Sunday, January 31, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 5

இந்த பகுதியுடன் கார்பன் சுவடுகள் முடிவடைகிறது.. எனவே சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுங்கள்.உலகின் பல நாடுகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன.. வறுமையின் கோரப் பிடியில் வாழும் லெசோதோ போன்ற நாடுகளே உலகின் நன்மைக்காக தமது பங்கைச் செய்ய ஆயத்தமாகும் போது வேறு என்ன வேண்டும்..? நாமும் சோதியில் இணைய வேண்டியதுதான். செல்வச் செழிப்பில் ஊறித்திளைக்கும் கத்தார் போன்ற நாடுகளும் கல்விக்காக தனது கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. கலை, ஆராய்ச்சி, கல்வி, தீரா சக்தி (சூரிய சக்தி போன்றவை )மற்றும் புதுக் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் அவர்கள் பல்கலைக் கழகங்களை அனுமதித்துள்ளனர்.

லட்சக் கணக்கான NGO(நான் கவர்மேண்டல் ஆர்கனைசேஷன்)கள் தேசங்களின் சுயநல நோக்கை தகர்த்தெறிந்து உளகளாவிய மக்களை ஒன்று திரட்டி அனைத்து மக்களிடையேயும் போது நல நோக்கு உள்ளது என்பதை நிரூபித்த வண்ணம் உள்ளனர்,

அண்டார்டிகாவில் இயற்கை வளங்களை பேணிப் பராமரிக்க நாற்பத்தொன்பது நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள தேசிய பூங்காக்களில்,மனித சக்தியைக் கொண்டு நிலத்தை வளப் படுத்துதல் மற்றும் புதுக் காடுகளை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன..இந்த மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு தான் இனி நம்மைக் காப்பாற்றும்.

நியுயார்க் நகர மக்கள், தங்கள் அருகிலுள்ள காடுகள் மற்றும் ஏரிகளில் இருந்து தான் தங்களின் வாழ்வாதாரமே பூர்த்தி செய்யப் படுகிறது என்பதை உணர்ந்து அதை பேணிக் காக்க முடிவு செய்துள்ளனர்.

தென் கொரியாவில், தேசிய காடுகள் மறு சீரமைப்பு அமைப்பை ஏற்படுத்தி, போர் மற்றும் மனித தேவைகளுக்காக அழிக்கப் பட்ட காடுகளை புதுப்பித்துக் காட்டியுள்ளனர். தற்போது அவர்களின் நாட்டில் 65% நிலப்பரப்பு இயற்கை வளம் மிகுந்த காடுகளாக உருவெடுத்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவது மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. 75% க்கும் மேலான காகிதங்கள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன.

கோஸ்டாரிகா தங்கள் நாட்டின் ராணுவத்தை விட தங்கள் நாட்டின் இயற்கை வளமே முக்கியம் என முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர்கள் நாட்டில் ராணுவமே இல்லை. மாறாக அதில் செலவிடும் பணத்தை, தம் குழந்தைகளின் கல்விக்கும், சுற்றுலாத் துறைக்கும் மற்றும் தங்களின் பிரதான காடுகளை பாதுகாப்பதிலும் பயன் படுத்துகின்றனர்.
அங்கே ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வனப் பாதுகாப்பு சட்டங்கள் கட்டாயமாக்கப் பட்டு கடுமையாகப் பின்பற்றப் படுகின்றன.

"போர்க்களம் வெறுத்து விடு.. அங்கே பூச்செடி வைத்து விடு.. அணுகுண்டு அத்தனையும் கொண்டு பசிபிக் கடலில் கொட்டி விடு"
என்னும் கவிப் பேரரசின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.. கவிஞன் கனவு பலிக்கத்தொடங்கி விட்டது. மனித நேயம் உடைய நாடுகள் அந்த நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்க வேண்டும்.

வர்த்தகம் நேர்மையான முறையில் நடந்து எல்லோரும் வளம் பெற்று வாழும் நிலை ஏற்படும் போது அனைத்து மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது..அங்கே அதிகமாக சம்பாரிக்கத் தூண்டும் முதலாளித்துவம் மற்றும் பேராசை பொடிபடுகிறது.ஆம்.. இயந்திரங்களைக் கொண்டு லட்சக் கணக்கான ஏக்கர்களில் அறுவடை செய்யும் முதலாளி, கைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் சிறு விவசாயிகள், இவர்களுக்கிடையே என்ன சமநிலை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்..

நாம் பொறுப்புள்ள நுகர்வோராகச் செயல்பட்டால் இந்த நிலை மாறும்.நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமது இந்த கடமையை உணர வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்கள், ஆடம்பர விளம்பரம் செய்து மக்களை முட்டாள்களாக்கி விற்கப்படும் பொருட்களைக் குறைத்து, சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்கள், உள்ளூரில் செய்யப் பட்ட கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழிலில் உற்பத்தியாகும் பொருட்கள் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் ..

உங்களுக்குத் தெரியுமா...? இப்போது உள்ள விவசாய நிலங்களைக் கொண்டே, இந்த கிரகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வயிறார சோறு போட முடியும். ஆனால்,மாமிசத்திற்காக கோடிக்கணக்கில் வளர்த்தப் படும் மிருகங்களின் தீவனத்திற்காக மற்றும் பயோ எரிபொருளுக்காக இவை பயன்படுத்தப் படுவதால் தான் கடைக்கோடி குடிமகனின் வாய்க்கு ஒரு கை சோறு கிடைப்பதில்லை.

குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததிகளை மாமிச உண்ணிகளாக வளர்க்கக் கூடாது.மாமிசத்தின் சுவைக்குப் பழகி விட்டவர்கள் அதைக் குறைக்க மாற்று உணவுகளைக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் தான்.. ஆனால் குழந்தைகளைப் பழக்குவது எளிது. சைவ உணவுகளிலேயே எல்லா சத்தும் சுவையும் நிரம்பி உள்ளது என்பது நிரூபணமான ஒன்று.
கடலில் மீன் பிடிப்பவர்கள், கடலின் செல்வத்தை அழிக்காமல் தொழில் செய்ய வேண்டும்.

ஜெர்மனி'யில் உள்ள பையர்பாக் என்ற இடத்தில், 5000 மக்கள் உலகின் முதல் eco-freindly மாவட்டத்தை அமைத்துக் காட்டி உள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும் சூரிய ஒளி மூலம் அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர்.

நாம் உபயோகப் படுத்தும் சக்திகளில் 80% பூமியிலிருந்து எடுக்கப் படுபவை தான்.
சீனாவில் மட்டும் வாரத்திற்கு இரண்டு அனல் மின் நிலையங்கள் உருவாக்கப் படுகின்றன. அதே நேரத்தில் டென்மார்க்கில் அனல் மின் நிலையத்தில் உருவாகும் கார்பனை காற்றில் கலக்காமல் மண்ணில் மக்கச் செய்யும் உக்தியை கையாளத்தொடங்கியுள்ளனர்.

ஐஸ்லாந்தில் பூமியின் அடி சூட்டைக்கொண்டு மின்சாரம் எடுக்கின்றனர். கடலின் அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கின்றனர்.
கடலெங்கிலும் காற்றாடி வயல்கள் உருவாக்கப் பட்டு அவர்கள் நாட்டின் மின்சாரத்தில் 20%ஐ காற்றின் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தான் இந்த மறுசுழற்சி செய்யகூடிய சக்திகளில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

சூரிய வெப்பம், பூமியின் அனைத்துப் பகுதிகளையும் தாளித்துக் கொண்டு இருக்கிறது. உலகமக்கள் அனைவரும் ஒரு வருடம் உபயோகப் படுத்தும்
சக்தியின் அதே அளவை, ஒரு மணி நேரத்தில் சூரியன் நமக்கு அளிக்கிறான் என்றால் நம்புகிறீர்களா?

ஆம் நண்பர்களே.. இனி மேலும் கீழேயே பார்த்து நடப்பதை விட்டு மேலே பார்போம். அங்கேயும் உள்ளது.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்து விட்டது.

இன்னும் நம்மிடம் 50% காடுகள் உள்ளன.எண்ணற்ற இயற்கை வளங்கள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பனிப்பாறைகள் என இன்னும் நம்மிடம் கொஞ்சம் மிச்சம் உள்ளன..

துபாய் போன்ற பணக்கார நாடுகளிடம் என்ன இருக்கிறது? வெறும் எண்ணெய் தான் இருக்கிறது. அதை விற்றே அனைத்தையும் வாங்குகிறான்.அங்கே சுட்டெரிக்கும், வெயில் இருக்கிறது, ஆனால் ஒரு சூரிய ஒளி பேணல்(solar panel) கூட அங்கே இல்லை.மற்ற நாடுகள் அனைத்தும், உள்ளூரில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்று நாட்டை வளப் படுத்த நினைக்காமல், அதிக லாபத்திற்காக அவனிடம் நாட்டை அடகு வைக்கின்றனர்.
அதனை நிறுத்தி இது போன்ற நாடுகளின் இந்த சுயநலப் போக்கிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளிருந்து வர வேண்டும், அதை வெளியே எதிர் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ அடிப்படைத் தேவை கல்வியறிவு மற்றும் பொது சிந்தனை அவ்வளவே(எல்லார்க்கும் எல்லாமும்).

இந்த சிந்தனையுடன் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நோக்குங்கள்.. நாம் செய்ய வேண்டிய மறுமலர்ச்சி நமக்கே விளங்கும்.
இதை தான், நம்முடைய சுற்றம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டும்.

எப்படியெல்லாம் இந்த மாற்றத்தைச் செயல்முறைப் படுத்தலாம் என்று நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே....

கார்பன் சுவடுகள் முற்றுப் பெறுகிறது...

