Sunday, December 12, 2010

நினைவுகள் - பகிர்வுகள்

வணக்கம் நண்பர்களே..

வாழ்க்கையில் நாம் கடந்து போகும் பல விஷயங்களில் நமக்குப் பிடிக்காதவை பல இருந்தாலும், ஒரு சில நல்ல விஷயங்கள் நம் மனதில் பதிந்து போகும். அது போன்ற சில விஷயங்களை இங்கே என் நினைவுகளாகப் பதிய நினைக்கிறேன். பதிந்தவற்றை உங்களோடு பகிரவும் நினைக்கிறேன்.

நான் பள்ளியில் படித்த காலங்களில் எங்களுக்கு ஏட்டுக்கல்வியைத் தவிர வேறேதும் அளிக்கப் படவில்லை. புத்தகச்சுமை, காலையில் இருந்து மாலை வரை அடுக்கடுக்காக பாடங்கள், இறுகிப் போன முகங்களுடன் வாத்தியார்கள்(பாவம் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ..),உடற்பயிற்சி வகுப்பில் கூட விளையாட விடாமல் இரவல் வாங்கி பாடம் எடுக்கும் சின்சியர் சிகாமணிகள், சாயங்காலம் வீட்டுக்குப் போனால், விளையாடக் கூட முடியாத அளவுக்கு வீட்டுப் பாடங்கள், இவ்வளவு ஏன், கனவில் கூட அந்தக் குரூர முகங்கள், இது தான் என் பள்ளிக் கால நினைவுகள்.

வீட்டுப் பாடத்தை பாதி எழுதி விட்டு, தூக்கம் வந்தால், அம்மாவை அதிகாலையில் எழுப்புமாறு சொல்லி, அப்புறம் இது வொர்க் அவுட் ஆகாது என்று நடுராத்திரியே சாவி கொடுக்கப் பட்டவன் போல எழுந்திரித்து, அம்மாவையும் எழுப்பி உக்கார வைத்து, அழுகையும் கையுமாக வீட்டுப் பாடம் எழுதி முடித்த நாட்கள் மறக்க முடியாதவை. இவ்வளவு ஏன்.. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் கூட நண்பர்களுடன் கூடி விளையாட முடியாத அளவுக்கு, வினாத்தாளை விடையோடு எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று பணித்து விடுவர். முதல் ஐந்தாறு நாட்கள் நண்பர்களோடு விளையாடுவோம்.அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்று.அப்போதும் கூட, நான்கு நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்தால் சரியாக இருக்குமா, முடித்து விட முடியுமா.. கண்விழிக்க நேரிடுமா போன்ற கவலைகள் எங்களை ஆட்கொண்டு இருந்தன.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இப்படிக்கு இளங்கோ நடத்தும் விழுதுகள் நற்பண்புகள் கல்வி இயக்கத்தில் உள்ள மாணவர்கள் படிப்பைத் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றனர். நான் எப்போது அவர்களைச் சந்திக்கப் போகும் போதும் ஒவ்வொரு மாணவனும் வந்து "சார், அன்பே கடவுள் சார்" என்று சொல்லித் தான் வணக்கம் செய்வார்கள்.ஒவ்வொரு முறை அவர்கள் அதனை உச்ச்சரிக்கும்போதும் அவர்களுக்குள் அன்பு புகுத்தப் படுகிறது(அல்லது உள்ளிருக்கும் அன்பு பலப்படுத்தப் படுகிறது). ஆம்.. இன்றைய உலகுக்குத் தேவை.. அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.

அந்தக் குழந்தைகளின் பணிவு, பெரியோரிடம் காட்டும் மரியாதை, கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் காட்டும் ஆர்வம் எனப் பல விஷயங்கள் என்னை வியக்கச் செய்தன. நற்பண்புக் கல்வி என்பது எவ்வளவு தேவையான ஒன்று என்று அதை அனுபவிக்காத என்னைப் போன்றோருக்குத் தான் தெரியும். பள்ளிக் காலத்தை நினைவுக் கூறும்போது, அது பசுமையாகத் தெரிய வேண்டும். சாதனைகள் தெரியவேண்டும். எனக்குப் புத்தகங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.(ஆனாலும் ஆளாக்கி விட்டமைக்காக என்றும் என் மரியாதை மற்றும் நன்றிகள் அவர்களுக்கு உண்டு..)

அந்தக் குழந்தைகளுடன் பழகும்போது, என்னுடைய பள்ளிக் காலத்திற்குச் சென்று நான் அனுபவிக்காததை அனுபவிக்கும் உணர்வைப் பெறுகிறேன். அடிக்கடி செல்ல ஆசை, ஆனால் தொலைவும், நேரமும் தடையாக உள்ளன. சக்கரம் போல சுற்றிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில், அவர்களோடு இனைந்து நடத்தும் இது போன்ற நிகழ்வுகள் தான் என்னுடைய டைரியில் இடம்பிடிக்கும் தருணங்கள்.

இத்துடன் மரங்கள் நட்ட குழந்தைகளின் உற்சாக முகங்களை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் எதிர்காலத்தை இங்கே பாருங்கள்..

(செல்போனில் படம் பிடித்ததால் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கின்றன)












கடைசிப் படத்தில் இளங்கோ மற்றும் கமலக் கண்ணன்.

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

என்றென்றும் அன்புடன்,
சாமக்கோடங்கி

Thursday, December 9, 2010

சிம்ம சொப்பனம் - ஜூலியன் அசாங்கே

ரமணா படத்தில் விஜயகாந்த், தப்பு செய்தவர்களை கட்டம் கட்டிக் கொல்லுவார். பார்க்க நன்றாக இருந்தது. தப்பு செய்தவர்களைக் கண்ட போது ரத்தம் கொதித்தது. ரமணா சாகும் காட்சியில் இதயம் கனத்தது. அதுக்கப்புறம்..?

உண்மையாகவே ரமணாவைப் போலவோ, அன்னியனைப் போலவோ, இந்தியனைப் போலவோ ஒருவன் உருவானால் நாம் என்ன செய்வோம்..? யூகிக்கத் தேவை இல்லை. அதுதான் நடந்து கொண்டு இருக்கிறதே...

"ஜூலியன் அசாங்கே"


உலக நாடுகளுக்கே தான் தான் நாட்டாமை என்ற நினைப்பில் இருக்கும் அமெரிக்காவின் குடுமியையே பிடித்து ஆட்டியவர். காற்று கூட புக முடியாத இடங்களில் புகுந்து ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டவர். இவரின் தைரியம், திறமை என்னவென்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் சினிமா நடிகர்களின் வீரத்தையே பார்த்துப் பழகிய நமக்கு, சாதாரண மனிதனை திடீரென ஹீரோவாக உருவகப் படுத்துவது கடினமே..

அலுவலகத்தில் காலை சிற்றுண்டியின் போது நான் நொந்து கொண்டு சொன்னேன்.. "உலகில் கடைசியாக ஒரு தைரியசாலி இருந்தான். அவனையும் கட்டம் கட்டிட்டாணுகடா.." என்றேன்.. யாருடா..? என்றார்கள் நண்பர்கள்.. விக்கி லீக்ஸ் ஜூலியன் தெரியாதாடா உங்களுக்கு என்று கேட்டேன்.. விழித்தார்களே.. என்ன செய்ய... தமிழ் உலகம் அப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது.

உலகின் பல பத்திரிக்கைகளும் ஜூலியனைப் பற்றியும், பத்திரிக்கை சுதந்திரம் பற்றியும், அமெரிக்காவின் அட்டூழியங்கள் பற்றியும் எழுதி வருகின்றன.. நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் தான் முழுமையாக அரசியல் வாதிகளின் வசம் இருக்கின்றனவே.. முதல் பக்கத்தில், ஒரு பிரபலமான கல்லூரியின் விளம்பரம், இரண்டாவது பக்கம் நகை விளம்பரம்.. மூன்றாவது பக்கம் ஆளுங்கட்சியின் சாதனைகள், அப்புறம் முக்கியமாக புதிய திரைப் படங்களின் முழு வண்ணப் புகைப் படங்கள், மற்றும் அவை வெளியிடப் படும் திரையரங்குகள், கடைசியாக விளையாட்டு இப்படி முன்னமே தீர்மானிக்கப் பட்ட கட்டங்களுக்கு இடையே, தகவல்கள் இணைக்கப் படுகின்றன நமது பத்திரிக்கைகளில்..

ஒரு விஷயத்தை பூதாகரமாக்கி மக்களை அதற்கு எதிராக திசை திருப்பவும் இவர்களால் முடிகிறது.. முக்கியமான விஷயத்தைப் போடாமல் நீர்த்துப் போக வைக்கும் வித்தைகளும் இங்கே நடக்கின்றன.

ஜூலியனைப் பற்றி அறிந்த ஊடகங்களும் மக்களும் தங்கள் எதிர்ப்புகளை அமெரிக்காவுக்கு எதிராக எழுப்புகின்றனர். ஆனால் இது போதாது.அவர் எதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.. எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கவே செய்கிறான். அவன் தான் இது போன்ற தேசப் பற்றுப்படங்களை எல்லாம் பார்க்கும் போது நம்மைக் கை தட்டச் செய்கிறான்.

ஜூலியன் நினைத்து இருந்தால், அமெரிக்காவுடன் பேரம் பேசி இருக்க முடியும்.. ஏன் செய்யவில்லை..? நமக்குள் ஒளிந்திருக்கும் நல்லவன் அவருக்குள் ஓடி ஒளிந்திருக்கவில்லை. அவன் சாமானியப் பட்டவன் இல்லை. ஒரு வல்லரசையே கிடு கிடுவென நடுங்க வைத்துத் துவைத்துக் காயப் போடும் அளவு மாவீரன். அது தான் தூக்கி வாரிப் போட்டாற்போல ஓடிப் போய் அமுக்கி விட்டார்கள்.

நம்ம ஊரில் ஒருவன் நல்லது செய்தால் தான் போய் துணை நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உலகின் எந்த ஒரு மூலையில் ஒருவன் நல்லதுக்காகப் போராடினாலும், அவனுக்கு நமது தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று நினைக்கிறேன். மீடியா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார். அவர் பாதையில் சென்றால் ஒரே வருடத்தில், நமது அரசியல்வாதிகளின் அனைத்து விஷயங்களும் புட்டு புட்டு வைக்கப் படும்..

உமாஷங்கருக்காகக் குரல் எழுப்பிய போது எல்லோரும் துணை நின்றோம். என்னுடைய குரல் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா வராதா என்றெல்லாம் அப்போது யோசிக்க வில்லை. அதேபோல இப்போது ஜூலியனுக்காக குரல் எழுப்புகிறேன். குறைந்தது என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களுக்கவது இவரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன். அது தான் இவருக்கு நாம் கொடுக்கும் கை என்று நான் நினைக்கிறேன்.

ஜூலியன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சுடுதண்ணியின் இந்தத் தொடரைப் படியுங்கள்..

http://suduthanni.blogspot.com/2010/11/1.html

சாமக் கோடங்கி

Thursday, November 25, 2010

எளிது எளிது கடத்தல் எளிது..

வணக்கம் நண்பர்களே..!!!

இன்று வீட்டு வேலை காரணமாக அலுவலகத்திலிருந்து கொஞ்சம் நேரமாக வர வேண்டிய சூழ்நிலை. வண்டியை வீட்டுக்கு விரட்டினேன்.. வீரபாண்டிப் பிரிவைத் தாண்டும் போது நாலரை மணி இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் பள்ளிக் குழந்தைகள் கூட்டம். எல்லோரும் நகரப் பேருந்துக்காக காத்திருந்தனர். சைக்கிளைப் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அலசிக்கொண்டே பள்ளிச் சிறுவர்கள் ஓட்டிக் கொண்டு இருந்ததால் கொஞ்சம் பதனமாகவே எனது வண்டியை ஓட்டினேன்.

சிறிது தொலைவில் இரண்டு பிஞ்சுக் கைகள் "லிப்ட்" கேட்டு வண்டியை நிறுத்தின. என்ன அவசரமாக இருந்தாலும் பொதுவாக சும்மா தானே போகிறோம் என்று ஏற்றிக் கொள்வது வழக்கம்.

"அண்ணா அண்ணா சாந்தி மேடு போகணும்"..

ஏறுப்பா.. டே டே ஒருத்தனுக்குத்தாண்டா எடமிருக்கு....

அண்ணா ரெண்டு பேரும் ஏறிக்கறோமே....???

(நண்பர்களை ஏன் பிரிப்பானேன்) ஏறுங்கப்பா...

ஏறியாச்சா... என்னங்கடா உங்கள விட உங்க பேக் எல்லாம் வெய்ட்டா இருக்கே...

சைடுல கெட்டியா பிடிச்சிட்டு உக்காருங்க போலாமா ...

புடிச்சாச்சு போகலாங்கண்ணா....

உங்க பேரென்னங்ண்ணா...?

பிரகாசு...யாருப்பா அது ரெண்டு தோளிலையும் கை போட்டு இருக்கறது..? நான் எப்படி வண்டி ஓட்ட..??

