Friday, February 26, 2010

நாய்ப்பொழப்பு...




ரொம்ப நாளைக்கு அப்புறம் என் நண்பன் ஒருத்தன பார்த்தேன்.. ஏதோ ஒரு கம்பெனி சாதனங்களுக்கு சர்வீஸ் மேனாக வேலை பார்க்கிறான். தெனமும் கொறஞ்சது ஆறு ஏழு இடங்களுக்கு வண்டியில பறக்கணும்.வேலை எல்லாம் எப்டிடா போகுதுன்னு கேட்டேன்..அவன் சொன்ன பதிலில் இருந்து இந்த இடுகையின் தலைப்பு ஆரம்பமாகுது...

"அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."

எங்க வீட்டுல ஒரு ரெண்டுமாச நாய்க்குட்டி இருக்குது..(பேரு ரெமோ) காலங்காத்தால நேரத்துல எந்திரிச்சிடுவான்.. வீட்டு கேட்ட தொறக்கும்போதேல்லாம், ஏதோ பெரிய வேலை இருக்குற மாறி அவசர அவசரமா வெளியில ஓடுவான். வேடிக்க பார்ப்பான்.. அடுத்த தடவ கேட்ட தொறக்கும் போது அவசர அவசரமா உள்ள ஓடி வருவான். என்னமோ உள்ள பெரிய பிசினஸ் இருக்குறா மாறி.. டைமுக்கு நல்லா வாங்கி கொட்டிக்குவான்.. அப்புறம் எதையோ வெட்டி முறிச்சா மாறி தூங்குவான்.. அப்புறம் அடுத்த நாள் காலையில இதே ஜோலி ஆரம்பம்..

இதுதான் உண்மையான நாய்ப்பொழப்பு...

ஆனா நம்ப வாழ்க்கைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன்..

காலைல நேரத்துல எந்திரிக்க வேண்டியது.. கொஞ்ச நேரம் மச மசன்னு யோசிக்க வேண்டியது..அப்புறமா கீ குடுத்த பொம்ம மாறி(இப்பெல்லாம் கீ குடுக்குற பொம்ம எங்க இருக்கு.. எல்லாம் பாட்டரி மாட்டுன பொம்மைகள் தான்..)அங்குட்டும் இங்குட்டும் ஓட வேண்டியது.. அப்புறமா தண்ணி சூடு பண்ணி-பல்லு வெளக்கி-குளிச்சு-துணி அயன் பண்ணி-பர்சு,சீப்பு,ஐடி கார்டு சகிதங்களை எடுத்து-அவசர அவசரமா ஷூ மாட்டி- ஓட்டமும் நடையுமா பஸ் ஸ்டாண்டுக்கு போய்-பஸ்ல தொத்தி-நசிஞ்சு போய் எறங்கி-கம்பெனிக்குப் போய்-ஏசி காத்துல உக்காந்து கம்ப்யுட்டர தட்டி-டீ ப்ரேக்-லஞ்ச் ப்ரேக்-பிரெண்ட்ஸ் கூட அரட்டை-சாயங்காலம் கெளம்ப வேண்டியது- அதே பஸ் சகிதங்கள் ரிவர்ஸில்-மப்டிக்கு மாறி சாப்புட்டு தூங்க வேண்டியது...

அடுத்த நாள் இதே வேலை...

சனி ஞாயிறு சொல்லவே தேவை இல்லை.. ரெமொவாச்சும் அப்ப அப்ப எந்திரிச்சு வெளிய போயிட்டு வருவான்.. முழிச்சிருக்கும்போது சுருசுருப்பாத்தான் இருப்பான்.. ஆனா நாமளோ கட்டில்லையே படுத்துட்டு, டிவி ரிமோட்ட கையில வெச்சிட்டு அந்த நாள் முழுசா அப்படியே போகும்..

உண்மையா நெனச்சுப் பாத்தா நம்ம பொழப்ப விட நாய்ப் பொழப்பு தேவலைன்னுதான் தோணுது.. ரெமோ சந்தோஷாமாத்தான் அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தீட்டுத் திரியறான்.. ஆனா நாம சந்தோஷமா இருக்கோமா..?