Friday, January 29, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 4

நண்பர்களே..
இந்த இயற்கைச் சீரழிவின் பின்னணியில் பல்வேறு பேராசை பிடித்த நாடுகள் செயல் படுவதையும் மற்றும் லாபம் மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் உள்ளன என்றும் கார்பன் சுவடுகள் பாகம்-மூன்றின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.
மிக விளக்கமாக அறிய "செங்கொடியின் சிறகுகள்" இட்ட பதிவான "ஒரு மணி நேரம் விளக்கனைத்தல் புவி வெப்பமாவதைத் தடுக்குமா?' என்ற தமிழ் மணம் விருது பெற்ற பதிவினைப் பாருங்கள்.. சரி நண்பர்களே,, இனி நம்முடைய பயணத்தைத் தொடருவோம்.. இதற்கு முன் வந்த மூன்று பாகங்கள் சற்று மென்மையானவை.ஆனால் இனி வருபவை அப்படி இருக்காது..

www.goodplanet.org இந்த இணையதளத்தை நடத்தும் சமூகத் தொண்டு நிறுவனம் நெறைய விஷயங்கள ஆராய்ஞ்சு வெளியிட்டிருகாங்க. நான் அந்த நிறுவனத்துக்கு ஈ-மெயில் பண்ணி இந்த விஷயங்கள கேட்டேன். அவங்க என் விலாசத்துக்கு "ஹோம்"(home)னு ஒரு டிவிடி அனுபிச்சு வெச்சாங்க.. எல்லாரும் பாக்க வேண்டிய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். அதுல வர்ற ஒவ்வொரு பிரேம்'ஐயும் நம்ம டெஸ்க்டாப் ஸ்க்ரீன் சேவரா வெக்கலாம். நாம எடுதுக்கிட்டிருக்கிற இந்த விஷயங்கள சூப்பரா காட்டியிருக்காங்க..

உலகத்துல இன்னும் பல நாடுகள்ல குளோபல் வார்மிங் இருக்கிறதையே நம்ப மாடேன்றாணுக. அட ஏம்ப்பா, நம்ம ஊர்லே, பள்ளிக் கூடத்துக்கு வெளியில பொட்டிக்கட வெச்சிருக்கிற குப்பன், டாஸ்மாக் கடையில ஊத்திக் கொடுக்குற சுப்பன் இவங்களை எல்லாம் கேட்டுப் பாருங்க... கெட்ட கெட்ட வார்த்தையா வந்து விழும். பீப் சவுண்டு குடுத்து மறச்சுக்க வேண்டியது தான்..


இத கேளுங்க.. கிளிமஞ்சாரோ'ன்னு ஒரு பெரிய மலை அப்ரிகால இருக்கு.. அத இப்ப அவிங்க ஊர்க்கார பய புள்ளிகளாலயே அடையாளம் கண்டுக்க முடியலியாம். 80% பனிஅடுக்குகள் (க்லாசியர்ஸ்) காணாமப் போச்சாம். அதனால வெய்யக் காலங்கள்ல ஆத்துல தண்ணியே காணமாம். வீட்டுல இருந்து ஒரு பவுனு காணாம போனா வாயிலயும் வவுத்தலயும் அடிச்சுக்கரமே, 80% க்லாசியர்ஸ் நண்பர்களே..அவங்க ஊரா இருந்த என்ன நம்ம ஊரா இருந்த என்ன, நம்ம தாய் பூமி தானே..?

உலகத்துல எங்கயுமே இல்லாத ஒரு அதிசயம் சைபீரியா'ல இருக்கு. அங்க இருக்குற காடுகள்ள தரைப் பகுதி கண்ணுக்கே தெரியாத மாறி, ஒரே பனி மூட்டமா இருக்கும். அத "பெர்மா பிராஸ்ட்" அப்படீன்னு சொல்வாங்க..

அதுக்கு அடியில தான் ஆப்பு ஒளிஞ்சு இருக்கு. அதுக்குள்ள மெதேன் ங்கற கிரீன் ஹௌஸ் வாயு இருக்கு. இந்த மெதேன் பயபுள்ள நம்ம கமிவா'வ விட இருபது மடங்கு கோபக் காரணாம். இந்த வெப்பமயமாதல் விளைவுனால இந்த பெர்மா பிராஸ்ட் உருக ஆரம்பிசிடுச்சுன்னா, என்ன நடக்குமுன்னு கணிக்கவே முடியலியாம்.

இந்த அமைப்ப நாம தான் உருவாக்கனோம். நாம சாப்டற சாப்பாட்டுல இருந்து குடிக்கிற தண்ணி, வாழுற பூமி, நம்ம சுத்தி இருக்குற உயிரினங்கள் இவை எல்லாத்துக்கும் எடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு(அதாம்ப்பா பாண்ட்) இருக்கு. அதத்தான், "ஷஹேலு"ன்னு காமரோன் அவதார்'ல சொன்னாரு.. நம்ம மரமண்டைகளுக்குஒரைக்கிற மாறி.. (மரமண்டைகள் அல்லாதவர்கள் மன்னிக்கவும்)

ஆனா சமீபமா நாம அத ஒடைச்சிட்டோம்..

வாங்க அத ஒட்ட வெப்போம். இனியும் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருக்குறதுல பயன் இல்லை..

மொதல்ல நமக்குத் தெரிஞ்ச விஷயங்கள நாம நம்பணும்.

நாம இப்ப அனுபவிக்கிற விளைவுகள் எல்லாம் நாம நேத்து செஞ்ச ஆப்புகள் தான்.. நாம நம்ம இஷ்டத்துக்கு நம்ம பூமிய செதுக்கீட்டோம்.. நமக்கு இன்னும் கொஞ்ச அவகாசம் தான் இருக்கு..

நாம செய்யப் போற சிறு சிறு நல்ல காரியங்கள செய்யாம உட்டுட்டா இந்த பூமி வரப்போற நூற்றாண்டுல எப்புடி தொண்ணூறு கோடி மக்களோட சுமையைத் தாங்கப் போகுது, ..?

இத எங்க அம்மா அப்பா அப்புறம் வயசானவங்க கிட்ட சொன்னா என்ன ரியாக்ஷன் இருக்கும்.. நீங்களே சொல்லுங்க.. அதனால தான் சொல்றேன் நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு நாம சொல்லித்தரோனும். அட வாழ்ந்து காட்டணும். அதுக்கு நமக்கு பல விஷயங்கள் தெளிவாகணும். கீழ வர்ற விஷயங்கள் மொதல்ல நம்ம புத்திக்கு, அப்புறம் உபதேசம் பண்றதுக்கு.. ஓகே...?!

உலகத்துல இருக்குற 80% வளங்களை எல்லாம் வெறும் 20% மக்கள் தான் உபயோகப் படுத்துறாங்க.. அட பத்து வீட்டு சாப்பாட்ட ஒருத்தன் உக்காந்து சாப்டா மத்தவணுக எங்க போறது..?

உலக நாடுகள் எல்லாம் நான் பெரியவனா, நீ பெரியவான்னு காமிக்கரதுக்காக, தங்களோட நாட்டுக்குச் செலவு பன்றத விட பன்னிரண்டு மடங்கு அதிகமா தங்களோட ராணுவத்துக்கு செலவு பண்றாங்க.. வளங்கள் எப்படி வீணாகுதுன்னு பாருங்க மக்களே..

குடிக்க சுகாதாரமான தண்ணி கெடைக்காம உலகத்துல தெனமும் சாகரவங்க எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஐயாயிரம் பேர்..

சுமார் நூறு கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணி கெடைக்கரதில்லை.

நூறு கோடி மக்கள் பசி பட்டினியால வாடப் போறாங்க .. வாடப் போறோம்.. வெளைச்சல் இல்லாதப்ப பணத்தையா தின்ன முடியும்...?

பூமியில விளைவிக்கிற தனியங்கள்ள 50% ற்கும் மேல பயோ எரிபொருளுக்கும், அப்புறம், மாமிசத்துக்காக வளர்க்குற கால நடைங்களுக்கும் தான் போய்ச் சேருது.. ஆடு மாடுகள், மேய்ச்சல் நிலங்கள் இல்லாத பெரிய பெரிய நகரங்களுக்கும் மாமிசங்கள் டின்'னுல அடைக்கப் பட்டு கொண்டு போகப் படுதே.. அது இப்படித்தான்..

40% க்கும் மேலான விவசாய நிலங்கள் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு... மண்ணுல சத்து இல்ல..

ஒவ்வொரு வருஷமும் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காணாம போய்க்கிட்டிருக்கு.. கேட்டாலே வயிறு எரியுது...

நாலுல ஒரு பங்கு மிருகங்கள், எட்டுல ஒரு பங்கு பறவைகள், மூணுல ஒரு பங்கு பல்லி மாறி சிறு உயிரினங்கள் வாழ முடியாத நிலைமை உருவாகியிருக்கு..

உயிரினங்கள் சாகுற விகிதாச்சாரம், முன் எப்போதும் இல்லாமல் ஆயிரம் மடங்கு அதிகமா இருக்கு..உலகத்துல முக்கால் பங்கு மீன்பிடிப்பு பகுதிகள் ஆல்ரெடி அழிஞ்சாச்சு..

கடந்த 15 வருஷமா கணக்கெடுத்த வெப்ப நிலை தான் பூமியில இதுவரை ரெகார்ட் செஞ்ச வெப்ப நிலையிலியே அதிகமாம்..

40 வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட பனிப்பாறைகள் 40% குறைஞ்சிடிச்சாம்..

இதே நிலை நீடிச்சிசுன்னா, 2050ல (பூமி அழியாம இருந்துச்சுன்னா), இருபது கோடி மக்கள் காலநிலை அகதிகளா இருப்போம் (climate refugees).