அண்ணா நான் சரியாத்தான் உக்காந்து இருக்கேன் இவன் தான்.. டேய், பின்னாடி இருக்குற கம்பிய புடிச்சுக்கடா.. அண்ணா வண்டி ஓட்டட்டும்..

வழி நெடுக சிறு பிள்ளைகள் தோளில் சில மலைகளைச் சுமந்து கொண்டு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தனர்..பாவம்.. ரெண்டு பேரை நான் கூட்டிக் கொண்டேன்.. மற்றவர்களை...

ஏம்ப்பா, வண்டி ஒண்ணும் வரலையா..?

ஆமாங்கண்ணா... ரொம்ப நேரமா நிக்கறோம் பஸ் வரவே இல்லைங்கண்ணா.. டியூஷனுக்கு நேரம் ஆச்சுங்கண்ணா...

எப்போதும் இந்த நேரம் இப்படித்தான் இருக்குமா...???

முக்கால் வாசி நாள் இப்படித்தாங்கண்ணா...

இங்கதாண்ணா.. எறங்கிக்கறோம்... டேங்க்சுங்ண்ணா...

சரிப்பா பாத்துப் போங்க.... டாடா காட்டிக் கொண்டே ஓடினர்..

கியரைப் போட முயல, அங்கிருந்து வேறு இரண்டு சிறுவர்கள் வந்தனர்.. அண்ணா பெட்ரோல் பங்கு போகணும்..

(அடப்பாவமே..)ஆட்டாம ஏறுங்கப்பா...

ஏம்ப்பா எப்பவுமே இப்படித்தானா..??

ஆமாங்கண்ணா.. யாராவது லிப்ட் குடுப்பாங்க...

எந்த ஸ்கூல்ப்பா நீங்க எல்லாம்...??

நாங்க தம்புங்கண்ணா..

ஆமா நான் எறக்கி விட்டனே.. அவுங்க ரெண்டு பெரும் எந்த ஸ்கூலுன்னு தெரியுமா..??

அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...

ஒரு நகரப் பேருந்து எதிரில் வர உள்ளே மூன்று வண்டிக்கான கூட்டம்.. வண்டியே ஒரு பக்கம் சாய்ந்து இருந்தது.. வெளியில் நான்கு வண்டிக்கான கூட்டம்.. அத்தனையும் சின்னப் பிஞ்சுகள்.. மேலே இருக்கும் கம்பி யாருக்கும் எட்டாது.. எப்படி உள்ளே நசுங்கி நிற்கப் போகிறார்களோ..?? இதில் முதுகில் மூட்டை வேறு..

ஆ அந்த மரத்துகிட்ட நிறுத்துங்கண்ணா...

பாத்துப் போங்கப்பா...

வழி நெடுக ஒரே சிந்தனை...

நானாக இருந்ததால் இறக்கி விட்டேன்.. இதுவே யாராவது கடத்தும் எண்ணத்துடன் வந்திருந்தால்...? பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொல்லித்தான் அரசுக்குத் தெரியுமா..? இரவு நேரமாகி விட்டால் இலவசப் பயண அட்டை செல்லாதோ என்னவோ பேருந்துக்குள் நசுங்கியாவது சென்று விட வேண்டுமென்று துடிக்கும் அந்தப் பிசுகளைப் பற்றி அரசுக்கு என்ன கவலை..? விடப்படும் கொஞ்ச நஞ்ச வண்டிகளாவது தரமாக உள்ளனவா..? தினமும் ஓரிரண்டு பேருந்துகள் பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிற்பதைக் காண்கிறேன். இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் உத்திரவாதம்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாடகை ஆட்டோ வைக்கிறார்கள்.. வாடகைக் கார் (?!?) வைக்கிறார்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு என்ன வழி..?

ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??

நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. இரண்டு பேருந்துகள் அதிகமாக விட என்ன ஒபாமாவிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டுமா..??(ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது).

இனி கடத்த வேன் எல்லாம் தேவை இல்லை.. பைக் போதும். அரசு ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்.. எவன் வேண்டுமானாலும் எந்தக் குழந்தையை வேண்டுமானாலும் கடத்திக் கொன்று குட்டைகளில் வீசிச் செல்வார்கள்.

(ஆள்பவர்களின் பசங்க எல்லாம் கூலா கான்வென்ட்ல படிச்சிக்கிட்டு இருப்பாங்க)

சாமக்கோடங்கி

Sunday, November 21, 2010

சுற்றுலா... பகுதி 2 - திருநெல்வேலி.

அனைத்து நல் உள்ளங்களுக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சுற்றுலான்னு நெனச்சாலே, குளுகுளுன்னு, பச்சைப் பசேல்னு, மலைமேல.... இப்படி எல்லாம் தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, சும்மா ஒரு பயிற்சிக்காக திருநெல்வேலி போய் அது எனக்கு மிகச்சிறந்த சுற்றுலா அனுபவமாகியது.

அசோகா ட்ரஸ்ட் என்ற அமைப்பு, திருநெல்வேலியில், தன்னுடைய கிளையை அமைத்து, சுற்றுச் சூழல் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதன் விரிவான விவரங்களை "சமூக ஆர்வலர்களுக்கு என் அனுபவம்" என்ற பதிவில் பகிர்ந்திருந்தேன்.அந்த இரண்டு நாள் அனுபவம் மறக்க முடியாதது.

திருநெல்வேலி மாவட்டத்தை நெருங்கும்போதே சிவப்பான, வறண்ட மண்ணும், பாலைவனத்தில் முள் மரங்களை நட்ட வைத்ததைப் போன்ற காட்சிகளும், தெரிய ஆரம்பித்தன. பேருந்து நிலையத்தில் இருந்து அயன் சிங்கப்பட்டிக்கு, தனியாக ஒரு ஒருமணி நேரப் பயணம், அந்த நடத்துனர், அழகான திருநெல்வேலித் தமிழில் பேசி, பேருந்தையே கலகலப்பாக நடத்திய விதம் மறக்க முடியாதது. வடநாட்டைச் சேர்ந்த பாஷை தெரியாத சில செம்பட்டைத் தலை இளைஞர்கள், வழிமாறி இந்தப் பேருந்தில் ஏறியிருக்க, பயணச்சீட்டு கொடுக்கும் அந்த சமயத்திலும் கூட, அவர்களுக்கு சைகை மூலம் பரிவாக விளக்கி இறக்கி விட்டார். பழந்தமிழர்களின் பரிவும் விருந்தோம்பலும், உபசரிப்பும் எப்படி இருந்து இருக்கும் என்று என் கண் முன்னால் வந்து போயிற்று.

நாங்கள் தங்கியிருந்த இடம் அயன் சிங்கப்பட்டி, அதன் அருகே ஜமீன் சிங்கம்பட்டி, பின்னர் மணிமுத்தாறு ஆணை, அப்புறம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்று நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.

முதல் நாள் சனிக்கிழமை இரண்டு சைக்கிள்களை எடுத்துக் கொண்டு மணிமுத்தாறு அருவிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம், ஆனால், அணைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். காரணம், புலிகள் நடமாட்டம் உள்ள சாலைப் பகுதி. அதனால், பெரிய வாகனங்களில் வருபவர்களை மட்டுமே அனுமதித்தனர். அதனால் அருவிக்குச் செல்லாமல் அணையை மட்டுமே சுற்றி பார்த்தோம். மண்வாசனை கமழும் சாலையில், சைக்கிளை அமுத்திக் கொண்டு ஆணை வரை சென்றதை இன்னமும் மறக்க முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவ்வளவு அகண்டு விரிந்த அணைக்கட்டில், இருவர் மட்டுமே நின்று கொண்டு இருந்தோம். கார்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அணைக்கட்டின் மேல் கட்டப் பட்டிருந்த ஒரு இரும்புப் பாலத்தில் இருந்து பார்க்கும்போது, நெல்வயல்கள் அழகாகக் காட்சி அளித்தன. சில அரிய இனப் பறவைகளும் காணக் கிடைத்தன.

இரண்டாம் நாள், ட்ரஸ்டில் இருக்கும் மதிவாணன் என்பவரிடம் கேட்டு ஒரு RX-100 வாங்கிக் கொண்டோம். இந்த முறை எப்படியேனும், அருவிக்குச் சென்று விடவேண்டும் என்று. அநேகமாக RX-100 ல் தயாரிக்கப் பட்ட முதல் வண்டி அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். எந்த கியரில் வண்டி ஓடியது என்று அதற்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

வழியில், ஒரு சிறிய கடையில் காலை உணவு எடுத்துக் கொண்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இரண்டு பேரும் ஆளுக்குக் குறைந்த பட்சம் பதினைந்து பதினாறு இட்லிகளை உள்ளே தள்ளி இருப்போம். இடையிடையே உளுந்து வடைகளையும் இடைச்செருகல்களாக அமுத்திக் கொண்டு இருப்போம். என்ன சுவை.. இப்பொழுது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. நிறுத்த மனமில்லாமல் முடித்துக் கொண்டு பில்லைப் பார்த்து அதிர்ந்தே விட்டோம். வெறும் முப்பைந்து ரூபாய். என்னவென்று சொல்ல. வயிறை விட மனது நிறைந்தது என்பதே உண்மை.

லஞ்சம் கேட்ட செக் போஸ்ட் அதிகாரியிடம் காசையும் கொடுத்து விட்டு, கூடவே, நாங்கள் அராய்ச்சி செய்ய வந்திருக்கிறோம் என்பதையும் சொல்ல அவர் உள்ளே போய் யோசித்து விட்டு ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தாரோ என்னவோ, காசைத் திருப்பி எங்கள் கையிலேயே கொடுத்து அனுப்பி வைத்தார். அதற்குப் பின் தான் த்ரில்லிங் மலைப்பயணம் ஆரம்பமானது.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால், எப்படி உருண்டை உருண்டையான கற்களோடு காட்சி அளிக்குமோ, அது போன்றதொரு சாலை. குலுங்கிக் குலுங்கி மிகவும் அபாயகரமான, வளைவுகளில் வளைத்து ஓட்டும்போது தான் புரிந்தது, ஏன் எங்களை சைக்கிளில் அனுமதிக்கவில்லை என்று. "டே மாப்ள, எதுக்கால ரோடே தெரிய மாட்டேங்குதே, இந்த வண்டி வேற எப்ப பார்ட் பார்ட்டா கழண்டி விழும்னே தெரியல, இப்ப திடீர்னு ஒரு புலி துரத்துனா என்னடா பண்றது..?" என்று என் நண்பன் கேட்க, உடம்பு நடுங்கினாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அருவியை அடைந்து விட்டோம். சும்மா சொல்லக் கூடாது, அந்த RX-100ஐ மெச்சியாக வேண்டும்.

சிறிய அழகான அருவி, கூட்டம் குறைவாக இருந்ததினால் வெகு நேரம் இருந்தோம். எனக்கு இப்பவும் தோன்றும் ஒரு விஷயம் இதுதான். கிராமங்களில் தான் எவ்வளவு அழகுகள் ஒளிந்து கிடக்கின்றன.?! இதுபோன்ற தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை அழகு ததும்பும் கிராமப் பகுதிகள் உள்ளனவோ. கிராமங்களை அனுபவிப்போம், சுவாசிப்போம்.

அங்கே செய்ததிலேயே அதிக செலவு என்பது திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் தான். மற்றபடி, இரண்டு நாள் சாப்பாடு, அப்புறம் சூப், சாப்பிட சின்ன சுத்து முறுக்கு என்று அத்தனையும் சேர்ந்து நூறு ரூபாயைத் தாண்டவில்லை.

சாமக்கோடங்கி

Sunday, November 14, 2010

கோயம்புத்தூர் - பகுதி 1

நண்பர்களே,

கோயம்புத்தூர் பற்றி எழுத வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம். நிறைய எழுதலாம். தமிழமுதத்தில் வேந்தர் அவர்கள் பதிவிற்கு என்னுடைய கருத்தை இணைத்திருந்தேன். அதுவும் முக்கியமான விஷயம் என்பதால் அதை இங்கே கொடுக்கிறேன்.

இது சற்று மேலோட்டமான பதிவு. இன்னும் ஆழமான விஷயங்களை அடுத்த பதிவில் பகிரலாம்.
************************************************************************
வேந்தர் :சரவணம்பட்டியில் என் நண்பர் 18 அறைகள் கட்டி வாடகைக்குனு அறிவித்தார், 15 நாளில் அத்தனையும் ஆக்கப்பை ஆகிவிட்டன.
ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.

சென்னையில் ஆப்பக்கடைனு ஒரு கடைக்கு போனோம். சேவை செய்பவர்கள் நேபாளிகள். காஞ்சிபுரத்திலும் இது போல் கண்டேன்.