இப்படியே இதே மாறி நாம சுத்திகிட்டு இருந்தோம்னா நம்ம மண்ட நெசமா மழுங்கித்தான் போகும்.. அப்புறமா நம்ம புள்ளைங்க இதையேதான் செய்யப் போகுது..

ஆனா இத கொஞ்சம் நாம மாத்திகலாமொன்னு யோசிக்கும் போது பிறந்த ஐடியாக்கள்..

சிலவற்றை நான் செய்தும் பார்த்து விட்டேன்..

நம்மள சுத்தி இருக்குற எல்லா இடங்களிலும் நம்மள புத்துணர்வா வெச்சிருக்கிற பல விஷயங்கள் இருக்கு.. அத சரியா பயன்படுத்திக்கிட்டாலே, நம்மளோட அந்த நாள் வெறும் சரா சரி நாளாக இல்லாமல் கொஞ்சம் விருவிருப்பானதா வித்தியாசமானதா இருக்கும். நம்ம கொழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்..அவங்களோட திறமைகள கண்டுபிடிக்கவும் வசதியா இருக்கும்.(ஒரு லட்சியம் அமையும் போது அங்கே தவறான வழிகளில் மனம் செல்வது தவிர்க்கப் படும் என்று நம் முன்னைய இடுகையில் பார்த்தோம் அல்லவா..)

ஐடியா 1:

எப்பப் பார்த்தாலும் ஒரே பஸ் ஸ்டாண்டுல தானே இறங்குறோம்.. ஒரு நாள் ஒரு ஸ்டாப்பிங் தள்ளி எறங்கி நடந்து பாப்போமே..இல்லாட்டி ஒரு ஸ்டாப்பிங் முன்னாடி இறங்கலாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கத் தானே போறோம்..? ஒரு அரை மணி நேரம் தள்ளி வந்தா என்ன ஆயிடப்போகுது...? ஆனா காலைல இத முயற்சி பண்ணினா அன்னைத்த வேலைக்கு ஆப்பு தான்..
நான் ட்ரை பண்ணிப் பார்த்தேன்... (அட காலைல இல்லப்பா, சாயங்காலம் தான்..) நல்லா தான் இருந்துச்சு..கொஞ்சம் சாயங்கால காத்துல மொள்ளமா சுத்தி முத்தி வேடிக்க பாத்துக்கிட்டே.. வீடு வரைக்கும்... டெய்லி முயற்சி பண்ண முடியல.. ஆனா வாரத்துல ஒரு தடவையாவது முன்னாடி ஸ்டாப்ல எறங்கி நடப்பேன்.. என்ன பண்றது நம்ம லைப்ல இப்டித்தான் கொஞ்சம் வித்தியாசம் கொண்டு வர முடியும்.

ஐடியா 2:

டைம் கிடைக்கும்போது...நம்மள சுத்தி இருக்குற பொருட்கள உத்துப் பார்ப்பது.. அது தாம்ப்பா.. கூர்ந்து கவனிப்பது... அப்டி என்ன இருக்குன்னு கேக்குறீங்களா..?நான் எடுத்த இந்த படங்களைப் பாருங்க.. இது தெனமும் நம்மள சுத்தி இருக்குற விஷயங்கள் தான்...
நான் கொஞ்சம் உத்துப் பார்த்தப்போ கெடச்சுது..






ஐடியா 3:

இது குழந்தைகளுக்காக.. நான் ஏற்கனவே என்னுடைய இருகையில் சொன்னது தான்.. "பினாலஜி ஸ்டடி" அதாவது மரங்களை உற்று கவனிப்பது அப்டீன்னு வெச்சுக்கலாம்..
இதுவும் ஒரு வகையில நம்ம தினசரி வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்கள் மாற்றங்கள் தரும் விஷயங்கள் தான்..

ஐடியா 4:

பக்கத்துல இருக்குற ஏதாவது பகுதிகளுக்கு சும்மா போயிட்டு வருவது.. ஆனா எந்த நோக்கமும் இல்லாமல்.. அப்பதான் நெறைய விஷயங்கள கவனிக்க முடியும்..(சட்னிக்கு தேங்கா வாங்கப் போனதெல்லாம் இந்த கணக்குல வராதுங்கோ..)
நான் கூட மலையேற்றம் போவேன்..