நாம பண்ற விஷயங்களோட விலை ரொம்ப அதிகம், பாவம் அதனால, உலகத்துல எங்கயோ வாழுற அப்பாவி மக்கள் அந்த விலையைக் குடுத்து அகதிகளா மாறிக்கிட்டு இருக்காங்க.. பாலைவனங்கள்ள உருவாகியிருக்கிற லட்சக் கணக்கான அகதிகள் முகாம்கள் தான் இதற்க்கு சாட்சி..

பேராசை பிடித்த நாடுகள், சரித்திரத்துல இடம் பெறனும்ங்கறதுக்காக செவுத்தக் கட்டி, பிரிவினை செஞ்சு, பல மக்களை துன்பத்துல ஆழ்த்தி, அதன் மூலம் கொஞ்சம் மக்கள் சந்தோஷத்தைப் பாது காக்கறாங்க..

இன்னும் வெட்டிப் பேச்சு பேசிப் பிரயோசனம் இல்ல.. ஒரு தனி மனிதனால அந்த செவுத்த ஒடச்சு சுக்கு நூறா ஆக்க முடியுமா...? முடியும் நண்பர்களே..

இருபதே வருடங்களில் இத்தன களேபரங்கள் பண்ணி வெச்ச நமக்கு இத சரி பண்றது என்ன பெரிய மேட்டர்...?

அதற்க்கு சில உதாரங்கள இப்ப பாப்போம்.. ஒரு பெரு மூச்சு விட்டுகோங்க...

லெசோதோ ங்கற நாடு உலகத்துலேயே மிக மோசமான வறுமை நாடுகள் பட்டியல்ல இருக்கு, அவங்க இப்ப அதிக அளவு பணத்த தங்களோட நாட்டு குழந்தைங்க படிப்புக்காக செலவு பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.. விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..

ச்சே.. கொஞ்சம் எழுத ஆரம்பிச்சாலே பதிவு லெந்த் ஆயிடுது.. அடுத்த பதிவுல கண்டினியு பண்றேன்.. இப்ப கை வலிக்கல..

Sunday, January 24, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 3


வணக்கம்..
கடந்த ரெண்டு பகுதிகள்ல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால உருவாகுது அப்படிங்கற சமாச்சாரங்கள் எல்லாம் பார்த்தோம்..இந்த பகுதியில கார்பன் சுவடுகள் ஏற்படுத்துற வெப்ப உயர்வால என்ன நடக்குதுன்னு பாப்போம்..
வேலில போற ஓணான வேட்டிகுள்ள வுட்டுட்டு இப்ப வேணா வேணா'ன்னா வுட்டுடுமா...?

ஆப்பு1:
மொதல்ல இந்த ஓவர் சூட்டுனால நம்ம எல்லாரும் டைரக்டா பாதிக்கப் பாடறோம். குறிப்பா நம்ம பெருசுங்க எல்லாரும் heat stroke அப்படிங்கற வியாதிக்கு ஆளாகிறாங்க. பெருசுங்க தானே போனா போகட்டுமுன்னு நெனைக்கிற இளசுகள் எல்லாரும் நாளைக்கு பெருசுகள் தான்..

ஆப்பு2:
இந்த வெப்ப உயர்வுனால இந்த புயல், சூறாவளி இவங்கெல்லாம் வீடு தேடி வர்றதுக்கு நாமளே வழி பண்ணிட்டோம். சாதாரணமாவே இந்த புயல் சூறாவளி இவங்கெல்லாம் கடல்'ல தாம்ப்பா உருவாகுறாங்க. இவங்க வளர்ரதுக்கு பெருசும் உதவியா இருக்கறது கடல்'ல இருந்து கிடைக்கிற சூரிய வெப்பம் தான். இந்த அதிகப்படியான வெப்பநிலை உயர்வுனால கடல்'ல இருந்து நல்ல சூடு கெடைக்கரதுனால இவங்களுக்கு அதிகப்படியான பலம் கெடைச்சிருது. அதாவது சாதாரண தண்ணி குடிச்சிட்டு இருக்குரவனுக்கு போர்ன்வீடா, காம்ப்ளான், ஹோர்லிக்ஸ் இதெல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்தா எப்படியிருக்கும்..? அந்த எபக்ட்.. சாதாரணமாவே இதுங்க ஊருக்குள்ள பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. (அப்புறம் இந்த ஆப்பு 2 சிறுசுக பெருசுக அப்படின்னு எவனையும் பாக்கரதில்லை. வாரிப் போட்டுகினு போய்க்கிட்டே இருக்கும்.)

ஆப்பு3:
பூமில வெப்பம் அதிகமாகும்போது, கடல் நீர் விரிவடையுது.. அப்ப என்னாகும்? கடல் நீர் மட்டம் உயரும்.. அப்ப என்னாகும்? இது என்ன கேள்வி.. கரையோரமா இருக்குறவங்க எல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்.. ஏற்கனவே பனிப்பாறைகள்(Glaciers) எல்லாம் உருகுதுன்னு எல்லா டிவி'லயும் காட்டுறாங்க.அப்புறம் 2012 படத்துல கடைசியா ஒரு பூமிய காட்டுனான்களே அந்த மாதிரி ஆயிடும்.(இந்த பணக்காரப் பயலுக எல்லாம் இப்பவே செவ்வா கிரகத்துல பட்டா போட ஆரம்பிசிடுவாங்கன்னு நெனைக்கிறேன்.)

S.P.பாலசுப்பிரமணியம் மாதிரி இதையும் மூச்சு விடாம படிங்க.. காலநிலை மாற்றம்,சுற்றுச்சூழல் மாசு,காடுகளை அழிக்கிறது, பசிக்கொடுமை,பொருளாதார சீரழிவு,திருட்டு,கொலை,வன்முறை,வளங்கள் குறைவு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் சீர்குலைவு,இயற்கை அழிப்பு,ரசாயண கழிவுகள் சேர்ப்பு இவை எல்லாம் செர்ந்துச்சுன்னா....... மாப்பு வெச்சுட்டாய்ங்கடா ஆப்பு...

பூமில எத்தன வளங்கள் அழிஞ்சு போச்சு, இப்ப எத்தனை நாடுகள் சேர்ந்து இந்த நிலைமையில் இருந்து மீள என்னென்ன பண்ணிகிட்டுருகாங்கன்னு தனியா ஒரு இடுகையே போடறேன்.. (ஒரு சின்ன சாம்பிள்: பூமில இருந்த பனிப்பாறைகளோட தடிமன் கடந்த 40 வருஷங்கள்ள 40 சதவிகிதம் குறைஞ்சிடிசாம்)வாங்க.. எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வெக்கலாம்.

ஆனா இப்ப நாம என்ன செய்யாலம்னு ஒரு சின்ன பார்வை.

தனியா ஒரு ஆளா நாம என்ன செய்ய முடியும்?கஷ்டம் தான்.. ஆனா சிறு சிறு துளிகளால் ஆனது தானே கடல். அது மாதிரி நாம எல்லாரும் நம்ம அன்றாட வாழ்கையில கொஞ்சம் கொஞ்சம் திருத்தங்கள செஞ்சுக்கிட்டாலே போதும். வாங்க ஊர் கூடி தேர் இழுப்போம்..

1.இந்த பக்கத்து பங்க் கடைக்கு தம் அடிக்கப் போறதுக்கு, அப்புறம் பாலு மோரு வெண்ணை'ன்னு எது வாங்கப் போனாலும் டர் புர்'ன்னு வண்டியைக் கெளப்புரத விட்டுட்டு நடந்து போகலாமே.. அட் லீஸ்ட் சைக்கிள் யூஸ் பண்ணலாமே. இதுல இன்னொரு பெனிபிட் இருக்கு. அதாம்பா, கொழுப்பு கரையும். 9 மணி ஆபீஸ்க்கு மாருதி'ல வந்து எறங்கரவங்க எல்லாம் காலைல 6 மணிக்கு மாங்கு மாங்கு'ன்னு ஓடிக்கிட்டிருக்காங்க பீச் ஓரத்துல. இந்த வெட்டி பந்தாவ கொஞ்சம் ஓரங்கட்டி வெச்சிட்டு நாமளும் ஆரோக்யமா இருந்து நாட்டையும் ஆரோக்யமா இருக்க வெக்கலாம். அட இப்பவே எங்க ஆபிஸ்ல வேல பாக்கற சில பேர் சைக்கிள்'ல வர ஆரம்பிசிடான்கப்பா. இது ஒரு ட்ரெண்டா மாறிட்டா பரவா இல்ல.. நானும் பைக்ல போறத 70 சதம் கொறைச்சிட்டேன்.

2.முடிஞ்ச வர நம்ம உள்ளூர்ல கெடைக்குற பொருள்கள வெச்சு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள சாப்பிடலாம். ஆன வரைக்கும் இறக்குமதி பொருள்கள தவிர்க்கப் பழகிக்கலாம். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இப்ப இது ஒரு ஆப்ஷன். நாளைக்கு இது கட்டாயம். அதனால இந்த ட்ரெண்டையும் இப்பவே கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம்.

3.சும்மா ஏசி'லேயே இருக்குறவங்க அத குறைச்சிக்கிட்டு பேன் உபயோகிக்கலாம். அட ஒரு கொசு வலைய போட்டுகிட்டு மாடியில படுத்துப் பாருங்கப்பா..எதுக்கு பேன் எதுக்கு ஏசி..?சுருக்கமா சொன்னா எளிமையா இருக்கப் பழகனும்.. இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. ஆனா நம்ம சந்ததிகளுக்கு இந்த விஷயங்கள ஈசியாப் பழக்கீரலாம். எளிமை வேற கஷ்டம் வேற.. புரிஞ்சிகிட்டா போதும்.