கோவையில் கீழ்நிலை தொட்டிக்கு ஒரு மூடி வாங்க கருங்கல் பலகை வாங்க போனோம். பெரிய பலகையை அளவுக்கு அறுக்க வேண்டும். மேலாளர் மேஸ்திரியை அழைத்து தமிழில் சொன்னார். அவ்ர் த்ன கீழ் பணியாட்களுக்கு இந்தியில் விளக்கினார். பலகை அறிக்கப்பட்டு என் காருக்கு வந்தது


தமிழ் நாட்டில் வடவர்கள் எண்ணிக்கை பல்கி வருது.
இந்தி மாநிலங்களில் தமிழ் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

பூனைக்கு இது காலம்.
**************************************************************************

சாமக்கோடங்கி:

//ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.//

கேஜி பற்றி எனக்குத் தெரியாது..

ஆனால் ராபர்ட் பாஷில் அப்படி இல்லை... எங்கள் அலுவலகத்தில் இருபது
சதவிகிதம் வெளி மாநிலத்தவர்கள் தான்...முக்கியமாக கர்நாடகம், ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. அதுவும் கர்நாடகாவில் இருந்து கிளை
கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டதால் வந்தவர்கள்.. அதற்குப் பிறகு
பணியமர்த்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்க்காரர்களே.. ஒரு
வகையில் LMW, Pricol, Shanthi Gears, Roots , CRI போன்ற கோவையை மையமாக
வைத்து வெகு காலமாக கோலோச்சி வந்த நிறுவனங்களுக்கு BOSCH ன் வருகை ஒரு சிம்ம சொப்பனமே... வேலைப்பளுவுக்கு, குறைவாக சம்பளம் கொடுத்தல், அதிக வேலை வாங்குதல், மேலதிகாரியின் அரசியல், ஆதிக்கம் போன்றவற்றால் ஆட்டம் கண்டு வந்த மக்களுக்கு BOSCH ன் வருகை மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவை மிகப்பெரிய மாறுதலாக உள்ளது... இதை நான் சொல்லவில்லை... என்னுடைய இரண்டரை வருட அனுபவத்தில், எத்தனையோ பேர் மேற்கூறிய கம்பெனிகளில் இருந்து விலகி இங்கே வந்துள்ளனர்...

கொடுமை என்னவென்றால், கோயம்புத்தூரின் உள்கட்டமைப்பு, புதிய பன்னாட்டு
நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.. "விலைவாசி ஏற்றம் உள்ள
அளவுக்கு இங்கே வசதிகள் இல்லை" என்பது ஒரு பொதுவான குற்றச் சாட்டாக
உள்ளது... சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற ஒன்றைக் காட்டி பன்னாட்டு
நிறுவங்களை கவரும் அரசு அதற்கேற்ற வசதிகளைச் செய்யா விட்டால்,
கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்டு வாழும் அப்பாவி மக்கள் பாதிக்கப்
படுவார்கள்.. இப்போதே பாருங்கள்.. அதே ரோடுகள்.. ஆனால் ஏகப்பட்ட BOSCH,
CTS, DELL மற்றும் பல புதிய கம்பெனிகளின் பணியாளர் பேருந்துகள் நிதம்
நிதம் உலவி போக்குவரத்தை அதிகப் படுத்தி விட்டிருக்கின்றன... அவர்களைக்
குறை கூற முடியாது.. பணியாளர்களுக்குப் பேருந்து வசதி ஒன்றும்
செய்யவில்லை என்றால் அவர்கள் தனியாக வண்டி வைத்தோ, அல்லது நகர(நரக)
பேருந்துகளில் தான் கம்பெனிக்கு வர வேண்டும்.. கிட்டத்தட்ட 6000
ஊழியர்கள்(BOSCH, CTS,DELL, KGISL) சரவணம்பட்டிக்கு தனித்தனியாக வந்தால்
எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை..

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஆனால் கேஜி நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சிறப்புப்
பொருளாதார மண்டலத்தில் கட்டப் படுகின்றன... விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு இந்த SEZ வந்துள்ளது.. இப்போது உள்ளே அடுக்கு மாடிக்
குடியிருப்புகளை கேஜி நிறுவனம் கட்டி வருவதோடு விளம்பரமும் ஓஹோ.. 35
லட்சத்திலிருந்து ஆரம்பித்து கொடிகளைத் தாண்டி விற்கப்படுகின்றன
அபார்ட்மன்டுகள்... கொள்ளை லாபம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.. சிறு சிறு
ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ஏற்கனவே சுற்று வட்டாரப் பகுதிகளை ஒன்றும்
அறியாத அப்பாவி விவசாயிகளிடம் பேரம் பேசி ஒரு நல்ல விலைக்கு வாங்கி
பிளாட் போட்டுக் கடை விரித்து வைத்து உள்ளனர்.. இவர்களின் முக்கிய இலக்கு
இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் தான்... வசதிகள் இருந்தால்
போதும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றனர்.. இந்தப் போட்டியால்
விலையை அமோகமாக வைத்து லாபம் பார்க்கின்றனர் இந்த ரியல் எஸ்டேட் சுரண்டல் வியாபாரிகள்..
இவர்களின் லாபத்திற்கு முக்கியக் காரணம் இந்த வடமாநில ஊழியர்கள்..

எப்படி என்றால், இவர்கள் கட்டிடங்கள் கட்ட உள்ளூர் கட்டிடத் தொழிலார்களை
அழைப்பதில்லை..(புத்தி சாலிகள்.).. ஏனெனில், உள்ளூரிலேயே, மேசன்,
கான்ட்ராக்டர்கள், சிற்றாள் மற்றும் பல்வேறு வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
நிலவுகிறது.. அவர்களும் கூலியை சராமாரியாக ஏற்றி விட்டனர்...(எங்கள்
வீட்டு மதில் சுவரில் ஒரு சிறிய அலங்காரத்தை மூன்று நாட்களாக
செய்கின்றனர் இரண்டு பேர்.. மூவாயிரம் ரூபாய்க்கான உகந்த வேலை இல்லை
அது.. என்ன செய்ய.. ஆட்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்.. பகைத்துக்
கொள்ளவும் முடியாது..)

எனவே, இந்தப் பெரிய பண முதலைகள், மொத்தமாக வடமாநிலத்தில் பஞ்சத்தில்
அடிபட்ட மக்களை, அலேக்காக லாரியில் அள்ளிப் போட்டு நம்ம ஊருக்குக்
கட்டிடத் தொழிலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.. நாட்கூலி அவர்களுக்கு
நூறைத் தாண்டாது(வட மாநிலத்தில் அவ்வளவு பஞ்சமோ..??). கட்டிட வேலை
நடக்கும் இடத்திற்கு அருகேயே, இவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்
ஏற்படுத்தப் படுகின்றன.. முக்கியமாக வாரத்திற்கு இரண்டு நாள், உடம்பு
சரியில்லை, சொந்தக்காரன் இறந்து விட்டான் என்று இவர்கள் வேலைக்கு வராமல்
இருக்க முடியாது..(சொந்த வீடு கட்டியவர்களுக்கு இந்த உள்ளூர்
வேலைக்காரர்கள் செய்யும் இந்த அலம்பல்கள் தெரியும்...). அப்புறம் இன்னொரு
விஷயம், அவர்கள் சொந்த செலவுக்காக முன்பணமும் கேட்பதில்லை...

இது தான் கோயம்புத்தூரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் உலாவுவதற்கான காரணம்..

அப்புறம் இன்னொன்று, இந்த கிரானைட், மார்பில், மற்றும் கடப்பா கல்
வியாபாரிகள்.. இவர்கள் மொத்தமாக கற்களை வடக்கில் இருந்து அள்ளிப் போட்டு
இங்கே வந்து வியாபாரம் செய்து கொள்ளை லாபம் சம்பாரிக்கின்றனர்.. கோவை
மாவட்டம் தடாகம் பகுதியில் வந்து பாருங்கள்.. இவர்கள் எப்படி ஓஹோ என்று
இருக்கிறார்கள்.. இவர்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்று..
இவர்களும் கற்களை அள்ளிப் போட்டு வரும்போது, அங்கே பஞ்சத்தில் அடிபட்ட
மக்களையும் அப்படியே தூக்கிப் போட்டு வந்து விடுகின்றனர்...
****************************************************************************

அனைவரும் பயனடையும் பட்சத்தில் நான் மிகவும் சந்தோஷப் படுவேன். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அரசு உடனே விழித்துக் கொள்ள வேண்டும்.

திடீரென உருவாகும் வளர்ச்சி பல சமயங்களில் ஆபத்தானது.. அது எப்படி இருக்கும் என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சாமக்கோடங்கி

Thursday, October 28, 2010

நான் தீவிரவாதி..

சனிக்கிழமை ராத்திரி பத்தரை மணிக்கு தான் எனக்கு பிரான்க்புர்ட்டில் இருந்து இந்தியாவிற்கு விமானம்... காலை அதிவேக ரயிலில் ஏறி மதியம் பணிரண்டரை மணிக்கெல்லாம் விமான நிலையம் எட்டி விட்டேன்.. உடன் வந்தவர் மூன்று மணி விமானத்திற்காகச் சென்று விட, தனியாக பத்தரை மணி வரை அங்கேயே கழிக்க வேண்டிய கட்டாயம்.. கொஞ்சம் வெளியில் எங்கேயாவது உலவி விட்டு வரலாம் என்றால் முதுகில் ஒரு பை, கையில் அலுவலக மடிக்கணினி, அப்புறம் பெரிய மற்றும் சிறிய ட்ராலி பெட்டிகள். அவைகளைப் பாதுகாப்பு அறைக்குள் வைத்து விட்டுச் செல்வது உசிதமாகப் படவில்லை, மற்றும் வெளியில் சென்றால் சரியான சமயத்திற்குச் சென்று திரும்பி வர வேண்டும். கையில் வைத்திருக்கும் பர்ஸ், பாஸ்போர்ட் சகிதங்கள் தொலைந்தும் விடக் கூடாது. நண்பர்கள் நிறையக் கூறி இருந்ததால் மொழி தெரியாத ஊரில் விபரீத முயற்சி கூடாது என்று அங்கேயே உக்கார்ந்து விட்டேன்..


சும்மா உக்கார்ந்து அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. வருகின்ற போகின்ற போலீஸ்காரர்கள் எல்லாரும் ஒரு தீவிரவாதியைப் பாக்குற மாறியே பாத்துகிட்டு இருந்தாங்க.. பக்கத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணி வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.. பார்ப்பதற்கு இரண்டு பெரும் சேர்ந்து கள்ளக் கடத்தல் செய்வதுபோல் தோன்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. இரண்டு போலீசார் நேராக எங்களிடத்தில் வந்து எங்களிடம் பாஸ்போர்ட்டை கேட்டனர்.. எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.. அந்த ஆப்பிரிக்க பயணியும் சென்று விட இதே போல் மேலும் இரண்டு முறை தனித்தனி போலீஸ் குழுவினர் என்னுடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்து விட்டனர்.. ஏன் என்னை மற்றும் இப்படி சோதனை செய்கிறார்கள் என்று யோசித்தேன்..

கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடுதல், அருகில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசுதல், உலாவுதல் போன்ற ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் சும்மா உக்கார்ந்து இருந்தேன். சும்மா உக்கார்ந்தால் கண் சும்மா இருக்காது. சுற்றி முற்றி பராக் பார்த்துக் கொண்டிருக்கவும் தான் அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.

அப்புறம் என்ன..? நான் கையோடு கொண்டு சென்றிருந்த ராஜேஷ்குமார் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். கடிகாரம் உள்பட அனைத்தும் மெதுவாக நகர்வதாக உணர்ந்த நேரத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்தோடியது அவர் எழுத்து. எப்படியோ ஒரு நாவலைப் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.. அட, இந்த இடைவெளியில் குறைந்தது இருபது போலீசாராவது என்னைக் கடந்து சென்றிருப்பர்.. ஆனால் ஒருத்தர் கூட என்னைச் சோதிக்க வில்லை.

அடுத்த புத்தகத்தை எடுத்தேன். ராஜேஷ்குமார் எப்போதும் தன்னுடைய நாவலின் அத்தியாயங்களுக்கு இடையே நல்ல பல அறிவியல் தகவல்களைக் கொடுப்பார். உதாரணத்திற்கு எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன மருந்துகள், மற்றும் ஸ்டெம் செல்களினால் ஏற்படும் பலன்கள் என்னென்ன போன்றவை. என்னுடைய இரண்டாவது புத்தகம் ஒரு ராணுவ சம்பந்தப் பட்ட கதை. அதனால் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்தின் போதும் ஒரு வித்தியாசமான துப்பாக்கி வகையின் படத்தைப் போட்டு அதன் விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.. ரத்த ஓட்டத்தைப் போன்ற விறுவிறுப்பான கதை.

பாதி படித்து முடித்திருந்த போது பின்பக்கம் யாரோ நிற்பதை உணர்ந்தேன். திரும்பிப் பார்க்க இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. ஏன் என்னை இப்படிப் பார்க்கிறார்.. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் உணர்ந்தேன். எல்லாம் நாவல் பண்ணிய பிரச்சினை. அதிலிருந்த துப்பாக்கிப் படம் அவர் கவனத்தைத் திருப்பி இருக்க வேண்டும். கசகச போல சர்ச்சைக் குரிய பொருட்களைக் கொண்டு வந்து விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டு விளக்கவும் முடியாமல் தூதரக ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் வரிசையாக என் மனக்கண் முன்னால் வந்து சென்றனர்.