என்னடா போரடிக்கிறேன்னு பாக்குறீங்களா? விஷயம் இல்லாமல் நான் சொல்ல மாட்டேன். என் கம்பெனி கஸ்டமர்கள் ஜெர்மானியர்கள். அவர்களைக் கொஞ்சம் கவனிக்கும் போதும் மற்றும் உடன் வேலை செய்யும் மற்றும் ஜெர்மனி சென்று வந்த நண்பர்கள் சொன்ன சில விஷயங்கள் சில கீழே..

அவர்கள் நுண்மையாக யோசிக்கக் கூடியவர்கள். எதையும் பொறுமையாக அணுகும் தன்மை கொண்டவர்கள். அந்த நாட்டின் படைப்புகள் மிகுந்த தரத்துடன் (உதாரணத்திற்கு போல்க்ஸ்வாகன் காரை எடுத்துக் கொள்ளுங்கள்) இருப்பதற்கு காரணமா இதைச் சொல்லலாம்..

இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை நினைத்தே இந்த இடுகை. நல்லா படிப்பது, பாடுவது போன்ற விஷயங்கள் இதிலிருந்து வித்தியாசப் பட்டது.. இது மிகவும் தேவையானது. (பத்து நிமிஷம் அட்வைஸ் பண்றா மாறி சீன் வந்தாலே தியேட்டர விட்டு தம் அடிக்க வெளிய வந்துடராணுக நம்ம பசங்க.. இது கூட அவங்க பொறுமைக்கும் கூர்ந்து கவனிக்கும் திறனுக்கும் ஒரு எடுத்துக் காட்டு தான். வெளிப்படையாகத் தெரியாது அவ்வளவுதான்).

நம் குழந்தைகளுக்கு இந்த திறனை வளர்க்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்...?

என்ன நண்பர்களே.. கூர்ந்து கவனிப்போமா..?

உங்க கிட்ட ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் இங்கே பகிருங்கள்.. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..

நன்றி..

Wednesday, February 10, 2010

படிக்காதவன்......