4.அப்புறம் ஒரு ஈசியான வழி."இதனாலே அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், தாங்கள் தங்கள் வீடுகளில் ஆங்காங்கே மாட்டியிருக்கும் பழைய காலத்து குண்டு பல்பு மற்றும் ட்யுப் லைட்டுகளை உடனே கழற்றிக் கேடாசிவிட்டு உடனே கரண்ட்'டை மிச்சப் படுத்தும் CFL லைட்டுகளை உபயோகப் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" இப்படீன்னு ஊர் ஊரா பிரச்சாரம் பண்ண தேவையில்லை. அவங்க அவங்க வீடுகள்ல செஞ்சாலே போதும். அட வெல ரொம்ப அதிகமப்பான்னு சொல்றவங்களுக்கு அது ஒரு நாள் வீட்டு செலவை விட கம்மின்னு நான் சொல்லத் தேவையில்லை.

5.மாமிசம் சாப்டரத குறைச்சிக்கிட்டு சத்தான சைவ உணவுகள சாப்பிடலாம். தீவனம் எல்லாம் இப்ப வெளி நாட்டுல இருந்து இருக்குமதி ஆகுதுங்கோ..

6.ஒரு முறை உபயோகப் படுத்தி தூக்கி வீசுற பொருள்கள முடிஞ்ச வர தவிர்க்கலாம். உதாரணமா, கல்யாணத்துல வெப்பான்களே பிளாஸ்டிக் தண்ணி கிளாஸ், அப்புறம் ஷேவ் பண்ற ரேசர், அப்புறம் தட்டுகள், நாப்கின்ஸ் இப்படி நிறைய.திரும்ப உபயோகப் படுத்தக் கூடிய பொருள்கள அதிக அளவு வாங்கனா, இந்த நிறுவனங்கள் இந்த தயாரிப்புகள தானா ,முன்வந்து நிறுத்திடும்.

வளர்ந்த நாடுகளான ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகள்ல இத ஏற்கனவே நடை முறைப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. மேற்சொன்ன விஷயங்கள் நடைமுறையில ரொம்ப கஷ்டம். ஆனால் சின்ன சின்ன விஷயங்கள நாம மனசு வெச்சா செய்யலாம். உதாரணத்துக்கு, கடையில சாமான் வாங்கும் போது பாலிதின் கவர் தர்றான்.ஒரு கூடையோ இல்ல ஒரு துணிப் பையோ கொண்டு போகலாம். என்ன பெரிய விஷயம்.. அட ஒரு சில கடைல கவருக்கு மேல கவர் போட்டுத்தர்றான். அதையாவது குறைக்கலாம்.ஒரே கவர்ல எல்லாத் தையும் போட்டு வாங்கலாம்.போன வாரம் கடைக்கு வந்த சின்னப் பையன் பாக் கொண்டு வர மறந்துட்டான். ஆனாலும் பிளாஸ்டிக் பாக் வாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு நாலு தேங்காய கைலயே பிடிச்சு கொண்டு போனான். இளைய பாரதம் கண் முன் தெரிகிறது. அது தான் நண்பர்களே.. இளைய சமுதாயத்திற்கு நாம் சொல்லித் தர வேண்டியவை இவை தான்.
நான் கூட பஸ்ல டிக்கெட் வாங்கினா இறங்கின உடனே வீசிட்டிருந்தேன். இப்ப அத குப்பத் தொட்டியில போட்டுப் பழகிட்டேன்.
நம்முடைய கடமைகள் பற்றி நெறைய எழுத வேண்டி இருக்கு.. அதை இதே தலைப்பிலயோ இல்ல வேற தலைப்பிலயோ எழுதுவேன்...
நீங்க ஏதாவது சின்னச் சின்ன நல்ல விஷயங்கள் இருந்தா தயவு செஞ்சு பின்னூட்டத்துல பகிர்ந்துக்குங்க.. அப்புறம் ஓட்டு போடாவிட்டாலும் பரவா இல்ல.. உங்க நண்பர்கள் கிட்டயும் சொல்லுங்க.. ஒரு விழிப்புணர்வுக்காகத்தான்.
உங்கள் பின்னூட்டம் தான் என் பலம்.

படித்தால் அறிவு வளரும்..
உணர்ந்தால் தான் மாற்றம் நிகழும்..நன்றி...

Saturday, January 23, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 2


கார்பன் சுவடுகள்'னா என்னன்னு போன பாகத்துல பாத்தோம்.

காலைல எந்திரிச்சதிலிருந்து, தண்ணி சூடு பண்ண வாட்டர் ஹீட்டர்,சவரம் பண்ண, எலெக்ட்ரிக் ரேசர், தலை காய வெக்க ஹீட்டர், துணி அயன் பண்ண அயன் பாக்ஸ், அப்புறம் ஆபீஸ்க்கு போனா, எசி, கம்ப்யுட்டர், காபி மசின்,சாயங்காலம், வீட்டுக்கு வந்தா,பேன், லைட்டு, டிவி, ஆடியோ சிஸ்டம் அப்புறம் வீட்ல யூஸ் பண்ற வாஷிங் மசின், பிரிட்ஜ்,கிரைண்டர், மிக்சி, செல் போன் சார்ஜர் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் எல்லாமே கரன்ட்ல தான் ஓடுது..(இருங்கப்பா மூச்சு வாங்கிக்கறேன்.)நாம எவ்வளுவுக்கு எவ்வளவு கரண்ட்ட யூஸ் பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கமிவா, வெளியாகுங்கறது தான் சேதி.
அட ஆமாங்க...கரண்ட்டு,எங்கிருந்து வருது.., அத எப்படி உற்பத்தி பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியும்.அப்ப நம்ம எவ்வளவுக்கு எவ்வளவு செலவு பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அத மறுபடியும் உற்பத்தி பண்ணியாகணும்..

அடுத்ததா, நாம யூஸ் பண்ற வண்டிக.. இப்பெல்லாம் பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்குப் போகனும்னாகூட வண்டிய எடுத்துட்டு தான் போகிறோம். 5000 ரூவா சம்பாரிக்க ஆரம்பிச்ச உடனே பைக்கு.. அதுவே 15000 சம்பாரிச்சா காரு... இதுல கொறஞ்ச வட்டி, ஒரு லட்சத்துக்கு காரு, வீட்டுக்கு வீடு ஒரு வண்டின்னு விளம்பரம் எல்லாம் போடராணுக.. இதெல்லாம் பெட்ரோல், டீஸல்ல, இயற்கை வாயுல தானே ஓடுது..? நம்ம வந்டிகள்ள இருந்த வர்ற புகையில இருக்குற கமிவா வே போதும்.. காத்த வீணாக்கறதுக்கு.

அடுத்ததா நாம வாங்கற பொருட்கள். எனக்குத் தெரிஞ்சு, நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து, நாம போடற துணிமணிகள், வீட்டுல வாங்கி வெச்சிருக்கிற அலங்காரப் பொருட்கள் வரை நம்ம ஊர்ல செய்யறது இல்லை.எல்லாமே வேறொரு இடத்துல இருந்து, நமக்காக கொண்டு வந்தது தான். அந்த காலத்துல வாழறதுக்கு, தண்ணியும் விவசாய பூமியும் இருந்தாப் போதும்னு இருந்துச்சு.. அதனால ஆத்துக்குப் பக்கமா குடி போனாங்க.. ஆனா இப்ப அப்டியில்ல.. தண்ணியில்லா காடா இருந்தாக்கூட குடிக்க கொக்க கோலா கெடைக்குமப்பா.. ஆனா இதெல்லாம் எங்கிருந்து எப்படி வருது.. கப்பல்ல, ப்ளைன்ல, லாரில'ன்னு ஏகப்பட்ட போக்குவரத்துகள். அதுக்கு ஆவுற செலவெல்லாம், நம்ம தலைல தான் வந்து விடியுது.. இத்தன வண்டி கார்களுக்கெல்லாம் எரிபொருள் வேணுமில்ல.. இத்தன வண்டிகளும் ஓடும்போது, எத்தன புகை வருது.. அப்பா தலையே சுத்துது...

இதெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்ச பெரிய விஷயங்கள். இதில்லாம, பழைய குப்பைய போசுக்குறது, பணிடிகையன்னைக்கு டயர எரிக்கிறது, பந்த் அன்னைக்கு பஸ்ஸ கொளுத்துரதுன்னு நம்மாளுக பண்ற அலம்பல்கள் எக்கச்சக்கம். எல்லாப் புகையும் மறைஞ்சு காத்தோட போகுதுன்னு நினைக்கிறாங்க.. காதோட தான் போகுது.. ஆனா மறைஞ்சு போகல..நமக்கு வெட்டு வெக்க ஒளிஞ்சு இருக்குது..

இப்ப தெரிஞ்சிருக்கும் கார்பன் சுவடுகள நாம எப்படி உருவாக்கரோம்னு.. இந்த ஆடு மாடுக எல்லாம் அது அது எப்படி இருந்துச்சோ அப்படியே தான் இருக்குதுங்க.. இந்த மனுஷப் பயலுகதான் இந்த பூமிய போட்டு டரியல் பண்ணி வெச்சிருக்கோம்.

சரி.. இனி அடுத்த பகுதியில, இந்த கார்பன் சுவடுகளால என்னென்ன களேபரம் நடக்குதுன்னும் அப்புறம் அத எப்படி தடுக்கலாமுன்னும் நாம பாக்கலாம்..(அப்பா ரொம்ப நேரமா டைப் அடிச்சு கை வலிக்குது..)