லேசாக சிரித்து விட்டு, மேலும் இரண்டு பக்கங்களைப் புரட்டினேன்.. என் கேட்ட நேரம் மறுபடியும் அடுத்த பெரிய ராக்கெட் லாஞ்சர் வகை துப்பாக்கியின் படம் போட்டு வருணிக்கப் பட்டு இருந்தது. அப்படியே லேசாக மூடி அட்டைப் பக்கம் தெரியுமாறு கையில் வைத்துக் கொண்டேன். அதில் "கிரைம்" மற்றும் "ராஜேஷ்குமார்" என்று கோட்டை எழுத்தில் எழுதி இருந்தது. ஆனால் தமிழில்..

தம்பி சாமக்கோடங்கி.. ஏதோ உனக்கு நல்ல நேரம்.. அவர் அப்படியே நகர்ந்து சென்று விட்டார். அப்புறம் என்ன.. அங்கே உக்காரவே இல்லை. "பொன்னை விரும்பும் பூமியிலே.. என்னை விரும்பும் ஓருயிரே.." பாடல் ஸ்டைலில் என்னுடைய உடமைகள் அனைத்தையும் ஒரு சக்கர வண்டியில் (உபயம்: பிரான்க்புர்ட் விமான நிலையம்) வைத்து உருட்டிக் கொண்டே அங்கே சுற்றி வர ஆரம்பித்தேன். ஏழு மணி அளவில் செக்-இன் கவுண்டர் திறக்கப்படவும் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்(முகத்தை வைத்து தமிழ்நாட்டுக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்றொரு ஊகம்). சுற்றி வருகையில் மறுபடியும் அவர் கண்ணுக்குப் பட கேட்டே விட்டேன். அவர் கோயம்புத்தூர்காரர் என்று தெரிந்ததும் என்ன ஒரு குதூகலம்... அப்புறம் என்ன.. நேரம் போனதே தெரியவில்லை.


பி.கு :

1.மொழி தெரியாத இடங்களில் நமக்கு முன் அனுபவம் இல்லாத சமயங்களில் சற்று அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நலம். குறிப்பாக விமான நிலையங்களில்.

2.ப்ரான்க்புர்ட் மற்றும் துபாய் விமான நிலையங்களில் சட்டை, பேன்ட்டைத் தவிர காலணி உட்பட அனைத்தையும் கழற்றிச் சோதனை போட்டனர். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தில் கைப்பைகள் மட்டுமே சோதனை செய்யப் பட்டன. கோட்டுகள் மேலங்கிகள் எதுவும் சோதனை செய்யப் படவில்லை. எனக்கு முன்னால் ஒரு பத்து பேர் நிற்கும்போது அந்த ஸ்கேன் சோதனைக்கருவி செயல்படாமல் போனது. இரண்டு சோதனை அதிகாரிகளில் ஒருவர் வாக்கி டாக்கியுடன் வெளியில் பேசிக்கொண்டே அவசரமாகச் சென்றார். இன்னொருவர் அந்தக் கருவி சரியாகும்வரை எங்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் உக்கார்ந்தே இருந்தார். அனைவரும் சோதனை செய்யப்பாடாமலேயே பெங்களுருவிற்குள் அனுமதிக்கப்பட்டோம்.

3.கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி: நீங்கள் ஓடும்போது கோபப் படுகிறீர்களா...? வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்குங்கள்.. நடக்கும்போது கோபப் படுகிறீர்களா..? வேகத்தைக் குறைத்து உக்கார்ந்து விடுங்கள்.. உக்கார்ந்து இருக்கும்போது கோபப் படுகிறீர்களா...? படுத்து ஓய்வெடுங்கள்.. (அதாவது கோபம் வரும்போது நிதானியுங்கள்).

ஓய்வெடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..

நன்றி
சாமக்கோடங்கி

Tuesday, October 26, 2010

ஏதாவது செய்யுங்க.............

விமானத்தில் ஏறியதும் தரைப்பகுதியைக் காண்பிக்கும் காமிராவை என்னுடைய டிவி திரையில் போட்டுக் கொண்டேன்.. விமானம் பறக்கத் துடங்கியது.. என் நாட்டுக்குத் திரும்பும் சந்தோஷம் மனதில். "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.." என்ற பாடலை முனகிக் கொண்டே வந்தேன்.. சும்மா இருந்ததால், மனது பல விஷயங்களை அசை போடத் துவங்கி இருந்தது.

"உங்கள் நாட்டைப் போல வேகமாக எங்கள் நாட்டு ரோடுகளில் வண்டி ஓட்ட முடியாது.. எங்கள் நாட்டின் ரோடுகள் அப்படி..குண்டும் குழியுமாக இருக்கும்.. எங்கள் ஊரில் மாசுக்கள் அதிகம். அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்குவார்கள்.." இதைப் பெருமையாக வெள்ளைக் காரனிடம் சொல்லி தானே பெக்க பெக்க வென்று சிரித்துக் கொண்டு அவர்களையும் வேண்டா வெறுப்பாகச் சிரிக்க வைத்த என்னுடைய உடன் பணிபுரிபவர் நினைவுக்கு வந்தார்..

உங்கள் நாட்டைப் பற்றி நீங்கள் வேறொரு நாட்டினரிடம் சிரிப்பை வரவழைப்பதற்காகக் கூட தவறாகப் பேசுவீர்களா..? ஆனால் ஜெர்மனி நண்பர்கள் இவரைப் பேச வைத்து வேடிக்கை பார்க்கவில்லை(அது அவர்களை எவ்வளவு கூச வைத்திருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்).. "எங்கள் நாட்டில் பல நல்ல கலாச்சாரமும் காலம் காலமாக இருந்து வருகிறது.." என்று கொஞ்சம் நான் ஒப்பேத்த நினைத்தாலும் இவர் விடுவதாயில்லை.. உள்ளே புகுந்து வார்த்தைக்கு வார்த்தை "In india...." என்று ஆரம்பித்து கேவலப்படுத்தத் தொடங்கி விடுவார்..

அப்போது தான் புரிந்தது.. வெள்ளையர்கள் முதலில் நமது செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். போகையில் பிரிவினை ஏற்படுத்தி விட்டுப் போயினர் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன்.. ஆனால் நமது தன்மானத்தையும் ரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து விட்டுப் போயிருக்கின்றனர் என்பது அப்போது தான் புரிந்தது..

உடன் பணிபுரிகிறார் என்கிற காரணத்திற்காக இவரை விட வில்லை.. சுமூக உறவை வளர்க்க வேண்டுமே என்பதற்காக இவரை சும்மா விட வில்லை..பிறகு ஏன் விட்டேன் என்று கேட்கிறீர்களா..?? ஏனெனில் தவறின் மூலம் இவரல்ல.. நமது தாய் நாட்டிலேயே பிறந்து, நமது தாய் நாட்டிலேயே வளர்ந்து ஆளாகி, நம் நாட்டின் செல்வத்தையே அனுபவித்து, இன்று வெளிநாடு செல்லும் அளவுக்கு பெரிய ஆளாகி வளர்ந்து கடைசியில் யாரோ ஒருவனிடம் நமது தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேச அந்த நாக்கு முன் வந்ததற்கு யார் காரணம்...?? இந்த சாக்கடை எப்போது நமது ரத்தத்தில் கலந்தது..??

கறந்த பால் மடி புகாது, கொட்டிய சொல்லை அள்ள முடியாது என்று தெரியாதா..???

"சிறு வயதிலிருந்தே நமது நாட்டில் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவில் ஒன்றும் இல்லை. எந்த விஷயத்திலும் வெளிநாட்டினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் நமது நாடு எப்போதும் இருந்ததில்லை. நமது நாட்டில் லஞ்ச லாவண்யம் தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை, நமது நாடு உருப்படப் போவதும் இல்லை" என்கிற எண்ணம் இன்று இருக்கும் இந்தியர் மட்டும் இல்லாமல் இனி பிறக்கப் போகும் ஒவ்வொரு பிஞ்சுகளின் மத்தியிலும் "தானாக" பதியப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது..

இந்தியாவில் தொழிலை எப்படித் துவங்கலாம் என்று "தொழில் நுட்ப" நுணுக்கத்துடன் ஜெர்மானிய நண்பர்கள் கேட்டவுடன் ..."எங்கள் அரசியல் வாதிகளுக்கு தள்ளுவதைத் தள்ளினால் போதும்.. எப்படியும் துவங்கி விடலாம்.." என்று உச்சகட்டமாகச் சொல்லிச் சிரித்தபோது, எனக்குள் பிறந்த கெட்ட வார்த்தைகளை நான் சொன்னால் பிளாக் உலகில் என் பேர் கெட்டு விடும்.

யாரை நினைத்துக் கோவப்பட..?? எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் என்று நாட்டைச் சுரண்டி இந்தப் பிச்சைக் கார நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கும் இந்த அரசியல் பெருச்சாளிகளைக் கொடும்பாவிகள் என்று வருணித்தால், பிறந்த பொன்னாட்டை வெளிநாட்டவரிடம் கேலிக்கூத்தாக்கும் இவர்களை என்னவென்று வருணிக்க...??

இவர் மட்டுமல்ல நண்பர்களே.. இவரைப் போல இன்னும் பல பேர் நம்மில் உள்ளனர்.. நீங்கள் வெளிநாட்டில் இருப்பின் நீங்களும் இது போன்றவர்களுடன் பழகும் சந்தர்பம் கிட்டி இருக்கலாம்.. இவர்கள் சொந்த வீட்டில் தேவையில்லாத ஒரு ஆணியைப் பிடுங்கக் கூட வக்கில்லாதவர்கள்.. @$%@^^#%&%#!@#$@! (மன்னிக்கவும் நண்பர்களே.. என் மனது சரியில்லை)

சுத்தமான தெருக்கள், பேருந்து வசதிகள், ரயில் நிலையங்கள்,ட்ராம் வண்டிகள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள், எங்கே பார்த்தாலும் ஒழுக்கம், அருமையான உள்கட்டமைப்பு, நன்கு படித்த மக்கள்,இத்தனையும் இருந்த நாட்டில் ஒரு நாட்டில் இருந்து இப்போது பறந்து கொண்டிருக்கிறேன்..

இதோ கடலைத் தாண்டி தரை தெரிகிறது.. பாவப்பட்ட, ஏமாற்றப்பட்ட, சீரழிக்கப்பட்ட, இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு அடிமையாய் இருக்கப் போகிற,என் தாய் தேசம் வந்து விட்டது..

எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மிடத்தில் மனித சக்தி இருக்கிறது.. வளமும் இருக்கிறது.(மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது..). வெளிநாட்டவரை விட வேகமாக முன்னுக்கு வரக்கூடிய உத்வேகம் இருக்கிறது... ஆனாலும்..?!?!?

அரசியல் வாதிகளே.. பலவேறு மூட நம்பிக்கைகளை வைத்து ஓட்டு வேட்டை நடத்தி "அரசியல்" செய்யும் தலைவர்களே.. மக்களை மடையர்களாக மூளைகளை மழுங்கடித்து வைத்திருக்கும் மாமனிதர்களே..
உங்களைப் பார்த்து ஒன்றே ஒன்றை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..
நமது ரத்தத்தில் ஊறியுள்ள இந்த சாக்கடை உணர்வுகளை நீக்க உங்களால் மட்டுமே முடியும்.. நமது தேசத்தைத் தலை நிமிர வைத்து செழுமையாக்க உங்களால் மட்டுமே முடியும்.. பட்டாபட்டி ஒரு நாள் தொலைபேசியில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது.. "நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்" என்று..


ஆனால் இங்கே









என் நாட்டின் மானம் இன்னொரு நாட்டின் முன் மண்டியிடுவதைக் காண மனம் சகியவில்லை..

உங்களிடம் பிச்சையாகவே கேட்கிறேன்..

"ஏதாவது உருப்படியாச் செய்யுங்கள் அய்யா...."


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.



இப்படிக்கு
சாமக்கோடங்கி..

Sunday, September 26, 2010

மனமூடி - 3

மேட்டுப்பாளையம் காரமடை ரயில்வே கேட் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ஒரு கேட். காலையில் மற்றும் மாலையில் வாகன நெரிசல் ஏற்படும் நேரங்களில் சரியாக கேட் போடப்பட்டு அனைவருக்கும் தொந்தரவு தரும் இடம்.கேட் போடப்பட்டால் லாரிகள் எல்லாம் ஓரமாக நிற்க,தனியார் பேருந்துகள்(ரோட்டின் ஏக போக உரிமையாளர்கள்) மற்றும் இரு சக்கர வாகனங்கள் வலது புற இடைவெளி தங்களுக்கே விடப்பட்டதாக நினைத்துக் கொண்டு முன்னே போய் கேட்டை முட்டிக் கொண்டு நிற்பர்.