அநேகமாக எனக்குத் தெரிந்து நாம் பள்ளியில் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே நமக்கு அறிவுரை தரும் படலம் ஆரம்பிக்குது. தீண்டாமை ஒரு பாவச்செயல், சுத்தம் சோறு போடும்,நேர்மை தவறேல்,அப்படி இப்படீன்னு ஏகப்பட்ட உபதேசங்கள்.. இதத்தான் அடுத்தவனுக்கு உபதேசம்கறது..
துடியலூர் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தேன்.ஒரு பஸ்சுக்கு நூறு பேர் அலைமொதிக்கரத பாத்து இந்த கவர்மேன்ட்ட நொந்துக்கிட்டேன். வேலைக்குப் போயிட்டு வந்த ரெண்டு படிச்ச பசங்க (சுமார் 22 வயசு இருக்கும்)."மாப்ள.. இந்த கவர்மென்ட் காரனுக காசு வாங்கீட்டு என்னடா பன்றாணுக.. மக்களைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. பொறுப்பே இல்ல"ன்னு சொல்லிகிட்டிருந்தான் ஒருத்தன்." ஆஹா, பரவா இல்லையேன்னு நெனைக்கிற சமயத்துல, புளிச்.....சினு என் கால் பக்கத்துல துப்புனான், செவப்பா.. பா_ பராக் போட்டுருந்தன் போல(சென்சார் கட்). கொஞ்சம் லஜ்ஜையாக இருக்கவும் லைட்டா தள்ளி நின்னேன்.நடந்து போய்க்கிட்டு இருந்தவுங்க சில பேர் கவனிச்சதால அதைத் தாண்டிப் போனாங்க. ஆனா கவனிக்காதவங்க அத மிதிச்சிட்டே போனாங்க. "நம்ம கிட்ட வரி வரின்னு வாங்குறாங்க, அத எல்லாத்தையும் அவனுகளே வாயில போட்டுக்குராணுக, நாடு எப்பத்தான் திருந்துமோ...., புளிச்.!!!....." இது இன்னொருத்தன். அட அந்த எளவு எடுத்தவனும் வாயில அதே கருமத்த தான் போட்டுக்கிட்டு இருந்தான்.
அப்ப தான் நெனச்சேன்.. இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு..
மாற்றங்கள் நமக்குள்ள ஆரம்பிக்கனும்னு நான் பல இடங்கள்ல சொல்லி இருக்கேன். இத்தன பேசுனவனுகளுக்கு, பொது இடத்துல அசிங்கம் பண்ணுறது தப்புன்னு தெரியலியே. தன்னோட ஒரு சிறு செயலத் தப்புன்னு உணர முடியாதவன், எப்படி மத்தவங்கள மட்டும் வாய் கூசாம திருந்தச் சொல்றான்.
பஸ்ஸுல ஏறனப்போ முன் சீட்டுல ஒரு வாத்தியார், அவரோட சின்னப் பையனோட உக்கார்ந்திருந்தாரு.பையனுக்கு பிஸ்கட் எல்லாம் குடுத்துட்டு அவன அழாமப் பாத்துக்கிட்டே வந்தாரு.பக்கத்துல இருக்குற ஆளுகிட்ட மேதாவி மாறி உபதேசங்கள்.ரோடு குண்டுங்குழியுமா இருக்குறதைப் பத்தியும், அரசின் இந்த அலட்சியப் போக்கைப் பத்தியும் ஒரு புடி புடிச்சாரு.உண்மைதான்.வெள்ளைக் காரன் போட்ட கான்க்ரீட் ரோட்டோட கிட்ட நிக்க கூட இந்த அரசுக்கு யோக்கியதை இல்ல..போடராணுக, மழை வருது, காணாமப் போகுது,பஞ்சர் போடராணுக, மழை வருது, காணாமப் போகுது.. இதே பொழப்பு. ஒரு நாளைக்கு கொறஞ்சது, நாலஞ்சு ஆம்புலன்சு போகுது.. அத்தினி விபத்து.அப்பெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ரோடு, இப்ப செம்மொழி மாநாடு, தானைத் தலைவர் வர்றார்னு சொன்னவுடனே, கண்ணுக்குப் பட்டுடுச்சு. ஒரு அமைச்சர் என்னடான்னா, மேட்டுப்பாளையம் ரோட்டுகிட்ட நின்னுகிட்டு, "இங்கிருந்து பாத்த, நேரா, பஸ் ஸ்டாண்ட் தெரியணும், சைடு ஆக்கிரமிப்பு எல்லாம் இன்னைக்கே கிளியர் பண்ணனும்,தலைவர் வரும்போது, வண்டி டர்ன் ஆகமா நேர போகனும்"னு சொல்றான்.. என்ன நடக்குது இங்க..அப்படின்னு நெனைச்சு முடிக்கல.. கையில வெச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட ஜன்னல் வழியா வெளிய வீசி எறிஞ்சார். குழந்தைகளுக்கு நன்னடத்தை சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர்.
மறுபடியும் அதே தான் நெனைச்சேன்.."இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு.."

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கிற தவறுகள் தான், பெரிய பூதாகரமாகி பின்னாடி அந்த தப்புகள் நமக்கு உறைக்காமையே போயிடுது.

இதுக்கெல்லாம் காரணம் உணர்தலைத் தூண்டாத நம் அடிமைக் கல்வி. உணர்ச்சி இல்லாத ஜடக் கல்வி.முடித்த பிறகு என்ன செய்வோம் என்று தெரியாது, அனால் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற போட்டியை மட்டும் உண்டு பண்ணும் தண்டக் கல்வி..

என்ன பண்றது, படிக்க வெக்கிரவனும் கஷ்டப் பட்டு காசு கட்டி ஸ்கூல்ல சேத்துறான். வேலைக்கு வரறவனும், அன்றாடம் பல பிரச்சனைகளைச் சுமந்துட்டு, வேண்டா வெறுப்பா பாடம் சொல்லித் தர்றான். பசங்களும் பாஸ் ஆனாப் போதும்னு படிக்கிறான். சிலதுக முட்டி மோதி மொதல் மார்க்கு வாங்குதுங்க.. இதுவும் ஒரு வியாபாரம்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.இந்த ஏட்டில் இருக்கும் கருத்துக்களும் மக்களுக்கு உதவாதே விட்டது. ஆம் ஏட்டில் இருக்கும் வரை எதுவுமே உதவாது தான். அது சுரைக்காயாக இருந்தாலும் சரி, திருக்குறளாக இருந்தாலும் சரி.