Friday, January 22, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 1


வணக்கம் ...!!!
பூமி அழியப்போவுது!! பூமி அழியப்போவுது ன்னு!! எல்லாரும் சொல்றாங்களே.. அது தானா அழியாட்டாலும் நாமளே கொஞ்சம் கொஞ்சமா முடிச்சுக்கட்டியிருவோம். ஆனா விஷயம் இன்னும் கையை மீறி போவல.நாம தெரிஞ்சு நடந்துக்க வேண்டிய விஷயம் நெறைய இருக்கு. நம்ம குழந்தைகளுக்கும் இந்த விஷயங்களை சொல்லிக் குடுத்து உணர வெக்கணும்.. சரி.. இந்த உபதேசமேல்லாம் எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான்.. அதனால நா நேரா விஷயத்துக்கு வரேன். இந்த பூமிக்கு நேரப் போகும் அபாயத்துக்கு ஒரு முக்கியக் காரணியான "கார்பன் சுவடுகள்" பத்தி எழுதலான்னு இருக்கேன். இது 3 இல்ல 4 பாகங்கள் வரை பிடிக்கும்னு நெனைக்கிறேன். ஆராய்ச்சியாளர்கள்,அப்புறம் சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில இந்த பெயர் மிகப் பிரசித்தம்.நம்ம ஊரு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுதனுங்கறதுக்காக கொஞ்சம் எளிமையான நடைல விளக்கலாம்னு இருக்கேன். உங்களுடைய ஆலோசனை மற்றும் திருத்தங்கள் மிகவும் தேவை.
சரி.. இந்த பாகத்துல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால ஏற்படுதுங்கரதப் பத்திப் பாப்போம்.

நம்ம பூமி இயற்கையாவே பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போல பல எரிபொருட்கள கைவசம் வெச்சிருக்கு (fossil fuels). இதையெல்லாம் போட்டு கொளுத்தரதுனால,கரியமில வாயு(கார்பன் டை ஆக்சைட்) வெளிவருதுன்னு நாம ஸ்கூல்ல படிச்சிருப்போம்(எந்த வகுப்புன்னு ஞாபகம் இல்ல.) நம்ம காற்று மண்டலத்துல ஏற்கனவே கரியமில வாயு இருக்கு. அதோட சேத்து நாம அனுப்புற கமிவா(கமிவா = கரியமில வாயு . அடிக்கடி டைப் பண்ண கஷ்டமா இருக்கு!!!)வும் சேரும் போது தான் வினையே ஆரம்பமாகுது.
நாம பொறந்துதில இருந்து சாகர வரைக்கும் செய்யற ஏகப்பட்ட விஷயங்கள்ளிருந்து கமிவா வெளிப்படுது.. இத நம்மளோட "கார்பன் சுவடுகள்"ன்னு சொல்றோம்.இது தான் நம்ம அடுத்த தலைமுறையினருக்கு நாம் சேத்து வைக்கும் சொத்து!!! அட நெசமா தாம்பா..!
கிரீன் ஹவுஸ் விளைவு பத்தி படிச்சிருப்பீங்க.?!?!? சரி சரி.. அதையும் சுருக்கமா சொல்லிடறேன். நம்ம காத்து மண்டலத்துல இயற்கையாகவே கமிவா,மீதேன், அப்புறம் நைட்ரஸ் ஆக்சைட் எல்லாம் இருக்கு. இதெல்லாம் சரியான அளவுல தான் கடவுள் படைச்சார். அதனாலதான் சூரிய வெளிச்சம் அது வழியா உள்ள வந்து, பூமில பட்டுட்டு, அப்புறம் நல்ல புள்ளையா தெறிச்சு மறுபடியும் வெளியில போய்டுது.இந்த சக்கரம் இப்படியே சுத்துசுன்னா, நம்ம வண்டி நல்லா ஓடுமே. ஆனா விடோவாமா நாம.
நாம என்ன லேசுப்பட்டவன்களா, முடிஞ்ச வரைக்கும் கரண்ட் யூஸ் பண்றது, வண்டிகள் ஓட்றது,குப்பையா எரிக்கறது,அது இதுன்னு தெணறத் தெணற கமிவா'வ உற்பத்தி பண்ணி மேல அனுப்பிச்சு வுட்டோம்.
கமிவா என்ன லேசுப் பட்டவனா.. நம்ம காத்து மண்டலத்தையே, தல மேல துண்டப் போட்ட மாரி போட்டு மூடிடுச்சு. அதனால பூமி மேல படர சூரிய வெளிச்சம் வெளியில போக முடியாம, செவுத்துல பட்ட பந்து மாறி திரும்பி நம்ம கிட்டே வந்துருது.. இப்பத்தெரியுதா? ஏன் நம்ம உச்சி மண்டையெல்லாம் சுர்ருங்குதுன்னு?

இந்த குளோபல் வார்மிங், சுனாமி, நில நடுக்கம் அது இதுன்னு என்னென்னமோ சொல்றாங்கள்ள.. அதுக்கும் இதுக்கும் நெறைய லிங்க் இருக்கு.

அப்பாடா.. ஒரு வழியா, கார்பன் சுவடுகள் பத்தி சொல்லீட்டேன்.. உங்களுக்குத் தெரிஞ்சு இன்னும் ஏதாவது இருந்தா, தயவு செஞ்சு சொல்லீருங்க..
அடுத்த வர்ற பாகங்கள்ள, நாம என்னென்ன செய்யும் போது, எப்டி எப்டியெல்லாம்,கமிவா வெளிப்படுது, நாம கொஞ்சம் மனசு வெச்சா எப்டியெல்லாம் அதா கம்மி பன்னலாம்ங்கற விஷயங்கள கொஞ்சம் வெளக்கமா பார்க்கலாம்..

Wednesday, January 20, 2010

ஐந்தே மாதத்தில் பணம் மூன்று மடங்காகுமாம்...!?!?!