கேட் திறந்து விட்டால் தான் இருக்கு களேபரமே.. ஒழுக்கமாக இடது புறத்தைப் பின்பற்றி நின்றால் இரண்டு நிமிடங்களில் கேட்டை கடந்து செல்லலாம் ஆனால் இவர்கள் அவசரப் பட்டு குறுகிய இடைவெளியில் இரண்டு பெரிய வாகனங்களை நுழைத்து விட்டு வண்டியை அனைத்து விட்டு நீ எடு நீ எடு என்று முட்டிக் கொண்டு நிற்பார்கள்.. நம் மக்களின் மனோ நிலையை ஆராயும்போது யாருக்கும் இங்கே பொறுமை இல்லை என்று முடிவுக்கு வரலாம் தானே...?

அன்று ஒரு காலை என் இருசக்கர வாகனத்துடன் கேட்டை நெருங்குகையில் சரியாக கேட் போடப்பட்டது.ஒரே நிமிடத்தில் எனக்குப் பின்னாலும் கேட்டுக்கு அப்பாலும் சரியான கூட்டம் சேர்ந்து விட்டது. (வழக்கம்போல் வலது பக்கம் வழிவிடாமல் நிறைய வண்டிகள் சேர்ந்து விட்டன. நொந்து கொண்டேன்.)கேட்டுக்கு அப்பால் ஒரு அம்பாசடர் முழுக்க ஆட்களை நிரப்பி நின்று கொண்டிருந்தது. வண்டிக்கு உள்ளே அனைவரும் சற்று கவலையுடன் காணப் பட்டனர்.அந்த வண்டி ட்ரைவர்,அருகில் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர் ஒருவரை அழைத்து ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து கேட்டின் இப்புறமிருந்த எங்களைப் பார்த்து சத்தமான குரலில் பேசினார். வண்டியில் இருப்பவர்களின் உறவுக்காரர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் இருப்பதாகவும் மிகவும் அவசரம், வண்டிகள் கொஞ்சம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

ரயில் வந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்...!!! ஒரு முப்பது வினாடிகளில் வலது புறம் நின்று கொண்டிருந்த வண்டிக்காரகள் அனைவரும் பின்னாலேயே சென்று கிடைத்த இடப்புற சந்துகளில் சொருகி நின்று கொண்டனர். புதிதாக எதுவும் தெரியாமல் வலது புறம் காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது என்ற மதப்பில் முறுக்கிக் கொண்டு வந்த வாகனங்கள் அனைத்தையும் நின்று கொண்டிருந்த அனைவரும் ஒரே குரலில் மிரட்ட, அவர்கள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டனர். ரயில் போனதும் கேட்டைத் தூக்க முடியவில்லை. அதில் ஏதோ ஒரு இயந்திரக் கோளாறு. கேட் கண்காணிப்பாளர் என்ன செய்வதென்று திகைப்பில் நிற்க நின்று கொண்டிருந்த மக்கள் தாங்கள் செல்வதைப் பற்றிக் கூடக் கவலைப்பட வில்லை, அந்த அம்பாசடர் வண்டி எப்படியாவது முதலில் செல்ல வேண்டும் என்று ஒருமித்து யோசித்தனர். இரண்டு மூன்று பேர் உடனடியாக இறங்கி கேட்டைத் தூக்கப் பிடித்தனர். அந்த வண்டி தாண்டியதும் நமது ஆட்கள் பழையபடி முட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆக சில நேரங்களில் மனிதனின் மனமூடி கழன்று மனிதநேயம் எட்டிப் பார்க்கிறது.பத்துப் பதினைந்து நிமிடங்கலானாலும் ஒதுக்க முடியாத அந்த நெரிசல் முப்பதுக்கும் குறைவான நொடிகளில் ஒதுக்கப்பட்டது எப்படி..? மக்கள் ஒருமித்துச் செயல்படும்போது அதன் சத்தி அபாரமானது அல்லவா..?

இன்று ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாமல் முறுக்கிக் கொண்டு சென்ற ஒரு தனியார் பேருந்தைப் பார்த்து மறுபடியும் மனதில் இதே கேள்வி எழுந்தது. இளங்கோ ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பின்னால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம். இதே போலத்தான் ஒரு அவசர ஊர்திக்கு வழிவிடுவதும். ஏன் அந்த தீயணைப்பு வண்டி உங்கள் வீட்டில் விழுந்த தீயை அணைக்கக் கூட சென்று கொண்டிருக்கலாம். அந்த அவசர ஊர்தியில் உங்கள் உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். யார் கண்டார்...?

மனிதன் அவசர கதியில் உழைப்பதும் அவனும் அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லவா..? அதை இன்னொருவன் குடியைக் கெடுத்துப் பெறலாமா..? ஆகவே மனித நேயம் வெளிப்பட வேண்டிய இடங்களில் மனமூடிகளை கழற்றி எறிவோம்...

----------------------------------------------------------------

இருங்கப்பா.. இன்னும் முடியல.. நானாவது சின்ன பதிவு போடறதாவது..

இன்னொரு மனமூடியைப் பற்றியும் இப்போதே தெரிந்து கொள்ளலாம். இன்றைய கூட்ட நெரிசலில் நடத்துனரின் பாடு அதோ கதி தான். அவர் கத்துவதற்கு ஏற்றாற்போல் தான் நமது மக்களும்.காலையில் வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும்வரை படியில் நிக்காதே உள்ளே வாங்க, சில்லறையை கையிலேயே வைங்க, வழிவிட்டு நில்லுங்க, டிக்கட்ட கேட்டு வாங்குங்க.. அப்படி இப்படின்னு கத்திகிட்டே இருக்க வேண்டிய நிலைமை. அவர் சுடுதண்ணி கொட்டினது மாதிரி கத்துறது இல்லாம பேருந்தில் பயனிப்பவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.

ஒரு முறை ஒரு அரசுப் பேருந்தில் ஏறும்போது நடத்துனர், "உள்ளே வர்ற தம்பி, தங்கக் கம்பி.. வழிவிடுங்க ராசாக்களா..." என்று ஏற்ற இறக்கமான குரலில் அழகாகப் பேசினார். எனக்கும் சிரிப்பு சுற்றி இருந்தவர்களுக்கும் சிரிப்பு.."பெரியம்மா உங்க ஸ்டாப்பு வந்துருச்சு.. பாத்து இறங்குங்க தாயி.. அப்பா மக்கா அம்மாவ கொஞ்சம் இறக்கி விடுங்க.. யப்பா டிரைவரு, விசிலடிக்கற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா...", "சில்லறை இல்லையின்னா கவலைய விடுப்பா.. அதுக்குதான நானிருக்கேன்.. இந்தா பிடி டிக்கட்டு, இந்தா காச வெச்சு சந்தோஷமா இரு ரை ரைட்..." இப்படி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். அவரின் கோமாளித்தனமான(?!!?!)செய்கை அனைவரையும் கவர்ந்தது.. நெரிசலையும் மறந்து சந்தோஷமாகப் பயணித்தோம். நாலு பேர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் கோமாளியாக இருப்பதில் தவறில்லை தானே..இவர் கொஞ்சம் வித்தியாசமான நடத்துனர் தான்.அவருக்கும் ரத்தக்கொதிப்பு ஏறாது. இன்னொரு அதிசயம்(!?!) அந்தப் பேருந்தின் படிகளில் நின்று ஒருவர் கூட பயணிக்கவில்லை.!!
ஆக எவ்விதத் தருணத்தையும் சந்தோஷமாக மாற்றும் வித்தை அவரவர்கள் கையிலேயே உள்ளது. கொஞ்சம் நமது மனமூடிகளைக் கழற்றி வைத்தால் போதும்.

நன்றி..
பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி

Saturday, September 18, 2010

தகடு வைத்தால் தான் உயிர் பிழைக்கலாம்....

அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கங்கள்.. சந்தித்து கொஞ்ச நாள் ஆகி விட்டது.. என்னடா இவன் கேப்புல மந்திரம் தந்திரம்னு போய்ட்டானா..? தகடு கிகடுன்னு ஆரம்பிசிட்டானே'ன்னு நினைக்கிறீங்களா...? தலைப்பில் பொடி வெச்சு எழுதணும்னு ஆசை.. இப்பத்திக்கு பிரபலம் எந்திரன் தான்.. அதை வெக்கலாம்னு பாத்தா இன்ட்லி புல்லா இப்ப அதுதான் ட்ரெண்டு.. அது தான் இப்படி ஒரு தலைப்பு.. வேற என்னத்த பேசப் போறேன்..? வாங்க நம் உயிரை மட்டும் அல்ல, நம் உலகத்தைக் காப்பாற்றப் போகும் ஒரு தகடைப் பற்றிப் பார்ப்போம்..

சோலார் தகடுகளை உபயோகியுங்கள், சுற்றுச் சூழலைக் காப்பாற்றுங்கள் என்கின்ற பிரச்சாரங்கள் தொடங்கி ரொம்ப நாட்களாகி விட்டது.. எத்தனை பேர் செவி மடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதில் உள்ள சில விஷயங்களைப் பற்றி அலச நினைக்கிறேன்.

சூரியன் என்கின்ற ஒன்று தான் நமது வாழ்வின் ஆதாரமாக உள்ளது. நமது பூமியை மட்டும் இல்லாமல் பல கோள்களையும் தூசு துகள்களையும் மற்றும் பல்வேறு ஜீவராசிகளையும் (சூரியக் குடும்பத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், நம்மால் உணர முடியாத உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம்)தன்னோடு பிணைத்துக் கொண்டு சுழலும் ஒரு அதிசயம். அப்படிப்பட்ட சூரிய ஒளியைக் கொண்டே நாம் உயிர் வாழ்கிறோம். ஆம், புவிப்பரப்பின் மேல் பட்டு தெறித்தது போக (சராசரியாக 30%)மீதி கிடைக்கும் 70% ஒளியைக் கொண்டே நமது புவியின் தட்பவெப்பநிலை உயிர்கள் வாழ ஏதுவாக உருவாகி உள்ளது. அது மட்டுமா, தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சையத்தைத் தயாரிக்கின்றன. கடல் நீரை ஆவியாக்கி மழையாகத் தருவிப்பதும் நமது சூரியத் தந்தை தான்.(பூமியைத் தாய் என்று சொல்லி விட்டோம் அதனால் தான்)

பூமி உருவாகி குளிரத் தொடங்கிய பிறகு சூரிய ஒளியின் உதவி கொண்டே உலகின் முதல் உயிரின வகை(ஆல்கே) உருவாகியதாக அறிவியல் கூறுகிறது.அது மட்டும் அல்லாமல் நமது உடலும் அது இயங்கத் தேவையான பல்வேறு சக்திகளை சூரிய ஒளியில் இருந்து நேரடியாகப் பெறுகிறது. அதனை உணர்ந்ததால் தான் பெரியோர் சூரிய வணக்கம், காலையில் மற்றும் மாலையில் உலவுதல் போன்ற பல்வேறு விதமான நடைமுறைகளை உருவாக்கி வைத்து உள்ளனர். சூரியனைக் கடவுளாக வணங்கும் பழக்கம் பல்வேறு மதங்களில் காணப்படுகிறது.

சரி சரி ரொம்ப நீளுது.. சீக்கிரம் பதிவுக்குள்ள போகலாம்(என்னது..? இன்னும் பதிவுக்குள்ளயே போகலையா...)இப்படி சூரிய ஒளியைத் தேக்கி வைத்த தாவர வகைகள் பின்னாளில் மண்ணோடு மண்ணாகி சிதைந்து மக்கி உருவாகியது தான் எரிபொருட்கள். இது சும்மா இரண்டு மூன்று நாட்களில் நடக்கும் விஷயம் இல்லை. பல லட்சக் கணக்கான வருடங்கள் மண்ணுக்கடியில் அதிகப் படியான அழுத்தத்திலும், வெப்பத்திலும் உருவாகியவை தான் இன்றைய நிலக்கரியும், பெட்ரோலியமும். ஆனால் மனிதன் தான் சிறு தேவைகளுடன் திருப்தி அடையாதவன் ஆயிற்றே..

பூமிக் கருப்பைக்குள் இருப்பதைச் சுரண்டி எடுத்துத் தின்னும் நமது அசுரப் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல லட்ச வருட செல்வங்கள் நொடிக்கு நொடி அழிக்கப் படுகின்றன. அதுவும் பெட்ரோல் உபயோகிக்க ஆரம்பித்து இந்த சில வருடங்களிலேயே இந்த நிலைமையை நாம் எட்டி உள்ளோம்(புள்ளிக் கணக்குகள் தருவதைத் தவிர்க்க நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்தப் பதிவை முடிக்க முடியாது).. இனி சுரண்ட ஒன்றும் இல்லை மக்களே.. இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டு அம்போ என்று நிற்கிறாள் நமது தாய்..

சரி.. இனி.. தந்தை தான்.(ஏன்னா அவர் மட்டும் தான் பாக்கி). அதனால் மக்களே எல்லோரும் சூரிய ஒளித் தகடுகளை உபயோகிப்போமாக......... என்று மேம்போக்காக முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இங்கே என் முன் வைக்கப் பட்டுள்ள கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி: நான் மாதா மாதம் ஐந்நூறு ருபாய் மின் கட்டணம் செலுத்துகிறேன். மின்சாரம் வருகிறது.அப்புறம் எதற்கு லட்சக் கணக்கில் செலவு செய்து சோலார் இணைப்பைப் பெற வேண்டும்..?