படிக்க வெக்கறத விட உணர வெக்கணும். நாலு தடவ,நீங்க சாப்ட பிஸ்கட் பாக்கெட்ட கொண்டு போய் குப்பத் தொட்டியில போட்டு குழந்தைகளுக்குக் காமிச்சுக் குடுங்க. அதுங்க தானா செய்யும்.தண்ணி நெறையரக்கு முன்னாடியே, பைப்ப க்ளோஸ் பண்ணிக் காட்டுங்க.. குழந்தைங்க கத்துக்கும். குழந்தைங்க முன்னாடி தம் அடிக்கறது..தண்ணி அடிக்கறது.. இதெல்லாம் அவங்கள எங்க கொண்டு போய் விடும்னு யாராச்சும் நெனைச்சுப் பாக்குறாங்களா?

இன்றைய ஸ்கூல் பசங்க... சாயங்காலம் ஆச்சுனா, பங்க கடையல தம்மு.. விடுமுறைகள்ள தண்ணி.. காசு..? அப்பன் பாக்கேட்டுல இருந்து சுட்டது.. இல்ல பொய் சொல்லி வாங்குனது.செல் போனு எங்கிருந்து...? அதுல கொறஞ்சது நாலைஞ்சு பொண்ணுக நம்பர்..(இல்லேன்னா பசங்க மதிக்க மாட்டானுவ).ரீசார்ஜ் பண்றதுக்கு, செலவு பண்றதுக்கு, இதுக்கெல்லாம் ஏது காசு.. தன் ரத்தத்தைக் கேவலம் காசுக்காக விற்று இந்து சுகத்தை அனுபவிக்கிறார்கள், நண்பர்களே.. சொல்லவும் கூசுகிறது, நான் கனவு கண்ட இந்தியா இப்படியா ஆக வேண்டும்...?

இவர்கள் எல்லாம் என்ன படித்தார்கள், என்ன படிக்கிறார்கள், காலை ஒன்பது மணியிலிருந்து தொடங்கி மாலை ஐந்து மணிவரை.(இப்பெல்லாம், காலையில ஏழு மணிக்கே ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பம், சாயங்காலம் எட்டு மணி வரைக்கும் எக்ஸ்ட்ரா கோச்சிங்) ஒரு நாள் முழுசும் அப்படி என்ன தான் சொல்லித் தராணுக,, அப்படி இதுங்களும் என்ன தான் படிச்சுக் கிழிக்குதுங்க..

வாழ்க்கை தறி கேட்டு சின்னா பின்னமான பிறகு இந்த படிப்பு எதுக்கு உதவும்.? வாழும்போதே மனுஷன நல்வழிப் படுத்தணும், இள ரத்ததுலையே அத பாய்ச்ச்சனும்னு தான் இத சின்ன வயசுல சொல்லித் தராணுக.இள வயசு கள்ளம் கபடம் இல்லாதது. மத்தவங்கள எதிர்த்துப் பேசாது(அதிகம் தெரியாததினால), வெளிவிடரதக் காட்டிலும் மூளை அதிகம் கிரகிக்கும்.. அதனால அந்த வயசில பாடத்தைக் காட்டிலும் நன்னடத்தைகள்ள அதிக முக்கியத்துவம் குடுக்கணும்.

ஒரு குழந்தை,அதைச் சுத்தி விளையாடிட்டு இருக்குற சின்ன பூனைக் குட்டிய கழுத்தப் புடிச்சு நேரிக்குது.. அது வலி தாங்க முடியாம துடிக்கும் போது, இந்தக் குழந்தை சிரிக்குது. இந்தக் குழந்தையோட பெற்றோர், அதப் பாத்து ஆனந்தப் படறாங்க.. அது தெரியாத குழந்தை,அதனால சிரிக்குது. இந்த பெரிய மனிதர்களுக்கு எங்கே போனது அறிவு. அது சிரிக்கனும்கரதுகாக,இன்னொரு பச்சைக் குழந்தை(பூனை)அவஸ்தை அனுபவிக்கலாமா? அன்பையும் பண்பையும் குழந்தைகளுக்கு நாம தானே சொல்லிக் கொடுக்கணும்..? அன்பு பரிவு, மனிதாபிமானம், இது தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது..