ஐந்தே மாதத்தில் பணம் மூன்று மடங்காகுமாம்...!?!?!
ரொம்ப நாளா போன் பண்ணாத என்னோட பிரெண்ட் ஒருத்தன், எப்புடி திடீர்னு பாசம் பொங்குச்சோ தெரியல, நாலஞ்சு நாள் முன்னாடி போனப் போட்டு ரொம்ப ஓவரா விசாரிச்சான். பிரியா இருந்தா வாடா மச்சான், பேசி ரொம்ப நாளாசுன்னான்.
அவன் வீட்டத்தாண்டி கொஞ்ச தூரம் பெசீட்டுப் போயிட்டே இருந்தோம். திடீர்னு, அவன் மாமாகிட்டேருந்து ஒரு போன் வந்துச்சு. "இதோ வந்துர்றேன் மாமா " ன்னு சொல்லி போன வெச்சுட்டான். அவசரமா இருந்தா போயிட்டு வாடா மச்சான், அப்புறமா பேசலாம்னு சொன்னேன். "இல்லடா மாப்ள, வா நாம பேசிட்டே நடப்போம்னான். பேசிட்டே நடந்தோம். நாட்டு மக்களோட பெராசையைப் பத்தியும், இருக்கறத வெச்சு எப்புடி மன நிறைவோட வாழலாம்னும் நெறைய சொல்லீட்டே வந்தேன். அவங்க மாமா வீடு வந்ததும், "டேய் வாடா, எங்க மாமா எதுக்கோ(?????!!!) கூப்புடுறார். பத்து நிமிஷம்னு சொல்றார். போயிட்டு அப்படியே வீட்டுக்குப் போயடலாம்னான். நானும் இது ஏற்கனவே பிளான் பண்ணப்பட்டதுன்னு தெரியாம கூடப் போனேன். கொஞ்சம் உபசரிப்புக்கபுரம், அவங்க மாமா எங்கிட்ட டைரக்ட்டா மேட்டர ஓபன் பண்ணினார்.
"தம்பி உனக்கு LML தெரியுமா"
"ஓ தெரியுமே... அது ஒரு பைக் கம்பெனி தானே"
"அது இல்லப்பா, chain marketing மாதிரி ஒண்ணு ..."
"ஒ MLM அதாவது மல்டி லெவல் மார்கெட்டிங் பத்தி சொல்றீங்களா. அதாவது இந்த amway மாதிரியா?"
எங்கேயோ ஒரு முடிச்சு விழுவதை உணர்ந்தேன்....
"ஆமாம்பா, ஆனா இது வேற மாதிரி, அஞ்சே மாசத்தில நீ போட்ட பணம் ட்ரிபிள் ஆகும்.. இது நீ ஒன்னும் செய்யாமலே. கொஞ்சம் முயற்சி பண்ணினா இன்னும் ரொம்ப சம்பாரிக்கலாம்...."
உழைக்காமல் வரும் பணம் எப்படி உடம்பில் ஓட்டும்னு அப்பதான் என் பிரெண்ட் கிட்ட ஒரு லெக்சர் எடுத்துட்டு வந்திருந்தேன்.. என்ன பண்றது, தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம், முடிஞ்ச வரை மௌனம் சாதிச்சுட்டு எஸ்கேப் ஆயிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன்.
"ஆமாங்க, ஏற்கனவே எங்கப்பா இதுல பணம் கட்டி அப்புறமா தொடர முடியாம விட்டுட்டோம். எங்களுக்கு கீழ ஆளுக சேத்து தரோம்னாங்க.. கார்ல கூட்டீட்டு போனாங்க, அப்புறம் கூல் டிரிங்க்ஸ், சாப்பாடெல்லாம் வாங்கித்தண்தாணுக, மீட்டிங் போட்டாணுக... வந்தவனுக எல்லாம் கோடி கொடியா சம்பாதிச்சிட்டதா, மார் தட்டினாங்க.. ஒருத்தன் என்னடான்னா, திடீர்னு பையில இருந்து ஐநூறு ரூவா நோட்ட ஒண்ண எடுத்து கிழிச்சுப்போட்டு ஜம்பம் அடிச்சான்(அங்கிருந்த அனைவரும் பணப்பேய்கள், அதனால் தான் எவன் ரத்தமும் கொதிக்க வில்லை,).
கடைசியில, பணத்தைப் பறி கொடுத்தது தான் மிச்சம். அதாங்க எனக்கு இதுல இண்டரஸ்ட் இல்ல.. "( நாஸூக்கா சொன்னேன்.)
"அதெல்லாம் டுபாகூர் கம்பெனி தம்பி.. இதுல பொருள் எல்லாம் எதுவும் விக்க வேண்டியதில்லை.. நான் முழுசா சொல்லிடறேன்.. உனக்கு பிடிக்காட்டி விட்டுடலாம்"
"சரி சொல்லுங்கண்ணா"(இல்லாட்டி விடவா போறீங்க..?)
"இந்த கம்பெனி சென்னைல புதுசா வந்திருக்கு"
"யார் நடத்துராங்கன்னு தெரியுமா அண்ணா ? சென்னைல எங்கிருக்கு "
"சென்னைல எங்க இருக்குன்னு எனக்குத் தெரியலை தம்பி.... ஆனா கோயம்புத்தூர்க்கு இந்த பிளான் வந்து 40 நாள் தான் ஆச்சு..."
"சரி அண்ணா கோயம்புத்தூர்லயாவது எங்கிருக்குன்னு தெரியுமா..."
"இத பாரு தம்பி, வெப் சைட் எல்லாம் கூட இருக்கு, நமக்குன்னு இன்டர்நெட்ல தனி அக்கௌன்ட் ஓபன் பண்ணி தரான்..."(கவனிக்கவும் கடைசி வரை என் கேள்விக்கு பதிலே தர வில்லை...)
"amway மாதிரி இல்ல.. 7500 ரூவா கட்டினா, உனக்கு ஒரு பின் தருவாங்க.. ஒரு பின்னுக்கு 1500 ரூவா.. அத அவன் எடுத்துக்குவான் (!!??!!?)மீதி பணம் நம்ம இன்வெஸ்ட்மென்ட்.. அஞ்சே மாசத்துல உனக்கு மூணு மடங்கு பணம் திரும்ப கெடைக்கும்.. பணம் அப்டேட் ஆகிறத, தினமும் வீட்ல இருந்தபடியே, நம்ம அக்கௌண்ட ஓபன் பண்ணி பாத்துக்கலாம்.. (இது icici மாரியோ, sbi மாரியோ பேங்க் இல்லை.. அவனே ஒரு வெப் பேஜ் வெச்சு, அதுல நம்ம பணம் பெருகுரத காமிப்பானாம்) இத்தன நாளுக்கு ஒரு முறை நம்ம பணத்த எடுத்துக்கலாம்"
செம கடுப்பாகி, பேச்ச நிறுத்தலாம்னு வாய் எடுக்கரதுக்குள்ள...
"எப்படி தம்பி.. ஒண்ணும் செய்யாமலே பணம் வருது பாத்தியா... இது மட்டும் இல்ல, இதுல நீ ஒரு ஆள் சேர்த்து விட்டால் என்ன நடக்கும் பாருன்னு ஒரு பேப்பர் எடுத்து மரம் மற்றும் அதன் கிளைகள் வரைந்து பாகங்கள் குறிக்கத்தொடங்கினாரு.."
படம் வரையும் வேகத்தைப் பாத்தா தினமும் 10 பேருக்கு வரஞ்சு காட்டுவாருன்னு நெனைக்கிறேன்..
"இவரு கட்டும் போது, உனக்கு கமிஷன் இவ்வளவு, அவன் கட்டும் போது, உனக்கு அவ்வளவு, எப்புடி பணம் வருதுன்னு பாத்தியா.. பணம் உடனுக்குடன் அப்டேட் ஆகுறத, நெட்ல ஒடனே பாக்கலாம்" அவரு கையில வெச்சிருந்த பேப்பர் இப்ப கோழி கிறுக்கன மாறி இருந்துச்சு..
கையில இருந்த கொஞ்ச பிரிண்ட் பேப்பர்ஸ காமிச்சார்.. 10 மணிக்கு எடுத்த ப்ரின்ட்ல 15000 இருந்துச்சு. 10.10 மணிக்கு 35000 ஆயிடுச்சு..
ஏன் மொகத்துல எந்த மாத்தமும் இல்லாதத கவனிச்ச அவரு என் பிரெண்டயும் காமிச்சு, "இவனையும் நான் தான் சேத்து விட்டேன்.. இப்ப அவனும் சம்பாரிக்கிறான்.."
"ஆமாண்டா மாப்ள, இத பாரு என்னோட அக்கௌன்ட் பெலன்ஸ்னு சொல்லி பாக்கெட்குள்ளருந்து ரெண்டு பேப்பர எடுத்து நீட்டினான் பாருங்க..?
அட பிக்காளிப் பயலே....!!!!!!!!!!
"எண்டா நாயே, உனக்கு மார்க்கெட்டிங் பண்ணனும்னா நேரா சொல்லி கூப்புட வேண்டியதுதானேடா.. எண்டா இப்டி பிரெண்ட்ஷிப்ப கேவலப்படுத்தரேன்னு கேட்கத் தோனுச்சு"
"சரி.. இப்படி பணம் குடுக்கறதுல அவங்களுக்கு என்ன லாபம்..?"
"அந்த பணத்த இன்வெஸ்ட் பண்றாங்க.. கெடைக்குற லாபத்துல வர்ற ஷேர் தான் நமக்கு லாபமா வருது..."
"சரி.. எதுல இன்வெஸ்ட் பண்றாங்க.. லாபம் வரலைன்னா என்ன பண்ணுவாங்க.."
"அப்படியில்ல தம்பி.. இது வரைக்கும் நல்லா தான் போய்கிட்டிருக்கு. நம்ம வாழ்க்கையே நமக்கு நிச்சயம் இல்ல..." (தத்துவம் வேற.. அது சேரி இவன சேத்து விட்டவனும் இதே தான் சொல்லீருப்பான் - சேம் ப்ளட் )
"சரி.. இவங்க மேலிடம் என்கிருக்குன்னே தெரியல, ஒருவேள நஷ்டம் ஆச்சுன்னா, பணம் பறி குடுத்தவங்க நேரா நம்மள தானே புடிப்பாங்க..?"
"அப்படியில்ல தம்பி.. இது வரைக்கும் நல்லா தான் போய்கிட்டிருக்கு..."(மறுபடியும் அதே பதில்..)
"நான் அலங்கார் ஹோட்டல்'ல கார் டிரைவரா இருந்தேன்,... இப்ப லாபம் வரவும் அத விட்டுட்டு இந்த பிசினஸ்லியே முழுசா இறங்கிட்டேன்..."
"சரிங்க நான் புறப்படுறேன்..."
அதுக்கு மேல அவர் கிட்ட பேச என்ன இருக்கு..
இனி என் நண்பன் மொகத்தகூட பாக்க எனக்கு இஷ்டமில்ல..
-------------
நீங்க சொல்லுங்க..
எரியற வீட்டுல பிடுங்கன வரைக்கும் லாபம்னு இந்த மாறி MLM ல சம்பாரிக்கறதுதான் புத்திசாலித்தனமா..?
பெரிய பெரிய ஜாம்பவான்களே முட்டி மோதி மூக்கு ஒடபடுற பங்குச்ச்சந்தைல, எந்த விதமான பெரிய பாக் க்ரௌண்டும் இல்லாம ஒருத்தன் ஜெயிச்சு லாபத்துல பங்கு தருவானாம்..(வலைல சிக்கனது என்னன்னு தெரியாமலே.. ஒருத்தன் அது தோலு பல லட்சம் போகும்க்ரான்.. ஒருத்தன் அதோட எச்சில் மெடிசின்ங்கறான்.. இந்த கௌண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது..)
இந்த மாறி கம்பனிக்கு எந்த பாக் கிரௌண்டும் தேவையே இல்லைன்னுதான் நான் நெனைக்கிறேன்.. ஏன்னா.. கமிஷன்ங்கற பேர்ல அவன் போடற எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு இவனே இவன் அவன் மாமன், மச்சான்னு எல்லாத்தையும் இழுத்து உள்ள விட்டுடுவான்..
ஏண்டா உனக்கு கீழ ஒருத்தன் பணம் கட்டுனா, உனக்கு கமிஷன் வருதுன்னு சந்தோசப் படுறியே, இதே மாறி நீ கட்டுன பணத்த வெச்சுதான் உனக்கு மேல இருக்குறவன் கமிஷன் வாங்கறான்.. இதுல சர்வீஸ் சார்ஜ் வேற 1500 ரூவாவாம்..
இவ்வளவு பேருக்கு இவ்வளவு லாபம் வரும்.. எல்லாருமே பணக்காரன் ஆகலாம்னா கவர்மெண்டே, இந்த பேங்க் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணீட்டு இந்த பிசினஸ் பண்ணுமே..
என் கருத்து..
இந்த உலகத்துல ஒண்ண இழந்தா தான் ஒண்ண பெற முடியும். "வேர்வ சிந்து..!பணம் சம்பாரி...!! மூளைய கசக்கி யோசி..!! பணம் சம்பாரி..!!"
ஒண்ணுமே செய்யாம இவ்வளவு பணம் வருதுன்னா.. அது எங்கயோ எவனுக்கோ ஆப்பு வெச்சுட்டுதான் வருதுன்னு நான் நெனைக்கிறேன்.
இந்த MLM ல கடைசியா பணம் கட்டுறவன் நெலம என்னான்னு யோசிச்சுப் பாருங்க.. ஆ.. அதப்பத்தி எங்களுக்கு என்ன கவலை.. நம்ம chain'ல மேல இருக்கோம்.. சம்பாரிப்போம்ங்கற பேராசை தான், இந்த மாறி கம்பெனிகளோட வெற்றி..
பேராசையினால் தான் நம் சந்தொஷங்களைஎல்லாம் பறி கொடுத்தோம்..
பேராசையினால் தான் நம் பூமியையே நாம் கெடுத்தோம்..
போதும் என்ற மனம், கிடைத்ததைப் பகிரும் குணம் இல்லாதவரை இந்த நிலை மாறாது..
நண்பர்களே..இந்த மாறி நெறைய கம்பனிகள் உருவாசுன்னா, என்ன ஆகுமோன்ற பயத்துல எழுதுனது....எனக்கு தோணினத கொட்டீட்டேன்..
தப்பா இருந்தா திருத்துங்கப்பா....
சரியா இருந்தா.. படிச்சிட்டு கொஞ்சம் ஓட்டையும் குத்துங்கப்பா...