பதில்: விஷயங்களை மேலோட்டமாகப் பார்ப்பது தவறு. இன்று வேண்டுமானால் நமக்கு ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கலாம்,ஏனென்றால் நிலக்கரி கிடைக்கிறது, யுரேனியம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு..?
தினம் தினம் வெட்டப் படும் நிலக்கரியையும், அவை வெட்ட உபயோகப்படுத்தப் படும் இயந்திரங்களையும், பயன்படுத்தப் படும் மனித வளங்களையும், கொண்டு செல்ல உபயோகப் படுத்தப் படும் பிரம்மாண்ட வாகனங்களையும், அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உலைகளையும் பார்த்தால் சத்தியமாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்.. மொத்தமாக உற்பத்தி செய்வதால் இந்த விலைக்குக் கொடுப்பதில் அரசுக்கு லாபம் உள்ளது. மூலப் பொருட்கள் தீரத் தீர அரசு என்ன செய்யும்..?வேற என்ன அந்தச் சுமை நம்ம மேல தான்..இப்போதே இரண்டு மூன்று மணி நேர மிந்தடையச் சமாளிக்க தனியார்க் கம்பெனிகள் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.இது திரும்பப் பெற முடியாத செல்வம்... அதனால் நாளைக்கும் இதே செலவில் இது நமக்குக் கிடைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

மேலும் அந்த ஐநூறு ருபாய் மின்சாரம் காற்றில் வந்து நமது வீட்டில் விழவில்லை.. அதற்குக் கம்பம் நட வேண்டும், கம்பி இழுக்க வேண்டும், அளவிட்டுக் கருவி பொறுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும், இன்னும் நிறைய இருக்கின்றன.. ஓடி ஆடிப் பணம் சம்பாதிக்கிறோம்.எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரத்திற்குச் செலுத்தத் தயாராகி இருப்போம்.. ஆனால் தருவதற்கு மின்சாரம் தான் இருக்காது. ஆக இதற்கு முன் சோலார் கருவிக்கு இன்று செய்யும் ஓரிரு லட்சம் ஒன்றும் பெரிய செலவில்லை.இன்னும் என்னால் புள்ளிக் கணக்காக பதில் சொல்ல முடியும்.. ஆனால் ஒரே ஒரு கோரிக்கை..நம் தாய்க்காக இதைச் செய்வோமே..பதிவு நீளமாகிக் கொண்டே போகிறது.. மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஒரே பதிவில் முடித்துக் கொள்ள முயல்கிறேன்.

கேள்வி: இவ்வளவு நல்லது என்றால் அரசே இதைச் செய்யலாமே.. மானிய விலைக்கு கொடுக்கலாமே ..?

பதில்: அரசு இதைச் செய்யத் தொடங்கி விட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சோலார் தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுகளும் தொடங்கி விட்டன. பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சூரிய ஒளியில் இயங்கும் உபகரணங்களை உபயோகித்தல் கட்டாயமாக்கப் பட்டு வருகின்றன. ஆனால் என்னுடைய பயம் என்னவென்றால் தனியார்த் துறைப் பண முதலைகள் மற்றும் அரசாங்க லஞ்சப் பெருச்சாளிகள் இந்த வகை மின் உற்பத்தியை வருங்காலத்தில் லாபம் தரும் தொழிலாகவே பார்க்கின்றனர்.(சன் குழுமம் விரைவில் இந்தத் துறையில் குதித்தாலும் குதிக்கலாம்..). இது ஆபத்து. உதாரணத்திற்கு வாகனம் தயாரிக்க அரசு மானியம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்(மக்களுக்குப் பயன் தர வேண்டி).. தயாரிக்கப் படும் வாகனம் சைக்கிளாக இருக்கும் பட்சத்தில் அது சரி.. ஆனால் அதுவே காராக இருந்து விட்டால்..? அதன் தயாரிப்பு செலவுக்கான ஞாயமான காசை நாம் கொடுக்க வேண்டுமே.ஆக அந்த உதவி மேல் தட்டு மக்களுக்குத் திருப்பி விடப்பட்டு விடும் வாய்ப்பு உள்ளது. அது தான் எனது கவலை. தனியார்த்துறை இதில் காட்டும் முனைப்பைப் பார்க்கையில் எனக்கு அவர்களின் பொது நல நோக்கு தெரியவில்லை.. அவர்களின் லாப நோக்கே தெரிகிறது. அவர்கள் அதனை ஒரு காரைப் போல உருவாக்கி அழகு படுத்தி லேபில் குத்திக் காசு பார்க்க நினைக்கின்றனர். மூலப் பொருட்களின் விலை உயர்வும் விற்கப் படும் பொருட்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். 2012ல் மட்டும் பல நூறு மில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் தொழிலாக சோலார் மின் உற்பத்தி இருக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது..

அதனால் அரசு தரும் என்று எதிர்பாராமல், இன்றே ஒரு சோலார் தகடு,ஒரு பேட்டரி மற்றும் மின் மாற்றித் தரும் சாதனங்கள் ஆகியவற்றை அழகாகப் பொருத்தி அமைதியாக இருக்கலாம்..

கேள்வி: இன்னும் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்காவது பெட்ரோல் வகை எரிபொருட்கள் கிடைக்குமாமே...?

பதில்: அதற்காக நமது தலைமுறைக்கு மட்டும் ஜாலியாக வாழ்ந்து அனுபவித்து விட்டுப் போகலாம் என்று நினைக்கலாமா..? அப்படி நினைக்கவில்லை என்று சொல்லும் மக்களுக்கு : ஒரு இடத்திற்குச் செலவதற்கு அதிக பட்ச சொகுசாக ஒரு காரில் செல்லலாம். அது லிட்டருக்கு பனிரண்டு கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.. ஆனாலும் ஐந்து கிலோமீட்டர் மைலேஜ் தரும் பென்ஸ் சொகுசுக் காரில் தான் செல்வேன் என்று பந்தா காட்டித் திரியும் மக்கள் நம்மில் எத்துனை பேர்..? நமக்குக் கிடைக்கும் ஆற்றல்களில்(எனர்ஜி) உபயோகப் படுத்தும் பங்கை விட வீணாக்கும் பங்கு தான் அதிகம் என்பதை நான் புள்ளி விவரத்துடன் சொன்னால் தான் நீங்கள் நம்புவீர்களா..? நாம் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உபயோகப் படுத்த நமக்கு உரிமை உள்ளது(அவ்வாறே உலகம் படைக்கப் பட்டு உள்ளது).. அனால் விரயம் செய்ய எவனுக்கும் இங்கே உரிமை இல்லை.!!

கேள்வி: பணம், பகட்டு, ஆடம்பரம், சொகுசு இவை எல்லாவற்றையும் பெரும் பண முதலைகள் அனுபவிக்க, இது போன்ற நல்ல செயல்களை மட்டும் மக்களிடம் நேரடியாகச் செய்யச் சொல்லித் திணிப்பது ஞாயமா..? எப்படி இருந்தாலும் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லையே..?

பதில்: இந்தக் கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.. ஏனென்றால் இந்தக் கேள்வியை உங்களோடு சேர்ந்து அரசை நோக்கிக் கேட்கும் பிரஜையாகவே நானும் இருக்கிறேன்.. ஆம். எரிபொருளை மிச்சப் படுத்துங்கள் என்கின்ற பிரச்சாரம் மக்களை நோக்கி.., அனால் அவர்கள் போவது வருவது எல்லாத்துக்கும் ஆடம்பரக் கார்கள். அதுவும் சொகுசுக்காக மைலேஜ் குறைவாகத் தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள குளிர்விக்கப் பட்ட கார்கள்..

குடும்ப விழாக்கள், பொதுக் கூட்டங்கள், என்ற ஆடம்பரச் செலவுகளை அவர்கள் செய்து விட்டு எங்கள் வீட்டுக் குழல் விளக்கை ஒன்பது மணிக்கே அணைக்கச் சொல்வது எவ்வித ஞாயம்..?

நீங்கள் விமானத்தில் தேவையில்லாமல் சுற்றுப் பயணம் செய்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் என்னை நடக்கச் சொல்வது என்ன நீதி..?

இன்று கிடைக்கும் பீசாவை மிச்சம் வைக்காமல் தின்று கொழுத்து விட்டு நாளை நான் எனக்காகச் சேமித்து வைத்துள்ள பழைய சோற்றிலும் கைவைப்பாயோ...?

ஆனால் மக்களே இதற்கும் நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது. சாதாரண மக்கள் பார்வையில் ஞாயமான கேள்விகள் இவை. அதற்கும் மேலாக ஒரு சமுதாய நோக்குடன் பார்க்கும் போது, அரசை மறந்து, தனியார் கம்பெனிகளை மறந்து என் கண் முன் தெரிவது இந்த பூமி தான். அவர்கள் சாக்கடை தான், அதற்குள் உழன்று புரண்டு ஞாயம் தேடாமல்(கிடைக்கப் போவது இல்லை), நமக்கு இப்போது சோறும் போடும் நமது பூமித் தாய்க்கு நம்மால் முடிந்த சிறு காயக் களிம்பு, அதனைப் போடலாமே என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடுகிறது.. இதனைச் செய்து நாம் ஒரு முன்னோடியாக இருக்கலாம், நம்மைப் பார்த்து நம் அருகில் உள்ளவர்கள் செய்வார்கள், ஒரு ஊர் செய்யும், பின் இந்த நாடே செய்யும்..

ஆக இதனை முயற்சித்துப் பார்க்க முற்படுவோர் தயவு செய்து உடனே செய்யுங்கள். பணம் இல்லாதோர், இந்த எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்து இருங்கள், பணம் கிடைக்கும்போது கட்டாயம் செய்யுங்கள். இந்த சக்தி பூமி உள்ளவரை கிடைக்கும் அழியாச் சக்தி, நமது தேவைக்கான ஒரே பதில், மற்ற வகை எரிபொருளை விட பக்க விளைவுகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சக்தி.. அப்புறம் மீதி மக்கள் கையில்.

சரி சொன்னபடி ஒரு பதிவுல முடிக்க முடியல, சூரிய ஒளி மின்சாரத்தை எப்படித் தயாரிக்கலாம், இதிலும் உள்ள குறைபாடுகள்(!?!?) என்னென்ன, அதனை எப்படிக் களையலாம், இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்றவற்றை அடுத்த பாகத்தில் வெளியிடுகிறேன். நான் தெரிந்து கொள்ள விருப்பப்பட்ட பாடம் இது. இப்போது இந்தத் துறையிலே ஆராய்ச்சி செய்யும் பணி எனக்குக் கிடைத்து உள்ளது. எனவே இன்னும் துருவி நல்ல தகவல்களைப் பெறலாம்.. அக்டோபர் மாதம் முழுவதும் ஜெர்மனி செல்ல இருக்கிறேன். பதிவுக்கு வரமுடியுமா என்று பார்க்கிறேன்.. மற்றபடி இந்தப் பதிவில் இருப்பவை என்னுடைய பார்வை. தவறு இருக்கலாம் மாற்றுக் கருத்துகளை நெத்தியடியாக அடிக்க அனைவரையும் வரவேற்கிறேன். நிறைய தெரிந்து கொள்ளலாம்..

பி.கு:இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்க இது உதவும். பொழுதுபோக்குப் பதிவு என்றால் கண்டிப்பாக நான் இதைக் கேட்க மாட்டேன்.

நன்றி..

பிரகாஷ் (எ)சாமக் கோடங்கி

Wednesday, August 18, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்


அன்பு நண்பர்களே..

இன்று இந்த இடுகையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து இதை வெளியிடுகிறேன்..

தருமியின் பக்கத்தில் உள்ள இதை முழுமையாகப் படித்து விட்டேன்..

என் வீடு, என் சுகம், என் குடும்பம் என்று நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் சுயநலப் பேய்களாகிய இந்த நேரத்தில், தன் உயிருக்குப் பாதிப்பு வருமா, தன் குடும்பம் குட்டிகளின் எதிர்காலம் பாதிக்கப் படுமா என்று சிந்திக்காமல், நாடு தனக்கு என்ன செய்துள்ளது என்று யோசிக்காமல், தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து துணிந்து பணியாற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்த உமாசங்கர் அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. உங்களைப் போன்றோர் பலர் நம் தாய் நாட்டுக்குத் தேவை..

சும்மா ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைப் பாத்து விட்டாலே தப்பே செய்யாமல் இருந்தால் கூட தொடை நடுங்கும் நம் சமூகத்தில், உண்மையைத் தெள்ளத் தெளிவாக, மன தைரியத்துடன் எழுதியுள்ள உமாசங்கர் போன்றோர் தான் நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்..

