய அதே நேரத்தில், நாம் என்ன தான் உபயோகிப்பதைத் தவிர்த்து விட்டாலும் எங்கோ ஒரு மூலையில் இதனின் தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு போராட்டம் வர வேண்டிய நிலை உள்ளது. வரும்.

இறுதியாக..

நாம் தான் பேராசைப் பட்டோம்.. அனுபவிக்கிறோம். ஆனால் இவைகள் என்ன பாவம் செய்தன..?? நம்மோடு வாழ்வதற்காக இவைகளும் இந்தக் கொடுமையை அனுபவிக்க தான் வேண்டுமா..?

படம்: நான் கொடைக்கானல் சென்றிருந்த பொது க்ளிக்கியது.

மேலும் இளங்கோவின் இந்தப் பதிவே என்னை எழுதத் தூண்டியது.

நன்றி
சாமக்கோடங்கி