Friday, January 15, 2010

சூரிய கிரகணம் நேரடி படங்கள்..சுடச்சுட...

சுடச்சுட என்னோட கேமரால எடுத்ததுங்கோ
... Sony DSC - H50







Thursday, January 14, 2010

இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்....


இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்....
வீட்டுக்கொரு இலவச கலர் டிவி, கலர் டிவி'ன்னு கூவி கூவி குடுத்திகிட்டிருகாங்கோ ஒரு சைடு.
கூடவே கேபிள் கனெக்ஷன் குடுத்த பரவாலன்னு கிண்டல் பன்றாங்கோ இன்னொரு சைடு.
இதுல இவன் வேற என்ன புதுசா சொல்ல வரான்னு பாக்கறீங்களா..
ஆமாப்பா, எல்லாம் இந்த சூரியனோட பவர யூஸ் பன்றதப் பத்திதான்.
எங்களோட நிறுவனத்தோட தாய் நிறுவனம் ஜெர்மனி'ல இருக்கு. அங்க வேல பாக்கற நம்ம பிரெண்ட்ஸ்க கொஞ்சம் பேரு சொன்னாங்க, அவிங்க ஊர்லயெல்லாம் எல்லா வூட்லேயும் சோலார் பேணல் , அதாம்பா, நம்ம சூரிய ஒளிய கரண்டா மாத்துற மெசினு யூஸ் பண்றாங்களாம்.
இதுல ஏன்னா ஸ்பெஷல்னு கேடீங்கன்னா, எல்லார் வீட்டுலயும், சோலார் பேணல் வெக்கறதுக்கு, அவிங்க ஊர் அரசே, நிதி உதவி செய்யுதாம். அது மட்டும் இல்லாம, வீட்டு உபயோகம் போக, மீதம் இருக்குற கரண்ட, கவர்மெண்டே, ஒரு யூனிட்டுக்கு இவ்ளோன்னு, வெல குடுத்து வாங்கிக்குதாம். அது கவர்மெண்டு....!!!!!!!!!!!!
ஜெர்மனி'ல ஏரியா ரொம்ப பெருசு. ஆனா பாபுலேசன் ரொம்ப கம்மி. நம்ம ஊர் மாறி பஸ்ல நின்னிட்டு போற அளவுக்கு கூட கூட்டம் கேடயதாம் . ஊருக்குள்ள அங்கொன்னும் இன்கோன்னுமாத்தான் வூடேல்லாம் இருக்குமாம். வெயிலோட உஷ்ணம் ரொம்ப கம்மியாம். இதெல்லாம் எதுக்கு சொல்ல வரேன்னா, ஊரும் பெருசா இருந்து, கூடமும் கம்மிய இருந்தா அவங்களுக்கு செலவும் கம்மி, கரண்ட் பிரச்சினையே இருக்காது, இருந்தாலும் கூட அவிங்க கவர்மெண்டு எதிர்காலத்த யோசிச்சு, இப்பவே, எவ்வளவு அழகா திட்டம் போடிருகாணுக.. அவிங்க ஊரு மேல அவளவு அக்கறை,,
வெளிநாட்டுக்காரணுக விஷயம் தெரிஞ்சவணுக.. தம்மாதூண்டு வெயில்கூட வீணாக்காம உபயோகப்படுதிகிராணுக.. இதனால கவர்மேன்ட்டுக்கும் நல்ல லாபம் தானாம்..
நம்ம ஊரு போபுலேசன் பத்தி சொல்ல வாணாம். வெயிலைப் பத்தியும் சொல்ல வாணாம்.....
பத்து நிமிஷம் சேந்தாப்புல வெளியில நின்னாலே , வெயிலு நம்ம மூளைய ஆவியாக்கிடும் போல.(ஒரு விளம்பரத்துல கூட பாத்தேன்னு நெனைக்கறேன்.).நம்மாளுக எல்லாம், அந்த வெயில்ல கூட, ஜாலியா நின்னு, என் உச்சி மண்டைல சுர்ருங்குதுன்னு பாட்டு பாடத்தான் லாயக்கு.
எண்டா சுர்ருன்னுசே,, எதாச்சும் ஓரச்சுதா?

நம்மூரச் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா, பல பேருக்கு சொலார்னா என்னன்னே தெரியாது. அப்டியே விவரம் தெரிஞ்ச எவனாச்சும் கூரை மேல வெச்சானா, அதோட வெல என்னான்னு தெரிஞ்சா , நைட்டோட நைட்டா பிரிச்சிட்டு பொய், எலெக்ட்ரானிக் கடைல வித்தாலும் வித்துருவாணுக.

விஷயம் தெரிஞ்சவிங்க என்ன சொல்றாங்கன்னா, வீட்டுக்கொரு சோலார் பேணல் வெக்கறது, இப்பத்திக்கு முடியாத காரியமாம். செலவு கைய சுட்டுடுமாம்...ஆனாலும் நெறைய பேரு யூஸ் பண்ண ஆரம்பிச்சா, வெல கொறைய வாய்ப்பிருக்காம். அதாவது, கவர்மென்ட், இத அதிக அளவில உற்பத்தி செஞ்சா!.. காசு இல்லாதவணுக, இப்பத்திக்கு ஒன்னும் பண்ண முடியாது. காசு உள்ளவனுகளும், "ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட்'னு" பாடத்தான் லாயக்கு. நாப்பது லட்சத்துக்கு கார் வாங்கி, நாலு தெருவுல பந்தா வுட்டுட்டு திரியுவாணுக. அவனக்லாச்சும் நாலு சோலார் பேணல் வெச்ச பரவால்ல .

ஆனா, நம்ம கவர்மெண்டுல எல்லாம் விஷயம் தெரிஞ்சவணுக.. அவங்க நெனச்சா செய்யலாமாம். ஆமாம்பா.. புல்லா பண்ண முடியலைன்னாலும் வாட்டர் ஹீட்டர், அடுப்புன்னு கொஞ்சம் கொஞ்சமா, சோலார் பவருக்கு மாத்த முடியுமாம். அட இவ்வளவு ஏம்ப்பா, நம்ம பக்கத்துல இருக்குற கர்நாடகவுலையே, வாட்டர் ஹீட்டர்கெல்லாம் இனிமே சோலார் பவர் தான் யூஸ் பன்னனம்னு சொல்லிடாங்க அவிங்க கவர்மெண்டு.

ஆனா நம்ம கவர்மெண்டு.. மக்களோட அறியாமையா உபயோகப்படுதிகிறாங்க. வூடுக்கொரு டிவி'நா ஓட்டு போடுவானுக. வூடுக்கொரு சோலார் பேணல்'நா எவன் போடுவான்..?ஏம்ப்பா , ஏற்கனவே நம்மூர்ல, கரண்ட் பத்தல, இதுல வீடெல்லாம் கலர் டிவி வெச்சுனு என்னத்த பாக்கறது. கலர் டிவி யா இருந்தாலும் ப்ளாக் அன் வைட் டிவி யா இருந்தாலும் ஆப் பண்ணினா ஒரே கலர்தான். பாத்துகிட்டே உக்கார்ந்துக்க வேண்டியதுதான்.

ஏற்கனவே பக்கத்து நாட்டுக் காரனுக எல்லாம் நம்மள பாத்து திட்ட ஆரம்பிச்சிடாணுக. நம்ம தான், பூமிய அதிகமா மாசு படுத்தரோம்னு.. ஆனா நமக்கென்ன கவலை .
ஆமா மக்களுக்கே கவலை இல்லாதப்ப கவர்ந்மேன்ட்டுக்கு என்ன தேவை வந்துச்சுன்னு கேட்டேன்.
இந்த நெலமையில "இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்...." என்ன ஆகும்னு நீங்களே யோசிச்சிகுங்கோ...

உங்களுக்குத் தெரிஞ்சு ஏதாவது விஷயம் இருந்துச்சுன்னா சொல்லுங்கப்பா, எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.

வீட்லயே எப்படி சோலார் பேணல் செய்யலாம், எப்புடி சிக்கனமா உபயோகப் படுத்தலாம்னு ஏகப்பட்ட விஷயங்கள் இணையத்துல இருக்கப்பு..
தமிழ்ல பேரு வெச்ச படத்துக்கு வரி விலக்கு வழங்குற அரசு, சோலார் பொருட்கள் வாங்கறதுக்கு சலுக அறிவிச்சா நம்ம மாறி ஆளுக எல்லாம் பயனடையலாம்.. ஆனா அவிங்க கட்சி என்னாகும்..!?!..

அதானால இப்பத்திக்கு, நமக்கெல்லாம் கலர் டிவி மட்டுந்தான் . !!!!

Saturday, January 9, 2010

சமூக ஆர்வலர்களுக்கு என் அனுபவம்...