அது இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.. ஆணிவேரை அசைத்துப் பார்க்கின்றனர்.. பிடுங்கவும் முயற்சிக்கின்றனர்.. ஆளுங்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்... எதிர்க்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்.. அதனால் தானோ என்னவோ ஊடங்களில் இந்த செய்தி அதிக அழுத்தத்துடன் வெளிவரவே இல்லை.. ஆம்.. தொலைத்தொடர்பு ஊடங்கள் எல்லாமே அரசியல் கட்சிகளின் கைப்பொம்மைகள் தானே.. ஆதாயத்துடன் இயங்கும் அவைகளிடம் ஞாயத்தை எதிர்பார்ப்பது நம் தவறு..

அதனால், எந்த வித ஆதாயமும் இன்றி, நல்ல விஷயங்களைப் பகிரும் இந்த வலை உலகில் உமஷங்கரின் மேல் எடுக்கப் படும் இந்தக் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க விழைகிறேன்...

வலை உலகம் ஒரு மாபெரும் சக்தி.. நேரடியாக நாம் அரசிடம் கோரிக்கை வைக்காவிட்டாலும், நம்முடைய இந்த ஒற்றுமை அவர்களை இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் என்றே நம்புகிறேன்...

உமாசங்கர் அவர்களுக்கு ஆதரவாக பல பேர் இருக்கின்றனர் என்பதை இதன் மூலம் நாம் ஊடகத்திற்கு உணர்த்துவோம்.. அவர் மீண்டும் பதவியேற்று ஊழல் பேர்வழிகள் அனைவரையும் தோலுரிக்க வேண்டும் என்பதே நல்லுள்ளங்களின் ஆசை..

மேலும் விவரங்கள் அறிய..

http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_18.html
http://pattapatti.blogspot.com/2010/08/blog-post_18.html

ஊர் கூடி தேர் இழுப்போம்... இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் காண்பிக்க நம் ஒற்றுமை இருக்கிறதல்லவா... வாருங்கள்..


பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி

Monday, August 16, 2010

கணக்கு சரியா....?

ஒரு நாள் சனிக்கிழமை ஒரு வேலையாக கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன்... வழியில் மத்தம்பாளையம் அருகே வெள்ளைச்சட்டை அணிந்த போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பணியை (?!?!?!?) செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.. அவர்களது வண்டியை தூரத்தில் பார்த்தவுடனேயே பல கில்லாடிகள் வண்டியைத் திருப்பிக் கொள்ளுவது வழக்கம். அதனை உணர்ந்ததாலோ என்னவோ, காவல் துறை மூளையைக் கசக்கி யோசித்து வண்டியை மறைவாக நிருத்தியிருந்தினர். அதுவும் அது ஒரு வளைந்த பாதை என்பதால், ஒரு முப்பதடி நெருங்கும்வரை அவர்கள் நிற்பதே தெரியாது(மாஸ்டர் பிளான்..!!!)

என் வண்டியைப் பார்த்து ஒரு பெண் போலீஸ், லட்டியை ஆட்டி ஓரமாக நிறுத்துமாறு சைகை காட்டியபடியே அடுத்த வண்டியை எதிர்பார்க்கலானார்.. ஒரு வண்டியையும் விட்டு விடக் கூடாது.. கடமையில் கொஞ்சம் கூட தவறாதவர்கள் அல்லவா..?

வண்டியை ஓரமாக ஒதுக்கிய இடத்தில் ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. பக்கத்தில் ஒரு ரோந்து வாகனத்தின் உள்ளில் விறைப்பாக ஒருவர் அமர்ந்து இருந்தார்.(கண்டிப்பாக பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும்..)

ஹெல்மேட்டைக் கழட்டியவாறே என்னுடைய அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன். வழியே செல்லும் நான்கு சக்கரவாகனங்களின் பின்னால் மறைந்து கொண்டே சில பேர் போலீசுக்கே தண்ணி காமித்துத் தப்பித்துப் போய்க் கொண்டு இருந்தனர்.. ஆனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க போலீஸ் முற்படவில்லை.. (ஒருவேளை வியாபாரம் கெட்டு விடும் என்ற எண்ணமோ..?)

என்னுடைய ஆவணங்களை அந்தப் போலீஸ் சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது, தலையில் கைக்குட்டை அணிந்த ஒரு பையன், ரோந்து வாகனத்தின் உள்ளிலிருந்த அந்த உயர் அதிகாரியிடம் ஏதோ கெஞ்சிக்கொண்டு இருந்தான்.. விளங்கி விட்டது.. எப்படியும் நல்ல காசு பார்த்து விடுவார்கள். கிடைக்கும் காசை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயத்திலும் கீழ்மட்டத் தொழிலாளர்கள் கண்டிப்பாக ஏமாற்றப் படுகிறார்கள். வெயிலில் நின்று கைகாட்டும் அந்தப் பெண் போலீசுக்கும், பரிசோதனை செய்யும் அந்த இன்னொரு போலீசுக்கும் கிடைக்கும் பங்கு மிகக் குறைவாகத் தான் இருக்கும், மற்றும் அந்த ரோந்து வாகன ஆசாமி தான் அதிக பட்ச பங்கை அனுபவிப்பார் என்பது எனது கற்பனை.. சரியா...?

என்னிடம் ஒன்றும் கறக்க முடியாது என்ற சோகத்துடன் என்னை விட்டு விட்டனர்.. ஒரு மணி நேர வேலைக்குப் பின் திரும்பி வந்து கொண்டிருந்தேன். திரும்பி அதே இடத்துக்கு வரும்போது, ஒரு பையன் வழியில் போகின்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான்.. அருகில் நெருங்கியபோது தெரிந்தது அது அந்த கப்பம் கட்டிய பையன் தான்.. இம்முறை தலையில் கைக்குட்டை இல்லை. வழியில் போக்குவரத்துக் காவலாளிகள் நிற்பதாகவும், போதிய ஆவணங்கள் இல்லை என்றால் திரும்பிச் சென்று விடுமாறும், இல்லை என்றால் அருகில் ஒரு குறுக்கு வழி இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருந்தான். அந்தப் பையன் அருகே இன்னும் சில இளைஞர்கள் திரு திருவென்று விழித்துக் கொண்டு இருக்க அது வழியில் போகும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவனைப் பார்த்தபடியே, கொஞ்ச தூரம் சென்றதும் கவனித்தேன். அவன் சொன்னது சரிதான். அதிகார்கள் இப்போது சாலையின் மறுபுறம் நின்று கொண்டு இருந்தனர்.

என்னை மறுபடியும் நிறுத்தினர். அதே காவலர் தான். நான் தெரிந்தவனைப் போல காட்டிக் கொண்டு புன்சிரிப்புடன் இப்போது தான் நான் இந்த வழியாகச் சென்றேன் என்று சொன்னேன். ஆனால் அவரோ என்னை இதற்கு முன் பாக்காதவர் போல் நடந்து கொண்டார். மறுபடியும் சோதனைகளை முடித்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த சம்பவத்திலிருந்து எனக்குள் கீழ்க்காணும் சிந்தனைகள் தோன்றுகின்றன.

1. போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டி அமர்த்தப் பட்ட இவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் காசு பார்க்கின்றனர். சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இது எச்சரிக்கை இது என்பதால் இது சரியா..?

2. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை எச்சரித்த அந்தப் பையன் செய்தது சரியா...?

3. லஞ்சம் பெறுவதால் இவர்கள்(காவலர்கள்) செய்வது தவறா...?

4. லஞ்சம் கொடுத்ததால் அந்தப் பையன் செய்தது தவறா...?

போலீசார் செய்தது சரியென்றால் அந்தப் பையன் செய்ததும் சரிதான். போலீசார் செய்தது தவறென்றால் அந்தப் பையன் செய்தது தவறுதான்.

என்ன கணக்கு சரியா....?

கடைசியாக இன்னுமொரு சிந்தனை.. அந்தப் போலீசுகளும் எத்தனையோ கனவுகளோடும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் பணிக்கு வந்திருப்பார்கள் அல்லவா..?

இது போன்று என் அன்றாட வாழ்வில் நான் கடந்து செல்லும் அனைத்து விஷயங்களிலிருந்தும் என் மனது பல விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். அனால் அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது கடினம். இப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று..

நன்றி..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

Saturday, July 31, 2010

சுற்றுலா... பகுதி 1 - நெல்லியம்பதி

சுற்றுலா என்றாலே சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற கனவுப் பிரதேசங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெரும்பங்கு நம் திரைத்துறையினருக்கு உண்டு. ஆனா நமக்கு அவ்வளவு தூரம் போக எல்லாம் வசதிப் படாது. பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் சுற்றுலா என்பதை வெறும் வார்த்தையளவிலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மையைச் சொன்னா இப்ப ஒரு ரெண்டு வருஷ காலமாத்தான் வெளிய சுத்த ஆரம்பிச்சிருக்கேன். சும்மா ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் தான் எங்கேயாவது போவோம்.

அப்போது தான் தெரிய வந்துச்சு நம்ம ஊரைச் சுற்றி எத்தனை நல்ல அருமையான இடங்கள் இருக்குன்னு. இது ஒண்ணும் பெரிய பயணக் கட்டுரை இல்லை. நான் பார்த்த (அனேகமா எல்லாரும் பாத்து இருப்பாங்க..)இடங்களைப் பற்றியும் சில நல்ல அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதன் மூலமா இந்தப் பகுதிக்கு ஏற்கனவே யாராவது போய் இருந்தால் அவங்களுடைய அன்பவங்களையும் எல்லாரும் கேக்கலாம்..

சிறுவயதில் இதுபோன்ற பகுதிகளுக்கு செல்லாததனால் தான் என்னவோ இங்கே எல்லாம் செல்வதற்கு எனக்கு கொள்ளை இஷ்டம். கம்பெனியில் அவுட்டிங் செல்ல உத்தேசிக்கும் போதெல்லாம் இடத்தேர்வுக் குழுவில் நான் ஒட்டிக் கொள்வேன். இதன் மூலம் இரண்டு நன்மைகள். ஒன்று அந்த இடத்தை கூட்டம் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பேருடன் ரசிக்கலாம். இரண்டு அந்த இடத்தை இரு முறை பார்க்கும் போது மற்றவர்களை விட நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.(முதல்ல போகும்போது ஆகும் என்னுடைய செலவு, என்னுடைய கையிலிருந்துதான்..)

ஊட்டி எனக்கு மிக அருகில் இருப்பதால் தானோ என்னவோ அங்கே நான் அதிகம் சென்றதே இல்லை. ஆனால் சுற்றுலா பற்றிய நல்ல பிளாகுகளைப் படித்த பின்னர் தான் அதன் பெருமையை புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பெருவாரியான சுற்றுலாத் தளங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி..

அலுவலக சுற்றுலாவுக்காக நாங்கள் பார்த்த இடங்களில் முக்கியமானது "நெல்லியம்பதி". எங்கள் மாமா வீட்டிலிருந்து வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான்.. அனாலும் இந்தப் பெயர் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எனக்குத் தெரியும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள் என்று தேடியபோது எனக்குச் சிக்கியது இந்தப் பெயர். மற்றபடி அந்தப் பகுதியைப் பற்றி கூகிளில் எனக்குச் சரியான தகவல்க கிடைக்கவில்லை.

கடைசியில் தமிழ் வலைப்பக்கங்களில் தேடியபோது, வண்ணப் படங்களுடன் பலர் அவர்களின் நெல்லியம்பதி அனுபவங்களைப் பகிர்ந்து இருந்தனர்.(தமிழ் வலை நண்பர்களுக்கு நன்றி..). தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு நானும் என் நண்பர் முல்லைவாணன் என்பவரும் சேர்ந்து ஒரே பைக்கில் புறப்பட்டோம்...[படங்களில் கருப்பு பனியனில் இருப்பவர் என் நண்பர் முல்லை.. நீல நிற உடையில் நான்]

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அன்று நான் வண்டி ஒட்டிய மொத்த தூரம் முன்னூறு கிலோ மீட்டர் (மேட்டுப்பாளையம் டு நெல்லியம்பதி போக வர).நான் அறுபத்தைந்து கிலோ, என் நண்பர் குறைந்த பட்சம் எழுபத்தைந்து கிலோ இருப்பார். அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாததினால் நானே மொத்த தூரத்தையும் ஓட்டினேன். வண்டி என்ன தெரியுமா..? ஸ்டார் சிட்டி 100CC.(?!?!)

[ஊட்டி சென்றிருந்த போது என் வண்டி இரண்டு பேரை மலை மேல் இழுக்காது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தனர்.. நெல்லியம்பதி மலை ஏறிவிட்டு வந்து எல்லோரிடமும் காலரைத் தூக்கி விட்டுக் காட்டியது ஒரு இனிய அனுபவம்]

மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு போகும் வழியில் துடியலூரில் முல்லைவாணனைக் கூட்டிக் கொண்டு எட்டு மணிக்குள் ஆத்துப் பாலத்தைக் கடந்து விட வேண்டும் என்பது தான் திட்டம். அனால் சாப்பாடு முடிந்து சாவகாசமாக வாளையார் பகுதியைக் கடக்கும் போது மணி ஒன்பது. கேரளாவிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை காற்றும் காட்சிகளும் கண் கூடாக உணர்த்தின. முதலில் எங்களை வரவேற்றவர் ஏர்டெல் என்ற நண்பர். பாலக்காட்டிலிருந்து கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நெம்மாரா செல்லும் சாலைக்குள் புகுந்தோம். வண்டி ஓட்டும் களைப்பே தெரியாதவாறு இயற்கைக் காட்சிகள், இரண்டு புறங்களிலும் நெல் வயல்கள், வளைந்து வளைந்து செல்லும் நேர்த்தியான சாலைகள் என கண்களுக்கு ஒரே விருந்து தான்.