எத்தனையோ பெற்றோர், குழந்தைகள லீவு நாள்ல பார்க் பீச்சுன்னு கூட்டீடு போறாங்க.. அவங்க சாப்ட்ரதுக்கு அதிகம் கேக்கும் போது செலவு செஞ்சு மனசு நோகறாங்க.. ஊதாரியா வளர்றத நெனைச்சு வருத்தப் படறாங்க..ஆனா எத்தன பெற்றோர் தங்களோட குழந்தைகள ஒரு அநாதை ஆசிரமத்துகோ, ஒரு உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்துக்கோ, ஒரு முதியோர் இல்லத்துக்கோ கூட்டீட்டு போறாங்க..? அங்கெல்லாம் போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப் படறாங்க.. கெடைக்கிற கொஞ்சம் பொருள எப்படிப் பகிர்ந்து சாப்டறாங்க.. இறைவன் அவங்களுக்கு காட்டுற சிறு வெளிச்சத்திலும் அவங்க எப்படி சந்தோஷமா வாழுறாங்க.. அப்படீன்னு புரியும். கை இல்லாம காலால ஒரு குழைந்தை எழுதுரத பாக்கும் போது, அப்பா கிட்ட பாரின் பென் கேக்குற ஆச விட்டுப் போகும். கெடைக்கிற சிறு உணவ அவங்க பகிர்ந்து சாப்பிடும் அழகைப் பாக்கும்போது, தின் பண்டங்கள் கேக்குற ஆச விட்டுப் போகும். வருங்காலம் ஒண்ணு இருக்கோ இல்லையோ, தனக்காக ஒரு சிறு உண்டியல்ல காசு போடும் அந்த பிஞ்சு உள்ளங்களைப் பார்க்கும்போது, ஊதாரித் தனமா செலவு செய்யுறது எவ்வளவு தப்புன்னு தோணும்.தனக்கு ஒரு கால குடுக்கலைன்னாலும் இன்னொரு காலும் ரெண்டு கையும், நல்லா படச்சதுக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் அந்த மனங்களை உணரும்போது, ரெண்டு கை ரெண்டு கால் இருந்தும் நாம ஊனமா வெளங்காம இருப்பது புரியும்.

இந்த மாறி உணர்ந்து வளரும் குழந்தைகள் தான் தனக்கென்று ஒரு பாதைய அமச்சுகிட்டு வீறு நடை போடும். ஒரு லட்சியம் அமையும் போது, அங்க தேவையில்லாம கெட்ட எண்ணங்களுக்கு மனம் போகாது. உணர்ந்து வளரும் போது தான் குழந்தைகள், எ.ஆர். ரஹ்மான் மாதிரியும்,கல்பனா சாவ்லா போலவும், ஏன் அப்துல் கலாம் போலவும் உருவெடுப்பார்கள்.. சும்மா பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பொறுப்பை உணராமல் பேசும் எச்சில் துப்பும் "படித்த" இளைஞர்கள் அங்கே விட்டில் பூச்சிகளாக மறைந்து போவார்கள்..

எவர் கேட்டாலும், இன்ஜினியரிங் படித்துள்ளேன், பத்தாம் வகுப்பு பர்ஸ்ட் கிளாஸ், ப்ளஸ் டூ நூத்துக்கு நூறு என்று சொல்லுகிறோமே.. இப்போது சொல்லுங்கள்.. நம்மில் படித்தவர்கள் எத்தனை பேர்..? படிக்காதவர்கள் எத்தனை பேர்..?

படிக்கும்போது அறிவு வளர்கிறது.. உணரும்போதே மாற்றங்கள் நிகழ்கின்றன...
(ஆஹா இன்னைக்கும் இடுகை பெரிசாயிடுச்சே,. மன்னிச்சிகுங்கப்பா..)
நன்றி.,.