ஒரு புதுமையான கற்பித்தல் முறையை கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். திருநெல்வேலி'யில் உள்ள ஒரு அமைப்பிலிருந்து (ATREE organisation - Ashoka Trust for Research in Ecology and the Environment ) எங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அதாவது கிராமத்து பள்ளிக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை பற்றி வகுப்பெடுக்க தானாகவே முன்வரும் சேவையாளர்கள் (volunteers ) வேண்டும் என.
எனக்கு முதலில் எழுந்த சந்தேகம், இந்த அமைப்பின் பெயருக்கும், இந்த சேவைக்கும் தொடர்பே இல்லையே என.
விசாரித்த பொது கிடைத்த விளக்கங்கள் என்னை ஆச்சிரியப்படுத்தின.
இந்த அமைப்பானது, திருநெல்வேலியைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள பறவைகள், அவற்றின் தற்போதைய செயல்பாடுகள், மற்றும் காலநிலையைப்போருத்து அவற்றின் செயல் மாற்றங்கள் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பு. மேலும் விபரங்களை இணையதளத்தில் நீங்கள் பெறலாம்.
எனக்கும் பறவைகளைப்பார்தல், ரசித்தல் போன்ற விஷயங்கள் பிடித்தமாதலால், மீதி விவரங்களை நேரில் சென்று பெறலாம் என்று முடிவு செய்து, நானும் என் நண்பன் கார்த்திக்'கும் இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றோம். சுற்றியும் மரங்கள், மரக்கன்றுகள், தூய காற்று சூழ atree எங்களை வரவேற்றது. இது போன்ற செவையாளர்களைத் தங்க வைக்க தனியாக ஒரு வீட்டை ஒதுக்கி இருந்தார்கள்.
எங்களை உபசரித்த மதிவாணன் என்பவரை விசாரித்த பொது அவர் "பறவைகள், விலங்குகள், மனிதர்கள், மரம் செடி கொடிகள் ஆகியவை அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. இதன் சமநிலையைப்புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் அவசியமாகிறது. எனவே, இங்குள்ளஅரிய இன பறவைகள், மரங்கள், மிருகங்கள் ஆகியவற்றைப்பாதுகாக்க, இங்குள்ள மக்களுடன் பழகி அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறோம். புதிய தலைமுறையினரிடம், இதன் புரிதல் மிக அவசியமாகிறது" என்றார்.
அவர் தமிழர் தான். "ஏன் நீங்களே பாடங்களை குழந்தைகளுக்கு எடுக்கலாமே..?" என்ற கேள்விக்கு, அவர்களும் வாரந்தோறும் பள்ளிக்குழந்தைகளை, ஒரு பொது இடத்துக்கு வரவழைத்து, இந்த வகுப்புகளை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள், அனால், சுற்றுச் சூசல் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்தல், அவற்றை ஆவணபடுதுதல், திட்டமிடல், போன்ற பணிகள் நிறைய இருப்பதினால் , உள்ளூர் மக்களின் மொழி தெரிந்து அவர்களுடன் பழகி, இந்த வகுப்புகளை எடுக்க நாங்கள் தேவைப்பட்டதையும் எடுத்துக்கூறினார்.
எங்களைப்போன்றே வாரா வாரம் ஒருவர் அல்லது இருவர் கொண்ட குழு அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். எங்கள் நிறுவனத்திலிருந்தே, இதற்க்கு முன்னால் இருவர் சென்றிருந்தனர்.

அந்த ஒரு நாள் வகுப்புக்குத்தேவையான, ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு நகல் எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதில் தன்னம்பிக்கை என்றால் என்ன, அதில் எத்தனை பிரிவுகள் உள்ளன, எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, போன்றவற்றை விளக்கும் தெளிவான செயல்விளக்கங்கள் அளிக்கப்படிருந்தன. எடுத்துக்காட்டாக, ஒருவன் தன்னை மற்றவரிடமிருந்த எப்படி வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்வது என்பதற்கு வெறும் கற்களை மட்டும் பயன்படுத்தி செய்யும் செயல் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது கூடியிருக்கும் குழந்தைகளிடம், வெளியில் சென்று ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து வரச் சொன்னோம், கற்கள் அனைத்தும் அளவில் ஏறக்குறைய ஒன்றாக இருக்க வேண்டும் என்பது சொல்லப்பட்டது. அனைவரும் கொண்டு வந்த பிறகு, அனைத்தையும் நாங்கள் வாங்கி ஒரு இடத்தில் வைத்து கலக்கி விட்டோம். பிறகு அனைவரையும் அழைத்து அவரவர் கல்லை எடுக்க சொன்னோம். குழம்பி போயினர். ஏனெனில் இந்த செயலை அவர்கள் எதிர் பாராததினால் அவர்கள் தத்தம் கற்களை கவனிக்கவில்லை. சில சமயம், சில பேர் தங்கள் வண்டி எண்களையே மறந்து போவதில்லையா, அது போன்ற கவனக்குறைவே.
ஆனாலும் ஒரு சிலர் தங்கள் கற்களை சரியாக எடுத்தனர். பின்னர் அனைவரையும் அழைத்து மீண்டும் கற்களை அவர்களிடமே கொடுத்து இதையே மறுபடியும் செய்யச்சொன்னோம். அனால் இந்த முறை சற்று வித்தியாசமாக. அதாவது அவரவர்கள், தங்கள் விருப்பப்படி, தங்கள் கற்களில், ஏதேனும் அடையாளம் வைத்துக்கொள்ளலாம்.இம்முறை அனைவரிடமும் மிகவும் கவனம். இந்த முறை அனைவரும் தங்கள் கற்களை, மற்றவற்றிலிருந்து, சரியாகப் பிரித்தெடுத்தனர்.
இதன் மூலம் குழந்தைகள் கற்றுக் கொண்டதை அவர்களிடமே கேட்டறிந்தோம், சிலவற்றை நாங்கள் விளக்கினோம்.
உண்மையைச் சொல்லப் போனால், பலவற்றை எங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டோம்.
நீங்களும் உங்களால் முடிந்த பாடங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சிறு வகுப்பு முடிந்தவுடன், மதிவாணன் ஒவ்வொரு குழந்தைகளையும் ஒவ்வொரு மரத்தின் அருகே நிறுத்தே ஏதோ கணக்கு எடுப்பது போல் தெரிந்தது. விசாரித்த பொது "Phenology " என்ற ஒன்றை அறிமுகப் படுத்தினார். இது ஒரு வகை ஆராய்ச்சி முறையாகும். அதாவது. மரத்தின் அருகே நின்று கொண்டு, அந்த மரத்தை நான்கு பகுதியாகப் பிரிக்க வேண்டும்(கற்பனைக் கோடுகள்). பிறகு, அந்த நான்கு பகுதிகளிலும், தோராயமாக எத்தனை பழுத்த இலைகள் உள்ளன. எத்தனை புதுப் பூக்கள் வந்துள்ளன, எத்தனை கைகள் உள்ளன, போன்றவற்றை அட்டவணைப்படுத்தி ஒரு புத்தகத்தில் எழுதிக் கொள்கிறார்கள். இதை அவர்கள் அவ்வப்போது எடுத்து அந்த மரத்தின் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆக இது உதவலாம் மற்றபடி, இது எதற்கு தேவை என்று கேட்ட போது அவர் கூறிய பதில்கள் சுவராஸ்யமானவை.
இது குழந்தைகளின் கவனிப்புத் திறனை மிகவும் அதிகப்படுத்துவதாகவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க இது மறைமுகமாக உதவுவதாகவும் கூறினார்.
பெரிய மரங்களில் இது போன்ற கணக்கெடுப்பது மிகவும் கடினம், ஏனெனில், ஆயிரக்கணக்கான இலைகள் உள்ள மரங்களை எப்படி உன்னிப்பாக கண்காணிப்பது என்பதை யோசித்துக்கொண்டிருந்த போது, அந்த குழுவிலேயே மிக இளைய சிறுவன், ஒரு மிகப்பெரிய ஆல மரத்தைக்காட்டி, அந்த மரத்தை தன்னுடைய ஆராய்ச்சிக்காக எடுத்திருப்பதாகக் கூறி தன்னுடைய அட்டவனையைக்காட்டி எங்களை ஆச்சிரியதிர்குள் ஆக்கினான்.
மதிவாணன் சொன்னது உண்மைதான். அந்த அட்டவணையைக் காட்டும்போது அவன் கொண்ட பெருமிதம் அவனது தன்னம்பிக்கையைக் காட்டியது.

பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களிடம், அவர்களின் எதிர்கால திட்டங்களை வினவும் போது, அவர்கள் கூறும் பதில்களை விட, இவர்கள் மிக தெளிவாக இருப்பார்கள் என்பது புரிந்தது. என்ன படிக்கிறாய் என்று கேட்டால், மொட்டையாக, ஐந்தாவது, ஆறாவது என்று சொல்லாமல், கூடவே, தான் ஒரு மரத்தை இதனை நாளாக ஆராய்ச்சி செய்கிறேன், என்று அவர்கள் சொல்கையில், அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறுவதை உணர்ந்தேன். அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதை கவனிக்கமுடிந்தது.
பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகும், தன எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத அளவே, நமது கல்வி முறை இருந்திருக்கிறது. சிறு வயதிலேயே, தான் யார் என்று உணர்ந்து, தங்கள் பாதைகளை தெளிவாக அமைத்துக் கொள்ளும் திறனுடைய வருங்காலச் செல்வங்களை உருவாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதை உணர்ந்தேன்.

வகுப்பு மட்டும் இன்றி, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் தங்கி இருந்ததில் மணிமுத்தாறு அருவி, களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயம், மணிமுத்தாறு அணைக்கட்டு, மற்றும் பச்சை வயல் வெளிகள், வெள்ளந்தி மனிதர்கள், மலிவான விலையில் ருசியான உணவு என திருன்வேல்வெளி எங்களை கிறங்கடித்தது அனைத்தும் உண்மை.
முடிந்தால் நீங்களும் செல்லலாம்.
குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்சிகள், International youth foundation இடம் உள்ளன. அதனைப்பெற்று எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளேன்.

படிக்கும் போது அறிவு வளர்கிறது. உணரும் போதே மாற்றங்கள் நிகழ்கின்றன. !!!!!