சத்தியமாகச் சொல்கிறேன்.. ஒரு சில விஷயங்களில் பைக்கு தான் பெஸ்ட்டு.!!! மத்ததெல்லாம் வேஸ்டு.!!!

குறைந்தது ஒரு பத்து இடங்களிலாவது நிறுத்தி விலாசம் விசாரித்திருப்போம்.நெம்மாரா அருகே ஒரு கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று நிறுத்தினோம். கடையில் பெப்சி, கோக்,மிரிண்டா,பாண்டா எதுவும் இல்லை. வெகு தூரம் சாயாக் கடையைத் தேடி அலுத்து விட்டதனால் எது கிடைத்தாலும் குடிக்கலாம் என்ற முடிவில் தான் அங்கு நிறுத்தினோம். என்ன அதிசயம்.!!?! கோல்டுஸ்பாட், காளிமார்க் போன்ற பிராண்டு குளிர்பான பாட்டில்கள் அங்கே இருந்தன.!!


இவை எல்லாம் என்னுடைய பள்ளிக் காலங்களோடு வழக்கொழிந்து விட்டன என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் புரிந்தது உள்ளே இருந்த பானம் உள்ளூர்த்தயாரிப்பு என்பது. நண்பர் வேக வேகமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டார். சீரகத் தண்ணீர் தான்.. உடம்புக்கு நல்லது என்றார். எனக்கு என்னவோ அதில் சீரகத்தோடு கள் வாடை கொஞ்சம் வீசுவது போல் ஒரு சந்தேகம். கேட்டேன்.. இல்லை என்றார்கள்..இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்து விட்டேன்.

முதலில் எங்களை வரவேற்றது போத்தூண்டி டேம்(படம் 2 மற்றும் 3).. ஆள் அரவமே இல்லாத ஒரு டேம். தண்ணீர் பச்சை கலந்த நீல நிறத்துடன் அழகாகக் காட்சி அளித்தது. சிறு பூங்கா அமைத்திருந்தனர். உக்கார்ந்து இளைப்பாற நேரம் இல்லாத காரணத்தால் அங்கே விண் முட்டிக் காட்சி அளித்த நெல்லியம்பதி மலை மீது வண்டியை விட்டோம்..

சும்மா சொல்லக் கூடாது.. தண்ணீர்க் குடத்தில் துளை போட்ட மாதிரி அங்கங்கே பொத்துக் கொண்டு ஓடும் சிறு சிறு அருவிகள் நீர்வீழ்ச்சிகள் வழியெங்கும் வரவேற்றன. முதல் அருவியைப் பார்த்தவுடனேயே வண்டியை நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். [சில புகைப்படங்களை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்].அங்கே எங்களைப் போன்றே பைக்கில் வந்தவர்கள் சொன்னார்கள், இங்கே நிறைய நேரம் செலவிடாதீர்கள்.. இன்னும் நிறைய அருவிகள் மேலே செல்லச் செல்ல உள்ளன என்று.உண்மைதான்.

குளுகுளுவென சுத்தமான அருவி நீர் கடவுளின் வரம்.. இந்த மலைகளில் தான் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து உள்ளன என்று வியப்பிற்கு உள்ளானோம்..

பதிவு நீளமாகி விட்டதால் நெல்லியம்பதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

==============================
வீட்டில் நகைச்சுவை:
"அம்மா சோறு... அம்மா சோறு..!!" என்று சொல்லிக் கொண்டே கம்ப்யுட்டரைத் தட்டிக் கொண்டு இருந்தேன். அதைக் கவனிக்காததால் என் அம்மா தட்டில் சொறோடு வந்து அருகில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். டிவியில் "என் தாய் எனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.." ராஜ்கிரண் பாடல் பாடிக் கொண்டு இருந்தது. "அம்மா சோறு கேட்டேனே எங்கே...?" என்று நான் சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்க்க என் அம்மா வாய் நிறைய சொற்றோடு திருதிருவென விழித்தார்... "தன் வயிறைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே.." என்ற வரிகள் சரியாக ஒலிக்க வீட்டில் ஒரே சிரிப்பு..
==============================

Sunday, July 18, 2010

இப்படியும் யோசிக்கலாமே...

வணக்கம் நண்பர்களே..

எனக்கே தெரியுது ஒரே மாதிரி பதிவுகள் எழுதினா செம போர் அடிக்குமுன்னு.. ஆனா என்னத்த செய்ய.. ஒரு சில விஷயங்கள் மனதில் தோன்றுகின்றன.. ஒரு சில எண்ணங்கள் கை நுனி வரை வந்து விடுகின்றன.. ஆனால் ஒரு சில விஷயங்களே என்னை எழுத வைக்கின்றன.. அதனால மன்னிச்சுக்குங்க மக்களே.. இதுவும் அதே ராகம் தான்..

நான் படித்ததில் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்த விஷயம். எழுதத் தூண்டிய விஷயம். டாக்டர் ஆர் ஏ மஷேல்கர் என்பவர் கூறியது. அதில் உள்ள விஷயங்களைப் படித்த பிறகு தான் தெரிந்தது மாமனிதர்கள் எல்லோரும் வருங்காலத்தை யூகிப்பதில்லை.. அவர்கள் தான் வருங்காலத்தை வகுக்கிறார்கள்.. உங்களில் பல பேர் அந்த pdf ஐப் படித்திருக்கலாம்.. "காந்தியன் இன்ஜினியரிங்"


அது என்ன..? காந்திக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்பந்தம்...? அந்தக் கொள்கை என்னவென்றால் "குறைந்த பட்ச உள்ளீடுகளின் மூலம் அதிக பட்ச பலன்களைப் பெற்று அதன் மூலம் அந்தப் பலனைப் பலபல பேர்களுக்குச் சென்றையச் செய்வது."

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்..தூக்கம் போக, துக்கம் போக, குழந்தைப் பருவம் போக, தள்ளாத வயது போக, ஒரு மனிதன் வாழ்வது அதிக பட்சம் இருபது வருடங்கள் இருக்கலாம்.. பூமி கொடுத்திருக்கும் அனைத்து வரங்களையும் அனுபவிக்கும் உரிமை அதில் அனைவருக்கும் உண்டு அல்லவா..? செவ்வாய் கிரகம் போய் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் வளர்ந்து விட்டான். அனால் அந்தத் தொழில்நுட்பத்தால் இன்று பசியால் வாடும் ஏழைக்கு என்ன பயன்..? அதனால் பயன்கள் இல்லாமல் இல்லை. அனால் நாட்டிற்கு இப்போதைக்கு தேவை அனைவருக்கும் பயன்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே..

காந்தி எளிமை வாழ்வு வாழச் சொன்னார்.. அதன் உள்ளர்த்தம் அனைத்தையும் தியாகம் செய்வதல்ல.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதே போல புதிய கண்டுபிடிப்புகளும் தொழில் நுட்பங்களும் அனைவருக்கும் பலனளிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். கைப்பேசி கண்டுபிடிக்கப் பட்ட பொது, அதை ஒரு சில செல்வந்தர்களால் மட்டுமே வாங்கி உபயோகிக்க முடிந்தது. அதன் மூலப் பொருட்களின் உண்மை விலை கைப்பேசியின் விலையை விடக் குறைவே.அனால் அந்தத் தொழில்நுட்பத்திற்கு தான் அந்த விலை."ஒரு தொலைபேசி அழைப்பானது ஒரு தபால் அட்டையின் கட்டணத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.." என்று திருபாய் அம்பானி சொன்னபோது அனைவரும் சிரித்தனர்.. அனால் இப்போதைய நிலைமையை கொஞ்சம் யோசியுங்கள்.. ஒரு சிறு பொறி எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது.. இன்று மூன்று வேலை அடுப்பு எரியாதவர் வீட்டிலும் கூட குறைந்த பட்சம் மூன்று கைப்பேசிகள் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விலைக் குறைப்பின் மூலம் இதனைத் தயாரித்தவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.. மாறாக பெரும் லாபமே. ஏனென்றால் உற்பத்தி அதிகரித்துள்ளதல்லவா...?

ஒரு காலத்தில் ஒரு அறையையே அடைத்தது போல் இருந்த கணினி இன்று நம் மடியில் உக்கார்ந்து கொள்ளும் அளவுக்கு சுருங்கி விட்டது ஆனால் அதனை விட பல மடங்கு வேகத்துடன்.. ஆனால் இதனால் பலன் அவ்வளவு இல்லை. நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால், ஐம்பதினாயிரம் மதிப்புள்ள கணினியை அதன் செயல்திறன் மாறாமல் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியுமா என்பது தான். ஏனெனில் அப்போதுதான் அது மேலும் பல லட்சம் பேரைச் சென்றடையும்.இது தான் காந்தியன் இன்ஜினியரிங்.


ரத்தன் டாடாவின் நானோவும் இந்த எண்ணத்தில் உதித்தது தான். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த விதி ஒத்து வராது. பூமி கொடுத்ததில் நமது வாழ்க்கைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அடுத்தவருக்கு வழி விடுவதே இதன் சாராம்சம். குறைவான விலையில் காரை வாங்குவதன் மூலம் நமது குறைந்த பட்ச கார் தேவையும் நிறைவடைகிறது. "இலவச சோலார் பேனலை கலைஞர் வழங்கினால்" என்று ஒரு பதிவு நான் எழுதி இருந்தேன். அது இப்போது ஞாபகம் வருகிறது.

சோலார் பேனல் இப்போது விலை ரொம்ப அதிகமே. அதையே குறைந்த விலையில் ஒருவர் தயாரிப்பாரானால், அது அனைவரும் வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். (ஒரு டிவியையே இலவசமாக வழங்குபவருக்கு இது சாத்தியமில்லையா என்ன...?)இதனால் அரசாங்கத்தின் மின்சார உற்பத்திப் பளுவும் குறையும்.மின்சாரத் தேவையில் நாமும் தன் நிறைவைப் பெற்று விடலாம்.

எனவே ஒரு தொழில்நுட்பமானது ஏழைகளுக்கும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.அனால் விலைக் குறைப்பினால் தரத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. தரம் தான் எப்போது தாரக மந்திரம். இரண்டு லட்சம் மதிப்புள்ள செயற்கைக் கால்கள் ஏழைக்கு எட்டாக் கனவே. எனவே விஞ்ஞானிகளே...அதே கால்களை இரண்டாயிரத்துக்கு தயாரிக்க முயற்சியுங்கள். ஒவ்வொரு ஏழைக்கும் அது பயன் தரும். ஒரு பொருளின் மதிப்பு, மனிதன் நிர்ணயித்ததே. தங்கம் என்பது மனிதனுக்கு மட்டுமே தங்கம். விலங்குகளுக்கு அது ஒரு கல்லைப் போன்ற பொருளே. மனிதனின் ஆசையால் இப்போது தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனி. அந்த நிலை இனி நீடிக்கக் கூடாது.

அரசு நினைத்தால் எந்த ஒரு பொருளையும் குறைந்த விலைக்குக் கொண்டு வர முடியும்.இதனால் பலன் அத்துனை கோடி மக்களுக்கும் சென்றடையும்.(அது தான் அரசின் கடமையும் கூட).

இளம் பொறியாளர் ஆஷிஷ் கவ்டே(Ashish Gawde)சொல்கிறார்.பன்னாட்டு நிறுவனங்களில் பணம் சம்பாதித்தது போதும். ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று. அவரது குறிக்கோள் இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களின் உள்ளிலும் வெளிச்சம் கொண்டு வர வேண்டுமென்று. அல்ட்ரா கபாசிடர் ஒன்றை மிதிவண்டியில் இணைத்து அதன் மூலம் எல்ஈடி விளக்கை எரியவைக்கும் சாதனத்தை அவர் தயாரித்துள்ளார். நான்கு நிமிடம் மிதிவண்டிச் சக்கரத்தைச் சுற்ற வைப்பதன் மூலம் நான்கு மணி நேரம் வெளிச்சம் பெற முடியும். என்ன ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. ஆனால் அல்ட்ரா கபாசிடர் விலை ரொம்ப அதிகம். அரசு முன்வந்து இது போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அதன் மூலம் இந்தியாவின் முதுகெலும்பை நிமிர்த்த வேண்டும். இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற விஞ்ஞானிகள் வளர்க்கப் பட வேண்டும்.

எனவே எதிர்கால இளைஞர்கள் விஞ்ஞானிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் தொழில்நுட்பங்களைப் படைக்க வேண்டும்.ஏனென்றால் பூமி கொடுத்த கொடை அனைவருக்கும் சொந்தம்..

அடுத்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன்.

நன்றி..